Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Wednesday, January 18, 2017

தசா புத்திகள் அல்லது கால முறைக் கணிதம் - 5



தசா - புத்தி - அந்தரம் - சூட்சமம் - பிராண அந்திரம் -  தேக அந்திரம்


தசாக் காலம் என்பது, மேலும் நுணுக்கமாக, தசா – புத்தி – அந்தரம் – சூட்சமம் என அமைக்கப்பட்டுள்ளது.


அதன்படி –

புத்தி என்பது –

ஒரு குறிப்பிட்ட கோளின் தசாக் காலத்தை, ஒன்பது கோளிற்கும் பகிர்ந்து அளிப்பதாகும். எடுத்துக் காட்டாக, இராகுவின் தசாக் காலம் 18 ஆண்டுகள் என்பதனை, மற்ற கோள்களுக்கு உரிய தசாக் கால ஆண்டுகளின் விகிதாச்சாரத்தில், ஒன்பது கோளிற்கும் பகிர்ந்து அளிப்பதாகும். இங்கு கணித முறையை மட்டுமே விளக்க முற்படுகிறேன். எடுத்துக்காட்டாக, இராகு தசை – சூரிய புத்தி என்றால், 18 x 6/120 எனும் கணக்கீடு செய்ய வேண்டும். வரும் விடையானது 0.9 ஆண்டுகள் என்பதாகும். அதாவது 10 மாதங்கள் 24 நாட்கள் என வரும். [இதனை இன்னும் துள்ளியமாகக் கணக்கிட சூத்திரங்கள் இருக்கின்றன என்றாலும் அடிப்படைக் கணிதம் இதுதான்].

அந்தரம் என்பது –

ஒரு குறிப்பிட்ட கோளின் புத்திக் காலத்தை, ஒன்பது கோளிற்கும் பகிர்ந்து அளிப்பதாகும். எடுத்துக் காட்டாக, இராகு தசையில் – சூரிய புத்தியின் கால அளவான 10 மாதங்கள் 24 நாட்கள் என்பதை, ஒன்பது கோள்களுக்கும், தசாக் கால விகிதாச்சார அடிப்படையில் பகிர்ந்தளிப்பதாகும். எடுத்துக் காட்டாக, சுக்கிர அந்திரம் எனக் கொள்வோம். கணிதமானது, 10மாதங்கள் 24 நாட்கள் x 20/120. விடையானது – 54 நாட்கள் என வரும் (1 மாதம் 24 நாட்கள்).

சூட்சமம் என்பது –

ஒரு குறிப்பிட்ட கோளின் அந்தரக் காலத்தை, ஒன்பது கோளிற்கும் பகிர்ந்து அளிப்பதாகும். எடுத்துக் காட்டாக, இராகு தசையில் – சூரிய புத்தியில் – சுக்கிரன் அந்திரமான  கால அளவு 54 நாட்கள் என்பதை, ஒன்பது கோள்களுக்கும், தசாக் கால விகிதாச்சார அடிப்படையில் பகிர்ந்தளிப்பதாகும். எடுத்துக் காட்டாக, செவ்வாய் சூட்சமம் எனக் கொள்வோம். கணிதமானது, 54 நாட்கள் x 7/120. விடையானது – 3 நாட்கள் 3 மணி 36 நிமிடங்கள் என வரும்.

இதனை இன்னும் நுணுக்கமாக, பிராண அந்திரம், தேக அந்திரம் எனவும் இது போலவே பிரிக்க முடியும் என சோதிட நூல்கள் கூறினாலும், அவை மணி, நிமிடத்திற்கு குறைவாக வருவதால், அதனை பொதுவில் தவிர்த்து விடுகின்றனர்.

ஆக தசாக் காலம் என்பது, தசா-புத்தி-அந்திரம்-சூட்சமம் எனும் உட்பிரிவுகளால், அதே நேரத்தில் அதனை ஒவ்வொரு கோளிற்கு அவற்றிற்கு உரிய தசாக் கால விகிதாச்சாரத்தின் அளவில் பிரித்து அளிக்கப்படுகிறது.

