நம்மில் பொதுவாக எழுப்பப்படும் கேள்வி என்னவெனில், ஒரே நேரத்தில் பிறக்கும் அல்லது இரட்டைக் குழந்தைகளின் சாதகங்கள் ஒன்றாக இருக்கும்போது இருவருக்குமான பலன்கள் ஏன் ஒன்றாக இருப்பதில்லை என்பதுதான்.
முதலில், ஒரே நேரத்தில் பிறக்கும் இரு குழந்தைகளின் சாதகங்கள் ஒன்றுபோல் இருக்குமா என்பதை ஆராய வேண்டும்.
இங்கு ஒரே நேரம் என்பது என்ன? இரண்டு குழந்தைகள் நேர வித்தியாசம் துளிக்கூட இல்லாமல், குறிப்பிட்ட நேரத்தில் பிறந்து இருப்பதுதான். இதனை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். (1) இரண்டு குழந்தைகள் குறிப்பிட்ட நேரத்தில் இரண்டு தாய்களுக்கு பிறப்பது (2) ஒரே தாய்க்கு பிறந்த இரட்டைக் குழந்தைகள்.
ஒரே நேரத்தில் இரண்டு தாய்களுக்கு பிறக்கும் குழந்தைகளைப் பார்ப்போம். ஒரே நேரம் என்பது எதைப் பொருத்தது என்பதே கேள்வி. ஒரே நேரம் என்பது ஒரு நாடு முழுமைக்குமா? அல்லது ஒரு குறிப்பிட்ட மாநிலத்திற்கு மட்டுமா? அல்லது ஒரு குறிப்பிட்ட ஊருக்கு மட்டுமா? அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்டுமா? அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மட்டுமா?
அதற்கு முன், நாம் ஏற்கனவே பார்த்த அட்ச ரேகை – தீர்க்க ரேகை விவரங்களை ஞாபகப்படுத்திக் கொள்வோம். இந்த பூமியானது, மேலும் கீழும் சற்று தட்டையான ஒரு உருண்டை என்பது நமக்குத் தெரியும். இந்த பூமியில் ஒரு குறிப்பிட்ட இடத்தினை, புவியியல் வழியில் அடையாளம் காண்பதற்கு நாம் பயன்படுத்தும் கற்பனைக் கோடுகள் தான் அட்ச ரேகை மற்றும் தீர்க்க ரேகைகள். நமது இந்தியாவின் மையப்புள்ளியானது அட்சரேகை - Latitude: 21.7679° N; தீர்க்கரேகை Longitude: 78.8718° E என உள்ளது. ஆனால் பிற பகுதிகள் இதன் அளவில் நிச்சயம் மாறுபட்டுள்ளன.
கீழே உள்ள இந்திய வரைபடத்தினைப் பாருங்கள். ஒவ்வொரு ஊரும் ஒவ்வொரு பகுதியும் வேறு வேறு அட்ச-தீர்க்க ரேகைகளின் அளவில் இருக்கின்றன.
நான் ஏற்கனவே, இலக்கினம் வான் கணிதம் பற்றி எழுதியதில், சூரிய புள்ளியிலிருந்து இலக்கினப் புள்ளி எவ்வித இடைவெளியில் நகர்கிறது என்பதை விளக்கியிருந்தேன். எனவே, நாடு முழுமைக்கும், மாநிலம் முழுமைக்கும், மாவட்டம் முழுமைக்கும் ஒரே அட்ச-தீர்க்க ரேகைகளின் அளவில் கணக்கிடுவது என்பது இலக்கினப்புள்ளி எனும் கணக்கீட்டில் தவறானதாகிவிடும். எனவே, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கும் குழந்தைகளின் பிறப்பிடமானது வேறு வேறு அட்ச – தீர்க்க ரேகைகளில்தான் இருக்க முடியும்.
ஆனால், அட்ச-தீர்க்க வேறுபாடற்ற நிலை என்பது, ஒரே பகுதியில் அல்லது ஒரே ஊரில் நிலவுவதற்கு வாய்ப்பு உண்டு. எடுத்துக்காட்டாக, புதுச்சேரியின் அட்ச-தீர்க்க ரேகைகளான 11.9310° N; 79.7852° E என்பதானது புதுச்சேரி முழுமைக்கும் பொருந்தும். [மிகத் துள்ளியமாகக் கணக்கிட்டால், புதுச்சேரியின் உள்ள சிறு சிறு பகுதிகளுக்கும் அது மாறுபடும் என்பது தனி].
ஆக, ஒரு குறிப்பிட்ட ஊரில் (குறைந்த பரப்பு கொண்ட ஊரில்) பிறக்கும் இரு குழந்தைகள் ஒரே நேரத்தில் பிறந்தால் அவைகளின் சாதகங்கள் ஒன்றுபோல் இருக்க வாய்ப்பு உண்டு என்பது போல் தோன்றுகிறது.
ஆனால் அதிலும் ஒரு மிக மிக முக்கிய புள்ளியியல் கணக்கீடு ஒரு கேள்வியை எழுப்புகிறது. அதனை அடுத்தப் பதிவில் பார்ப்போம்.
No comments:
Post a Comment