முன் பதிவில், இரு குழந்தைகள் வினாடித் துள்ளியமாகவோ அல்லது நிமிடத் துள்ளியமாகவோ ஒரே இடத்தில் பிறப்பதற்கு வாய்ப்பு என்பது மிக அரிது என்பதும் அவ்வாறு பிறந்ததற்கு மருத்துவ ஆதாரங்கள் கிடைக்கப் பெறவில்லை என்பதையும் பார்த்தோம். குறைந்தபட்சம் 15 நிமிட இடைவெளியில்தான் இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன எனவும் பார்த்தோம்.
இருப்பினும் ஒரு விளக்கத்திற்காக, இரு குழந்தைகள் - 5 நிமிட இடைவெளியில், 10 நிமிட இடைவெளியில், 15 நிமிட இடைவெளியில் அவை பிறந்திருந்தால், சாதகக் கட்டங்கள் எப்படி இருக்கும் என்பதனை ஆய்வு செய்வோம்.
அதற்காக, 25.07.2015 அன்று இரவு 10.23, 10.28, 10.33, 10.38 ஆகிய நேரங்களில் குழந்தைகள் பிறந்திருந்தால், சாதகக் கட்டங்கள் எப்படி இருக்கும் என்பதனை ஆய்விற்கு எடுத்துக் கொள்வோம். [நன்றி: ஜெகனாத ஹோரா மென்பொருள்]
(1)
ஐந்து நிமிட இடை வெளியில்
இங்குள்ள சாதகக் கட்டங்களில், உள் கட்டம் இராசியைக் குறிக்கும், வெளிக் கட்டம் அம்சம் எனப்படும் நவாம்சத்தினைக் குறிக்கும். இங்கு ஐந்து நிமிட இடைவெளியில் இராசியிலும் அம்சத்திலும் எவ்வித மாற்றமும் இல்லை. அதே நேரத்தில் கோள்களின் இருப்பிட பாகையில் சிறு வித்தியாசங்கள் காணப்படுகின்றன.
(2)
பத்து நிமிட இடை வெளியில்
இங்கும் 10 நிமிட இடைவெளியில் இராசியிலும் அம்சத்திலும் எவ்வித மாற்றமும் இல்லை, அதே நேரத்தில் கோள்களின் பாகையில் மேலும் வித்தியாசங்கள் ஏற்பட்டுள்ளன.
(3)
பதினைந்து நிமிட இடை வெளியில்
இங்கு மிக முக்கிய மாற்றம் நிகழ்துள்ளதைக் கவனியுங்கள். இரண்டிலும் இராசியில் இலக்கினம் மீனத்தில் உள்ளது. ஆனால் நவாம்சத்தில் விருச்சிகத்தில் உள்ள இலக்கினம் 15 நிமிட இடைவெளியினால் தனுசுவில் மாறியுள்ளது. பாகையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. உத்திரட்டாதி நான்காம் பாதம், ரேவதி முதல் பாதமாக மாறியுள்ளது.
எனவே, மாற்றம் என்பது 15 நிமிட இடைவெளியில் நிச்சயம் ஏற்படுகிறது எனும் கோட்பாட்டிற்கு நாம் வந்தாலும், 10 அல்லது 5 நிமிட இடைவெளியில் பெரிய மாற்றம் ஏதுமில்லையே எனவும் நினைக்கத் தோன்றுகிறது. அதே நேரத்தில், அங்கு சிறு பாகை வித்தியாசம் ஏற்படுவதையும் விட்டுவிடுவதற்கில்லை.
இங்கு ஒரு கேள்வி எழுகிறது – சிறு பாகை வித்தியாசம் பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தி விடுமா? என்பதுதான்.
நிச்சயம் ஏற்படுத்தும். ஏனெனில் கோள்களின் உச்சம், நீச்சம், அதி உச்சம், அதி நீச்சம், கோள்களின் யுத்தம், கோள்களின் பகை, கோள்களின் பலம் போன்று இன்னும் பல கணிதங்கள், பாகை அளவீட்டில்தான் தீர்மானிக்கப்படுகின்றன. அதுபற்றி பின்னர் பார்ப்போம்.
பொதுவாக நமது சோதிடர்கள், இராசி கட்டத்தினை மட்டுமே வைத்துக்கொண்டு ‘வகுப்புகள்’ எடுப்பதாலும், ‘பலன்கள்’ உரைப்பதாலும், ஒரே நேரத்தில் பிறக்கும் இரு குழந்தைகளுக்கு ஒரே மாதிரியான சாதக் கட்டங்களே இருக்கும் நிலையில் பலனும் ஒரே மாதிரியாகத்தானே இருக்க முடியும் எனும் கேள்வி எழுவது ஏற்புடையதுதான்.
ஆனால் சிறு (பாகை) வித்தியாசமும், பலனில் வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்பதும் உண்மை.
எதுவும் தேவையின் பொருட்டு கொஞ்சம் கற்பதுதான் எனும் யதார்த்த நடைமுறையின்படி, சோதிட மாமேதைகள் கணிதம் செய்தபோது அப்போதைய காலக் கட்டத்தில் அவர்கள் கண்டு உணர்ந்த தெளிந்த விவரங்களுக்கு மட்டுமே கணிதம் செய்துள்ளனர். இப்போது மாறிவரும் உலகில் அவற்றை அடிப்படைக் கல்வியாகக் கொண்டு, தேவை ஏற்படும்போது, மேலும் கணிதம் செய்ய வேண்டியது இன்றைய அறிஞர்களின் கடமை அல்லவா? பலன்கள் பற்றி பதிவிடும் போது இதுபற்றி மேலும் விவாதிப்போம்.
ஆக, சென்ற பதிவுகளின்படி –
(1)
ஒரே இடத்தில் (அட்ச-தீர்க்க ரேகை மாறுபாடின்றி), ஒரே நேரத்தில் (நிமிட வித்தியாசமின்றி) இரு குழந்தகள் பிறப்பதில்லை.
(2)
இரட்டைக் குழந்தைகள் சிறு கால இடைவெளியில்தான் பிறக்கின்றன.
(3)
பொதுவாக குறைந்த பட்சம் 15 – 20 நிமிட இடைவெளியில் ஒரே இடத்தில் குழந்தைகள் பிறக்கின்றன.
(4)
ஒவ்வொரு நிமிட இடைவெளியும், பாகை வித்தியாசத்தை ஏற்படுத்துகின்றன.
(5)
ஒரே நேரத்தில் பிறக்கும் இரு குழந்தைகளின் சாதகம் ஒன்றாக இருப்பதற்கு (பாகை வித்தியாசமின்றி) வாய்ப்பு அறிதிலும் அறிதாகவே இருக்கும்.
(6)
எனவே இரு குழந்தைகளின் சாதகங்கள் ஒன்றுபோல் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை எனும் முடிவிற்கு வரலாம்.
இதுபற்றி மாறுபட்டக் கருத்துக்கள் இருப்பின், தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். மாறுதல் என்பதில் மாறுதல் இல்லை.
அடுத்து, பிருகத் ஜாதகா (பகுதி-4) தமிழாக்கம் தொடர்ந்தபின், மீண்டும் ஆய்விற்கு வருவோம்.