தசாக் கால பலன்கள் உரைப்பதில் பல்வேறு காரணிகளைக் கணக்கில் கொள்ள வேண்டும். அது பற்றி தசா-புத்தி பலன்களை ஆராய்கையில் காணாலாம்.

ஆனால் பொதுவாக, தசா-புத்தி பலன்கள் என்பதில், வலிமை என்பது, ஒரு குறிப்பிட்ட கோளின் தசா-புத்திக் காலத்தில் –

தசா நாதன் எனப்படும் தசாக் கோளினைக் காட்டிலும், புத்திக் கோளிற்கு வலிமை அதிகம் என்றும்;

புத்தி நாதன் எனப்படும் புத்தி கோளினைக் காட்டிலும், அந்திர கோளிற்கு வலிமை அதிகம் என்றும்;

அந்திர நாதன் எனப்படும் அந்திர கோளினைக் காட்டிலும், சூட்சம கோளிற்கு, அதாவது சூட்சம நாதனுக்கு வலிமை அதிகம் என்றும்;

சோதிட நூல்கள் கூறுகின்றன.

சுய தசை, சுய புத்தி, சுய அந்திரம், சுய சூட்சமம் என்பது சிறப்புடையது இல்லை எனவும் சோதிட நூல்கள் கூறுகின்றன.


இது பற்றி பின்னர் உரிய பதிவில் விவரமாகப் பார்க்கலாம்.

தொடரும்.....

Tuesday, January 17, 2017

தசா புத்திகள் அல்லது கால முறைக் கணிதம் - 4


தசா ஆண்டுகள்


நாம் ஏற்கனவே பதிவிட்டபடி, ஒவ்வொரு விண்மீனும் ஒரு கோளிற்கு உரிமை உடையதாக இருக்கிறது. எடுத்துக் காட்டாக, அசுவனி என்பது கேது கோளிற்கும், பரணி என்பது வெள்ளி கோளிற்கும் உரிமை உடையது. அதாவது அந்த குறிப்பிட்ட விண்மீன்களுக்கு குறிப்பிட்ட கோள்கள் அதிபதி என்பதாகும். இதன் அடிப்படையில்தான் நட்சத்திர தசை கணக்கிடப்படுகிறது.

கோள்கள்
அக் கோளுக்கு உரிய விண்மீன்கள்
தசா ஆண்டுகள்
கேது
அசுவனி
மகம்
மூலம்
7
வெள்ளி
பரணி
பூரம்
பூராடம்
20
சூரியன்
கார்த்திகை
உத்திரம்
உத்திராடம்
6
சந்திரன்
ரோகிணி
அஸ்தம்
திருவோணம்
10
செவ்வாய்
மிருகசீரிசம்
சித்திரை
அவிட்டம்
7
இராகு
திருவாதிரை
சுவாதி
சதயம்
18
வியாழன்
புனர்பூசம்
விசாகம்
பூரட்டாதி
16
சனி
பூசம்
அனுசம்
உத்திரட்டாதி
19
புதன்
ஆயில்யம்
கேட்டை
ரேவதி
17

இதன்படி,ஒருவர் பிறப்பு சாதகத்தில், சந்திரன் எந்த விண்மீனின் இருப்புக் காலத்தில் இருக்கிறதோ, அந்த விண்மீனிற்கு உரிய கோளின் தசையே தொடக்க தசையாக இருக்கும். சாதகக் கணக்கின்படி, சந்திரன் அந்த குறிப்பிட்ட நட்சத்திரத்தினை எவ்வளவு தூரம் அல்லது கால அளவில் கடந்துள்ளாரோ அவற்றைக் கழித்து விட்டு, மீதம் உள்ளதை இருப்பு தசை எனக் கணக்கிடுகின்றனர். அதற்குரிய கணிதங்கள் இங்கு தேவையில்லை என்பதால் அதனைத் தவிர்த்து விடுகிறேன்.

பின்னர் அவரது ஆயுள் காலம் முழுமைக்கும், மேல் குறிப்பிட்ட வரிசைப்படி, தசாக் காலமானது கணக்கிடப்படுகிறது.

