எனக்கு முதலில் சோதிடத்தில்
கொஞ்சமும் ஆர்வம் கிடையாது. நம்பிக்கையும் கிடையாது. மகாக்கவி பாரதியார்கூட, “சோதிடம் தனை இகழ்”. என்று தனது புதிய ஆத்திச்சூடியில்
எழுதியிருப்பார். தந்தைப் பெரியாரைப் பின்பற்றுபவர்கள், சோதிடத்தைத் இகழ்வார்கள், கூடவே,
பாரதியாரையும் இகழ்வார்கள், மகாக்கவி அந்த வரியை எழுதியிருந்தபோதும். ஆனால் தந்தை பெரியார்
நிதர்சனமான ஒரு உண்மையைச் சொல்லியிருப்பார். நீ ஒரு கொள்கையில் மாற்றுக் கருத்து கொண்டிருந்தாலும்,
அது நிரூபிக்கப்பட்டால் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பதே.
“உண்மை” இதழில் படித்தபோது, பெரியாரின் பதில் ஒன்றைப்
படித்தேன்.
ஒருவர்: “கடவுள் இல்லையென்று சொல்லுகின்றீரே, திடீரென
கடவுள் உங்கள் முன் தோன்றினால் என்ன சொல்வீர்?”
பெரியார்: சட்டென்று “இருக்குதுன்னு சொல்லிட்டுப் போறேன்”.
இந்த மன நிலை எல்லோருக்கும் வேண்டும்.
“சோதிடம் இகழ்ந்திருந்த” எனக்கு, மூன்றாண்டுகளுக்கு
முன்பு ஒருமுறை, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சோதிடம் பற்றிய நீயா நானா நிகழ்ச்சியைப்
பார்க்க நேர்ந்தது. இரு பிரிவு. ஒன்று சோதிடம் உண்மை, மற்றொன்று சோதிடம் பொய்.
முதலில் பெயரில்லாத, பிறந்த தகவல்கள் இல்லாத ஒரு சாதகம் கொடுக்கப்பட்டு, இது யாருடையது எனக் கேட்க, அங்கு அமர்ந்திருந்த சோதிடர்கள், அது ஒரு அரசியல்வாதியின் சாதகம் என கணித்துச் சொன்னார்கள் (பெயர் வேண்டாம்). அதில் வியப்படைவதற்கு ஒன்றும் இல்லை. ஏனெனில், அது பெரும்பாலன சோதிடர்கள் (தேர்தலின்போது) பார்த்து ஆராய்ந்து கொண்டிருக்கும் சாதகம்.
பின்னர், சோதிடத்தை மறுக்கும் பிரிவிலிருந்து ஒரு
பெண் ஒரு சாதகத்தைக் கொடுத்து ஆராயச் சொன்னார். ‘ஷெல்வி’’ (என்று நினைக்கிறேன்) என்ற
அந்த சோதிடர், அந்த சாதகத்தை ஆராய்ந்து பார்த்துவிட்டு, இந்த சாதகக்காரர், திருமணத்தில்
தோற்று போயிருப்பார். விவாகரத்து வரை போயிருக்கும், என்று சொன்னார். முதலில் மறுத்த
அந்தப் பெண், பின்னர், ஆம் தற்போது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது என்றும்,
அது தன்னுடைய சாதகம்தான் என்றும் கூறினார்.
நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருப்பவர், திரு கோபிநாத். இதில் ஏதும் பொய் பித்தலாட்டம் நடந்திருக்க வாய்ப்பில்லை. பின்னர் எப்படி அவ்வளவு துல்லியமாக அந்த சோதிடரால், முன்பின் பார்த்திராத ஒருவரின் வாழ்க்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்வினைக் கூறமுடிந்தது?
அந்த நிகழ்வுதான், என்னை சோதிட ஆய்வின் பக்கம் திருப்பியது.
…. முன்னுரை தொடரும்
1 comment:
Two controversial men joined together. Good approach.
Post a Comment