[சென்ற பதிவின் தொடர்ச்சி….]
நட்பு-பகை கோள்கள்:
இராகு-கேது இவை இரண்டிற்கும் பகைக் கோள்கள் என்பன, சூரியன், சந்திரன், செவ்வாய் என பொதுவாக சோதிட நூல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாம் ஏற்கனவே கூறியபடி, சூரிய சந்திர பாதைகளின் இடைவெட்டுப் புள்ளிகளாக இராகுவும் கேதுவும் இருப்பதால், அந்தப் புள்ளிகளில் சூரிய சந்திரன் இணைவு அல்லது அவை நேர் எதிர் நிலையில் இருக்கும்போது சூரிய மறைவு (கிரகணம்) அல்லது சந்திர மறைவு (கிரகணம்) ஏற்படுகிறது. அவ்வாறு ஏற்படும் சூரியன் கிரகணத்தின்போது சூரியனின் கதிர்வீச்சிலும், சந்திர கிரகணத்தின்போது சந்திரனின் கதிர்வீச்சிலும் மிகப் பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகிறது. அதாவது அவ்விரு புள்ளிகளின் நிலையில் சூரிய-சந்திரன் தன் கதிர் வீச்சு திறனை இழக்கும் நிலை ஏற்படுகிறது. அந்த நிலைக்கு அந்தப் புள்ளிகளின் கோண அளவு அல்லது விலகல் தூரம் காரணமாக இருக்கிறது. எனவே, சூரிய-சந்திர கோள்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இப்புள்ளிகள், அதாவது இராகு-கேது, அவைகளுக்கு பகை எனும் நிலையில் வைக்கப்படுகிறது. எனவே, இராகுவும்-கேதுவும், சூரிய-சந்திரனுக்கு பகைக் கோள்கள் என்பது முற்றிலும் ஏற்புடைய கருத்தே.
பார்வைகள்:
பொதுவாக அனைத்து கோள்களுக்கும் 7-ம் பார்வை உண்டு, அது ஏன் என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளோம். இங்கே, இராகு-கேதுவிற்கு 7-ம் பார்வை உண்டா எனும் கேள்வி எழுகிறது. பார்வை என்பது கோண அளவு என்று பதிவு செய்துள்ளோம். 360 பாகைகள் கொண்ட இராசி மண்டலத்தில், 180 பாகை என்பது நேரெதிர் நிலை என்பதால், 7-ம் பார்வை என்கிறோம். இருமுனைகளான, இராகுவும்-கேதுவும் நேரெதிர் நிலையிலேயே எப்போதும் இருக்கும். எனவே 7-ம் பார்வை என்பது பொருந்துகிறது. அதே நேரத்தில் இராகுவும் கேதுவும் எப்போதும் 180 கோண அளவிலேயே இருப்பதால் அவை ஒன்றை ஒன்று பார்க்கின்றன என்றாலும், அது “மாறா விளைவு” (unchangeable effect)
எனும் நிலையிலேயே இருக்கும். அதாவது அதனால் எவ்வித விளைவுகளும் இருக்காது. ஆனால், அதே வேளையில், நேர் எதிர் நிலையில் வேறு ஏதேனும் கோள்கள் இருந்தால், கேது அல்லது இராகுவின் 7-ம் பார்வையானது அக்கோளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் (அது பற்றி பின்னர் விரிவாகக் காண்போம்). எனவே இராகு-கேதுவிற்கு ஏழாம் பார்வை உண்டு என்றாலும், அது இராகு-கேதுவிற்கு இடையே எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது, பிற கோள்களுக்கு மட்டுமே ஏற்படுத்தும்.
இராகு-கேதுகளுக்கு, 7-ம் பார்வை மட்டுமின்றி, 3 மற்றும் 11-ம் பார்வை உண்டு என்று சோதிட நூல்கள் கூறுகின்றன. அதாவது 60-பாகை மற்றும் 120-பாகை கோணத்தில் பார்வை உண்டு எனலாம். இங்கு ஒரு கேள்வி எழுகிறது. இராகு-கேது கடிகார எதிர் சுற்றில் நகரும் நிலையில், 3 மற்றும் 11-ம் பார்வையினை எப்படி கணக்கிடுவது என்பதாகும். இடமிருந்து வலமாகவா அல்லது வலமிருந்து இடமாகவா? இக்கணக்கீட்டில் இதைத் தீர்மானித்தவர்கள் தெளிவாகவே உள்ளனர். எடுத்துக் காட்டாக, இராகு மேசத்தில் இருப்பதாக் கொண்டால், அதன் மூன்றாம் வீடு மிதுனம், 11-ம் வீடு கும்பம். இதனை கடிகார எதிர் சுற்றில் கணக்கிட்டால், மூன்றாம் வீடு கும்பம், 11-ம் வீடு மிதுனம். ஆக கணக்கீட்டில் எவ்வித குளறுபடியும் ஏற்படாது. இதிலிருந்து இராகு-கேது எனும் புள்ளிகள், தாம் இருக்கும் நிலையிலிருந்து 60 பாகை முன்னும் பின்னும் பார்வை கொண்டுள்ளன என பதிவு செய்துள்ளனர்.
இங்கு முக்கியத் தகவல் என்னவென்றால், இராகு-கேது இவற்றின் 3 மற்றும் 7-ம் பார்வையின்படி, அவை 12 இராசிகளில் ஒற்றைப்படை வரிசையில் உள்ள ஆறு இராசிகளிலும் தமது தொடர்பில் உள்ளன. அதாவது, மேசத்தில் இராகு இருந்தால், மேசம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் என உள்ள ஒற்றைபடை வரிசை வீடுகளில் தொடர்பில் இருக்கும். அதாவது, இராகு-கேது எனும் இரு புள்ளிகளின் தொடர்பானது, 360 பாகைகள் கொண்ட இராசி மண்டலத்தில், ஒரு ஒழுங்கின் அடிப்படையில் பரவலாக உள்ளது.
தொகுப்பாக,
Ø இராகு-கேதுவிற்கு ஆட்சி வீடு இல்லை
Ø ஆட்சி வீடு இல்லை என்பதால் மூலத் திரிகோணம் இல்லை
Ø உச்சம்-நீச்சம் என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது
Ø சூரியனும் சந்திரனும் பகைக் கோள்கள்
Ø சிம்மமும் கடகமும் பகை வீடுகள்
Ø இராகுவிற்கு செவ்வாயும், கேதுவிற்கு சனியும் பகை
Ø பார்வைகள் – 3, 7, 11
சோதிட அறிஞர்களின் பொதுவான கருத்தின்படி, இராகு-கேதுக்களின் பலன் அறிதல் என்பது அவை இருக்கும் வீடு (பாவகம்), உடன் இருக்கும் கோள்கள், பார்க்கும் கோள்கள், பார்க்கப்படும் கோள்கள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகிறது. அதுவே ஏற்புடையதாகவும் இருக்கிறது.
அடுத்து …. வீடுகளில் கோள்களின் வலிமை - சுருக்கத் தொகுப்பு…