இந்த விம்சோத்திரி தசையில், இன்னும் விரிவாக, ஒவ்வொரு தசாக் காலத்தினையும், பகுத்து தரப்படுகிறது. அதாவது, ஒரு குறிப்பிட்ட கோளின் தசையானது, பிறக்கோள்களோடும் தொடர்பில் இருக்கிறது.

இதன்படி, எந்த ஒரு தசைக் காலமும் அக்குறிப்பிட்ட கோளின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்காது என்பதாகும். அதாவது ஒரு குறிப்பிட்ட கோளின் தசையில் மற்ற கோள்களுக்கும் பங்கு உண்டு என்பதாகும். பங்கு உண்டு என்பதைக் காட்டிலும், சாதகத்தில் அக் கோள்களின் வலிமையைப் பொருத்து, தசா நாதன் எனப்படும் குறிப்பிட்ட கோளின் வலிமையை விட அதிக வலிமையை பிற கோள்கள் எடுத்துக் கொள்ளும் என்பதே. அதாவது ஒன்றுடன் ஒன்று சார்ந்து இருத்தல் என்பதாகும். ஏறக் குறைய, நமது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு ஒப்பானதாக தசாக் கால கோள்களின் பங்களிப்பு இருக்கிறது. குடியரசுத் தலைவர் – பாராளுமன்றம் – சட்ட மன்றம் – நீதி மன்றம் – மற்ற அரசியல் சட்ட அமைப்புகள் என்பனவற்றில் யாருக்கு அதிகாரம் என்பது சூழ் நிலையைப் பொருத்து தீர்மானிக்கப்படுதல் போல, இங்கு தசாக் காலம் என்பது தீர்மானிக்கப்படுகிறது.

இதன் அடிப்படையில், ஒரு கோளின் தசை என்பது, பிறக் கோள்களின் புத்தியைச் சார்ந்தும், ஒரு கோளின் புத்தி என்பது பிறக் கோள்களின் அந்தரத்தைச் சார்ந்தும், ஒரு கோளின் அந்தரம் என்பது பிறக் கோள்களின் சூட்சமத்தைச் சார்ந்தும் இருக்கிறது.



அதாவது, தசாக் காலம் என்பது, மேலும் நுணுக்கமாக, தசா – புத்தி – அந்தரம் – சூட்சமம் என அமைக்கப்பட்டுள்ளது.


புத்தி.. அந்தரம்... சூட்சமம்....

Saturday, January 7, 2017

தசா புத்திகள் அல்லது கால முறைக் கணிதம் - 3


விம்சோத்திரி தசை எனும் நட்சத்திர தசை

விம்சோத்திரி எனும் வடமொழி சொல்லிற்கு “நூற்றி இருபது” என பொருள். அதாவது தசாக் காலத்தினை 120 ஆண்டுகள் கொண்டதாகக் கணக்கிடும் முறையாகும். இந்த முறையில், இலக்கினம் தவிர்க்கப்பட்டுள்ளது. ஆனால், இராகு-கேது உட்பட ஒன்பது கோள்கள் கணக்கில் கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு கோளிற்கும் ஒரு குறிப்பிட்ட ஆண்டுகள் (fixed - மாறிலி) கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு கோளின் தசை முடிந்த பின்பு அடுத்த தசையானது, அதற்குரிய வரிசைப்படிதான வரும்.

வரிசை என்பது, கேதுவில் ஆரம்பித்து புதனில் முடிவடைகிறது. (சூரியனில் ஆரம்பித்து சுக்கிரனில் முடிவடைகிறது என்பர் – விண்மீன்கள் வரிசைப்படி கேது – புதன் சரியானது). அதாவது, கேது, சுக்கிரன், சூரியன், சந்திரன், செவ்வாய், இராகு, வியாழன், சனி, புதன் என்பதாகும்.

