பொதுவாக சோதிடத்தில் சுக்கிரனைச் செல்வமும்
காதலும் வாரி வழங்கும் காரகத்துவம் கொண்ட கோளாகத்தான் வடிவமைத்திருக்கின்றனர். எளிய
நிலையில் இருக்கும் ஒருவர் திடீரென்று வசதி வாய்ப்பு மிக்கவராக மாறினால், அவரைப்பற்றி
மற்றவர்கள் சொல்லுவது “அவருக்கு சுக்கிரதசை வெளுத்துவாங்குது” என்பதாகத்தான் இருக்கும்.
[இராகுவிற்கும் அதில் பங்கு இருக்கிறது என்பது சோதிட விதி].
சுக்கிரன் என்று பொதுவில் அழைக்கப்படுவது வெள்ளிக்
கோளாகும். குருவிற்கு அடுத்து சுபக் கோள் எனும் தகுதி பெற்ற கோள் சுக்கிரன் எனும் வெள்ளியாகும்.
இதன் சோதிட வரையறைகளைக் காண்பதற்கு முன்பு வானியல் தன்மைகளைக் காண்போம்.
இது சூரியக் குடும்பத்தில் உள்வட்டத்தில் அமைந்த இரண்டாவது கோள். ஏறக்குறைய பூமியின் அளவு உள்ள கோள். அதனால் இதனை பூமியின் தங்கை என்றும் அழைப்பர். இது ஒரு திடக் கோள். கரியமில வாயுவால் சூழப்பட்ட சுற்றுச் சூழல். எரிமலைக் குழம்பின் காயங்கள் காய்ந்த வடுக்களாக பரவிக் கிடக்கும் மேற்பரப்பு. கிழக்கிலிருந்து மேற்காக தன்னைச் சுற்றிக் கொள்வதால், சூரியன் மேற்கில் உதிக்கும். அயல் வான் குடும்ப தின்ம பொருட்கள் மோதியதால், இது தன் சுழல் தன்மையில் மாறியிருக்கக் கூடும் எனும் கருத்தும் உண்டு.
·
சூரியனிலிருந்து ஏறக்குறைய 108 மில்லியன் கி.மீ. தொலைவில் உள்ளது.
·
தன்னைத்தானே சுற்றிக் கொள்ள 243 நாட்கள் ஆகும். சூரியனைச் சுற்றிவர 225 நாட்கள் ஆகும்.
·
கரியமிலவாயு, நைட்ரஜன் மற்றும் கந்தக சாம்பல் கொண்டது.
·
480 செல்சியஸ் வெப்பம் நிலவும். ஈயம் எளிதில் உருகும் வெப்ப நிலை.
·
சூரியக் குடும்பத்திலேயே அதிக வெளிச்சம் தரும் கோள்.
·
ஒரு காலத்தில் நீர் இருந்திருக்கலாம் எனவும், அது அதீத வெப்பம் காரணமாக ஆவியாகி இருக்கக்கூடும் என வான் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
·
பூமியைப் போல் பெரிய அளவில் காந்தப்புலம் இல்லையென்றாலும், இதற்கும் காந்தப்புலம் உண்டு.
·
கரியமிலமும் கந்தகமும் உள்ள சூழலில் உயிரினம் வாழ்தல் சாத்தியமில்லை என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
இதில் கவனிக்கத் தக்க செய்தி என்னவென்றால்,
சூரியனுக்கு அடுத்து உள்ள கோள் புதன். அதற்கு அடுத்து உள்ளது வெள்ளி. சூரியனுக்கு அருகில்
புதன் இருந்தாலும், புதனைக் காட்டிலும் வெப்பம் அதிகம் உள்ள கோள் வெள்ளி தான். அதனால்தான்,
அனைத்துக் கோள்களைக் காட்டிலும் வெளிச்சம் அதிகம் தருவதும், வெறும் கண்ணால் காணக் கூடியதும்
வெள்ளி எனும் சுக்கிரனாக இருக்கிறது.
இனி, வெள்ளியின் சோதிட வரையறையைப் பார்ப்போம்.
அழகு
காதல்
காமம்
திருமணம்
செல்வம்
கலைகள்
மற்றும் இவற்றின் நீட்சிகள்
ஆக, வெள்ளி என்கிற சுக்கிரனின் சோதிட வரையறைகள்
செல்வமும் செழிப்பும் சார்ந்தவையாகவே வரையறை செய்யப்பட்டுள்ளன. அதுபோல் காதலும் காமமும்
அதன் மிக முக்கிய வரையறையாக உள்ளது. செல்வம் எனும்போது, பொன்னும் பொருளுமே. வெள்ளிக்கோளில்
தங்கப்பாறைகள் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால், காதலுக்கும் காமத்திற்கும் உடல்
ஒத்துழைக்க வேண்டும். பொதுவாக உடலும் உள்ளமும் வெப்பம் அடைந்தால் காமம் தலைக்கேறும்
என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சூரியக் குடும்பக் கோள்களில் அதிக வெப்பம் உடைய கோள்
வெள்ளி என வானியலாளர்கள் கூறுகின்றனர். செவ்வாய் வெப்பக் கோளாக இருந்தாலும், அதனைக்
காட்டிலும் வெப்பம் மிக்க கோள் வெள்ளிதான். அதனால்தான் சோதிடத்தில் வெப்பக் கோள்களான
செவ்வாய்-சுக்கிரன் சேர்க்கையை மிகக் கவனமாக ஆராய வேண்டியுள்ளது. எனவே, இதன் அடைப்படையிலேயே
வெப்பக் கோளான சுக்கிரனைக் காதல்-காமத்திற்கு காரகனாக வரையறை செய்துள்ளனர். காதலோடும்
காமத்தோடும் இணைந்தது திருமணம் என்பதால், திருமணத்தையும் சுக்கிரனின் காரகத்தோடு இணைத்துள்ளனர்.
விடியற்காலை வெள்ளி அழகு என்பதால், கலைக்கும் காரகத்துவம் செய்து இருக்கலாம். அனைத்து
கோள்களும் மேற்கிலிருந்து கிழக்காக சுற்றும்போது, வெள்ளி மட்டும் கிழக்கிலிருந்து மேற்காக
சுற்றுகிறது என்பது ‘பொது விதிகளை மீறுதல்’ என்பதுபோல், காமத்தின் சில எதிர்மறை செயல்களுக்கும்
சுக்கிரன் காரகனாக இருக்கிறது.
ஆக, தர்க்க முறையில்
இதன் வரையறைகளை ஏற்றுக் கொள்ள முடிந்தாலும், எதன் அடிப்படையில் இதனை முன்னோர்கள் வரையறை
செய்துள்ளனர் என்பது, பதிவு செய்யப்படாத தகவலாகவே இருக்கிறது. இருந்தாலும், தொன்று
நிகழ்ந்தவை, இன்றும் நிகழ்பவை ஆகியவற்றின் பதிவுகளின் அடிப்படையிலும், இன்றும் இதன்
காரகத்துவங்கள் பெருமளவு பொருந்துவதாலும், இதனை ஏற்க வேண்டியுள்ளது.
அடுத்து…………
சனி – சோதிட வரையறை