வரிசை முறை என்பது, பூமி மையக் கொள்கைப்படி, புதன், வெள்ளி, சூரியன், சந்திரன், செவ்வாய், வியாழன், சனி வரிசைப்படுத்தப்பட்டு, பின்னர் இவைகளுக்கு இடையே இராகுவையும் கேதுவையும் இணைத்திருக்க வேண்டும். அதாவது புதன்-வெள்ளி இவைகளுக்கு இடையே கேதுவையும், செவ்வாய்-வியாழன் இவைகளுக்கு இடையே இராகுவையும் இணைத்திருக்க வேண்டும். ஆனால் இதற்கான முடிவான விளக்கம் எங்கும் கிடைக்கவில்லை.

இது, விண்மீன்களை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுவதால், முதல் விண்மீனான அசுவினி (கேது) தொடங்கி, ஆயில்யம் (புதன்) வரையிலான முதல் ஒன்பது விண்மீன்களுக்கு உரிய அதிபதிகளான கோள்களின் வரிசைப்படி அமைந்திருக்கிறது.

இவைகளுக்கு உரிய ஆண்டுகள் என்பது கீழ்வருமாறு:

கேது
7
சுக்கிரன்
20
சூரியன்
6
சந்திரன்
10
செவ்வாய்
7
இராகு
18
வியாழன்
16
சனி
19
புதன்
17
மொத்தம்
120

ஆக, தசாக் கால அளவு என்பது மொத்தம் 120 ஆண்டுகள். இந்த 120 ஆண்டுகள் என்பது, வராக மிகிரரின் ஆயுர்தயக் கால அளவான, அதாவது அதிகபட்ச அளவான 120 ஆண்டுகள் 5 நாட்கள் என்பதனையே ஒத்து வருகிறது. அதாவது, 5 நாட்கள் என்பது மீச்சிறு நிலையில் விடுவிக்கப்பட்டிருக்கலாம். எனவே, பராசரர் அல்லது அவருக்கு முந்தைய சோதிட அறிஞர்கள், வராக மிகிரரின் ஆயுர்தய முறையின் அடிப்படையில், கோள்களுக்கான மொத்த தசாக் கால அளவினைத் தீர்மானித்திருக்கலாம். இதுபற்றியதொரு விரிவான கணிதம் செய்து கொண்டிருக்கிறேன். விடைகண்ட பிறகு இதனை உறுதி செய்கிறேன்.


இது மொத்தம் 120 ஆண்டுகளைக் கொண்டது என்பதால் விம்சோத்திரி தசை என அழைக்கப்பட்டாலும், நட்சத்திர தசை என்பதே மிகப் பொருந்தும். ஏனெனில் இது சோதிடத்தில் பயன்படுத்தப்படும் 27 விண்மீன்களை அடிப்படையாகக் கொண்டே கணக்கிடப்படுகிறது.


தொடரும்…

Friday, January 6, 2017

தசாபுத்திகள் அல்லது கால முறைக் கணிதம்-2



வராக மிகிரரின் முறை


இவரது கணக்கீட்டின்படி, தசா புத்தியானது எட்டு தசா பிரிவுகளையே கொண்டிருக்கிறது. அதாவது, இலக்கினம் மற்றும் சூரியன் முதல் சனி வரை உள்ள ஏழு கோள்களின் தசைகள் மட்டுமே. இதில் இராகு-கேது தசைகளுக்கு இடமில்லை. நாம் முன்பே பதிவு செய்தபடி, வராக மிகிரரின் காலத்தில் சாதகக் கணிதங்களில் இராகு-கேதுக்களின் பங்களிப்பு என்பது இல்லை. எனவே அவற்றை நீக்கிவிட்டே கணிதம் செய்கிறார்.


இந்தக் கணித முறைப்படி, இலக்கினம், சூரியன், சந்திரன் இவற்றில் எது வலிமையானதோ அதன் திசையே முதலில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. பிறகு மேற்கூறிய மூன்றில் வலிமை உள்ளதற்கு (இலக்கினம், சூரியன், சந்திரன்) கேந்திரத்தில் உள்ள கோள்களின் திசை கணக்கில் கொள்ளப்படுகிறது. அதன்பிறகு பணபரத்தில் உள்ள கோள்களின் திசை கணக்கில் கொள்ளப்படுகிறது. அடுத்து ஆபோக்லிமத்தில் உள்ள கோள்களின் திசை கணக்கில் கொள்ளப்படுகிறது. அதன்பிறகு, இவைகள் தவிர்த்து பிற இடங்களில் உள்ள கோள்களின் திசை கணக்கில் கொள்ளப்படுகிறது. கோள்களுக்கான தசாக் காலத்தினைப் பொருத்தவரையில், ஆயுர்தய முறையில் கோள்களுக்கான ஆண்டுகள் எவ்வளவோ, அந்தக் கால அளவுதான் கணக்கில் கொள்ளப்படுகிறது. அது அனைத்து சாதகத்திற்கும் ஒரே அளவாக இருப்பதில்லை. எடுத்துக் காட்டாக, சூரியனின் தசையானது அதன் வலிமையைப் பொறுத்து ஒவ்வொரு சாதகத்திற்கும் மாறுபடுகிறது. அதிகபட்சமாக தசாக் காலத்தின் மொத்த கால அளவு 120 ஆண்டுகள் 5 நாட்கள் என்பதாகும். தசா கணக்கீடுகள் எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பது குறித்து கணக்கீட்டு முறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.


எனவே, இந்த முறையிலான கணிதம் செய்வதற்கு, நுட்பமான கணிதம் அறிவும், சோதிட நுணுக்கங்களும் தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது. கணிதம் தவறானால், கணிப்பும் பெருமளவு பிழையாவதற்கான வாய்ப்புகள் நிறைய ஏற்படுகிறது. ஏனெனில் எது வலிமையான கோள் என்பதைத் தீர்மானிக்கவே, மிக நுண்ணிய சோதிட அறிவு தேவைப்படுகிறது. ஆகவே, கடினத்தை மனதில் கொண்டு, இந்த முறையினை காலப்போக்கில் சோதிடர்கள் தவிர்த்து விட்டிருக்கலாம். அது மட்டுமின்றி, வராக மிகிரரின் காலத்திற்கு பிறகு சோதிட கணக்கில் ஏற்றுக் கொள்ளப்பட்ட இராகு-கேதுவையும் தசாக் காலத்தில் உட்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதால், ஒரு புதிய முறைக் கணிதம் உருவாகத் தொடங்கி இருக்க வேண்டும். அதுதான், விம்சோத்திரி தசை எனும் நட்சத்திர தசையாகும்.


முன்பே கூறியவாறு, தற்போது நடைமுறையில் இருப்பது, விம்சோத்திரி தசை எனும் நட்சத்திர தசை. எனவே, இதனையே நமது ஆய்விற்கு எடுத்துக் கொள்வோம்.


வராக மிகிரருக்குப் பிறகு, சோதிடத்தில் பல்வேறு சோதிட அறிஞர்கள் பல்வேறு சோதிட நூல்களை எழுதியிருந்தாலும், மாமுனிவர் பராசரரின் பராசர ஹோர சாஸ்திரம் எனும் நூல் பிருகத் சாதகம் போலவே சிறப்பு பெற்றது. இன்றும் பலராலும் எடுத்தாளப்படும் சோதிட பொருளகராதியாகவே இருக்கிறது. பராசரர், தமது நூலில் தசா புத்தி கால அளவைக் குறிப்பிடும்போது, வழக்கத்தில் உள்ள பல்வேறு முறைகளைக் குறிப்பிட்டாலும், அவற்றில் நடைமுறைக் கணிப்பில் பெரிது பொருந்தி வருவது “விம்சோத்திரி தசை” என குறிப்பிடுகிறார்.



அடுத்து ….விம்சோத்திரி தசை – ஒரு விளக்கம் ….

Thursday, January 5, 2017

தசா புத்திகள் அல்லது கால முறைக் கணிதம் -1






தசாபுத்திகள் அல்லது கால முறைக் கணிதம்


சோதிட ஆய்வில் நாம் அடுத்து எடுத்துக் கொள்ள இருப்பது – தசாபுத்திகள் எனும் கணிதம்.

பொதுவாக, சோதிடத்தினை மூன்று உட்கூறுகளில் பிரிக்கலாம். (1) அடிப்படை அமைப்பு (2) கால நிகழ்வுகள் (3) கோள்களின் நகர்வால் ஏற்படும் சூழல்கள்.

இதில் அடிப்படை அமைப்பு என்பது – பிறப்பு சாதகம். ஒருவரின் வாழ்க்கைக் கட்டமைப்பினை இந்த அடிப்படை சாதக அமைப்புதான் அறிய உதவுகிறது. நல்ல நிலையில் உள்ளவன் ஆண்டியாவதும், ஆண்டி நிலையில் உள்ளவன் அரசனாவதும் அவரது சாதகக் கட்டமைப்பின் மூலமே, அதாவது பிறப்பு நிலை சாதகத்தின் மூலமே அறிய முடியும். அதே வேளையில், அரச யோகம் இருப்பவன், எந்த காலக் கட்டத்தில் அரசனாக வாய்ப்பு இருக்கும் என்பதை, கால நிகழ்வு பிரிவுக் கணக்கின் அடிப்படையில் கணிக்க வாய்ப்புள்ளது. அது மிகச் சரியாக அந்தக் கால நிகழ்வு காலத்தில் எப்போது நிகழும் என்பதை கணிப்பதற்கு கோள்களின் நகர்வுக் கணிதம் பயன்படுகிறது.

பொதுவாக, கால நிகழ்வுக் கணிதத்தினை, தசா-புத்திக் கணிதம் என்று சோதிட அறிஞர்கள் கூறுகின்றனர்.

இந்த தசா-புத்திக் கணக்கீடு என்பது பல்வேறு வகையான கணக்கீடுகளைக் கொண்டிருக்கின்றது. மொத்தம் 42 வகையான தசா-புத்தி முறைகள் இருப்பதாக முதுகலை-சோதிட அறிவியல் பாடத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. திரு பராசரர் அவர்களும் பல்வேறு தசா-புத்திகள் இருப்பதாகக் கூறுகிறார். பராசரருக்கு காலத்தால் முந்தியவரான வராக மிகிரர் தமது பிருகத் சாதகத்தில் ஒரு குறிப்பிட்ட தசா முறையினை விளக்குகிறார்.

பல்வேறு காலமுறைக் கணிதம் அல்லது தசாபுத்திக்காலக் கணிதம் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டாலும், தற்போது நடைமுறையில் ஒரு சில நடைமுறைக் கணிதங்களே இருக்கின்றன.

தற்போது பொதுவாக நடைமுறையில் இருப்பதில் சில தசைகள் –

1.   விம்சோத்திரி அல்லது நட்சத்திர தசை
2.   மூல தசை
3.   இராசி தசை
4.   காலச் சக்கர தசை
5.   அஷ்டோத்திரி தசை
6.   யோகினி தசை


இவற்றில் விம்சோத்திரி தசை பரவலாகவும், மற்ற தசைகள் வட இந்திய சோதிடக் கணிதத்தில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

விம்சோத்திரி அல்லது நட்சத்திர தசை என்பது பொதுவில், தென்னிந்திய முறையில், குறிப்பாக தமிழக மக்களின் பயன்பாட்டில் இருக்கிறது.

மாமுனி பராசரர் அவர்களின் கூற்றுப்படி, விம்சோத்திரி தசையே நடைமுறையில் ஒத்து வருகிறது என நமது தென்னிந்திய சோதிடர்கள் கூறுகின்றனர்.

ஆனால், வராக மிகிரரின் பிருகத் சாதகத்தில் வரும் தசா-புத்திகள் மேற்சொன்னவைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கிறது. அதே வேளையில், அதன் கணித அமைப்பானது, மிகச் சிறப்பாக இருக்கிறது. தர்க்க முறையிலும் ஏற்புடையதாக இருக்கிறது. ஆனால் அதனைக் கணிதம் செய்வது, சற்றுக் கடினமாகவே இருக்கிறது. எனவேதான், அதனை சோதிட அறிஞர்கள் கைவிட்டு விட்டார்களோ எனக் கருத வேண்டியுள்ளது.

அடுத்து வராக மிகிரரின் முறை …