Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Tuesday, September 20, 2016

வீடுகளில் இராகு-கேதுவின் வலிமை-2


[சென்ற பதிவின் தொடர்ச்சி….]


இனி, இராகு-கேதுக்களின் நிலையினை, வானியல் அடிப்படையில் ஆராய்வோம்:

பூமிமையக் கொள்கைப்படி, சூரியன் மற்றும் சந்திரனின் பாதைகளின் இடைவெட்டுப் புள்ளிகளே இராகுவும் கேதுவும் என்பதை ஏற்கனவே விளக்கமாகப்  பதிவு செய்துள்ளோம். அதாவது, அந்த இடைவெட்டுப் புள்ளிகள், சூரிய-சந்திர பாதையிலிருந்து எவ்வளவு தூரம் விலகுகின்றன என்பதே இராகு-கேதுவின் நகர்வு ஆகும். அந்த விலகலின் அடிப்படையிலேயே இராகு-கேதுக்கள் இராசிகளில் நரும் தோற்றம் ஏற்படும் என்பதையும் பதிவு செய்துள்ளோம். இந்த பூமியின் மீது வரையப்பட்டுள்ள அட்ச – தீர்க்க கோடுகள் எவ்வளவு கற்பனையோ அதுபோலவே, சூரிய-சந்திர பாதைகளின் இடைவெட்டுப் புள்ளிகளான இராகுவு-கேதுவும் கற்பனைப் புள்ளிகள். கற்பனைக் கோடுகளாக இருந்தாலும் அட்ச-தீர்க்க கோடுகள் பூமியின் சுழற்சி, இரவு-பகல், தட்ப-வெப்பம் ஆகியவற்றின் கணிதப் பயன்பாட்டிற்கு மிகமிக முக்கியம் என்பதை மறுக்க முடியாது. அதுபோலவே, இராகு-கேது எனும் இடைவெட்டுப் புள்ளிகளின் நகர்வு அல்லது விலகல் கணிதமும் மிக மிக முக்கியம். எனவே இராகு-கேது என்பன கற்பனைப் புள்ளிகள் என்றாலும் வானியல் சார்ந்த சோதிட விதிமுறைகளுக்கு மிகவும் அவசியம். அதாவது, இவை இரண்டையும் விலக்கிவிட்டு, சோதிட கணிதம் செய்வது பிழையாகப் போய்விடக் கூடும். அப்படி என்றால், வராக மிகிரர் காலத்தில் இவைகளின் பயன்பாடே இல்லையே எனும் கேள்வி எழும். ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல காலவகையினானே’ என நன்னூலில் கூறிய பவனந்தி முனிவரின் கருத்திற்கு ஏற்ப, பின்னர் வந்த சோதிட அறிஞர்கள் இவைகளின் முக்கியத்துவம் உணர்ந்து சோதிட கணிதத்திற்கு பயன்படுத்தியுள்ளனர் என்பதே உண்மை.

இனி இராசிகளின் இவைகளின் நிலையினை ஆய்வோம்.

ஆட்சி: 

இவை இரண்டும் சூரிய-சந்திர கோள்களின் சுற்றுவட்டப்பாதைகளின் வெட்டுபுள்ளிகள் எனும் கற்பனை நிலையில் இருப்பதால், இவைகளுக்கு இராசிகளில் உள்ள எந்த வீடும் ஆட்சி வீடாக இல்லை என்பது சரியானதே. இந்தக் கருத்தில் அதாவது இராகு-கேதுவிற்கு ஆட்சி வீடு கிடையாது என்பதில் அனைத்து சோதிட நூல்களும் ஒற்றுமையாக உள்ளன. [விதிவிலக்காக - மகரமும் கடகமும் ஆட்சி வீடுகள் என ஏதோ ஒரு நூலில் படித்ததாக ஞாபகம்]

மூலத்திரிகோணம்:

 ஆட்சி வீடுகளை வைத்தே மூலத்திரிகோணம் தீர்மானிக்கப்படவேண்டும். இங்கு ஆட்சி வீடே இல்லை எனும் நிலையில், இராகுவிற்கும்-கேதுவிற்கும் மூலத்திரிகோணம் வீடு இல்லை. இதையும் பெரும்பாலான நூல்கள் ஏற்றுக் கொண்டுள்ளன. [கேதுவிற்கு மூலத்திரிகோணம் மகரம் என ஒரு நூல் கூறுகிறது]. எனவே, இராகு-கேதுவிற்கு மூலத்திரிகோண வீடு இல்லை என்பதை ஏற்க வேண்டியுள்ளது.

உச்சம்-நீச்சம்:

மேலே கூறியபடி உச்சம்-நீச்சம் முடிவு செய்வதில் நூல்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. பெரும்பாலான நூல்களின் கருத்துப்படி, இராகுவும் கேதுவும் விருச்சிகத்தில் உச்சமும், ரிசபத்தில் நீச்சமும் அடைவதாக கூறப்படுகிறது. ஆனால் ஏன் அங்கு உச்சம் அல்லது நீச்சம் அடைகின்றன என்பதை உறுதி செய்ய முடியவில்லை. உச்சம் அல்லது நீச்சம் என்பது கோள்களின் கதிர் வீச்சு நிலை.   ஒரு குறிப்பிட்ட கோண அளவில் அல்லது குறிப்பிட்ட இடைவெளியில் கோள்கள் இருக்கும்போது கதிர்வீச்சின் அளவு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும் நிலை. அதாவது முழுத்திறனில் வீச்சினை வெளிப்படுத்துவது உச்சம்வீச்சின் தன்மை வலிமையற்று இருக்கும் நிலை நீச்சம். ஆனால் இராகு-கேதுவினைப் பொருத்தவரையில், அவை கற்பனைப் புள்ளிகள் எனும் நிலையில், அப்புள்ளிகளின் விலகலின் அடிப்படையில் அவை இருக்கும் இடம் தீர்மானிக்கப்படுகிறது. அந்த விலகலின் கோண அளவிற்கு ஏற்ப இராசி மண்டலத்தில் பிற கோள்களின் நிலையில் ஏற்படும் மாற்றங்கள் கணக்கில் கொள்ளப்படுகின்றன. எனவே, இராகுவும்-கேதுவும் சுய ஒளித்தன்மையோடு கதிர்வீச்சினை வெளிப்படுத்தும் என்பது ஏற்க முடியாத செய்தி. எனவே, இராகு-கேது இவை ஒரு குறிப்பிட்ட இராசியில் உச்சம் பெறும் அல்லது நீச்சம் பெறும் என்பது ஏற்புடையதாக இல்லை. மேலும் நடைமுறைக் கணக்கீட்டில், இராகு-கேது ஆகிய இரண்டும் இராசிகளில் இருக்கும் நிலையினைக் கொண்டுதான், சோதிடப் பலன்கள் கணக்கிடப்படுகின்றன. இவைகளின் உச்சம்-நீச்சம் பற்றிய கணக்கீட்டை கருத்தில் கொள்வதில்லை என்பதே நடைமுறையில் உள்ள நிலை. எனவே, இராகு-கேதுவிற்கு உச்சம்-நீச்சம் இல்லை என்பதே எனது முடிவு. மாற்றுக் கருத்து இருப்பின், வான் கணித அடிப்படையில் விளக்கினால் திருத்தம் மேற்கொள்ளப்படும்.


நட்பு, பகை, சமம்:  

மேலே குறிப்பிட்டுள்ள நிலையினையே மீண்டும் தொடர்வோம். ஆட்சி, மூலத்திரிகோணம், உச்சம், நீச்சம் ஆகிய நிலைகள் இராகுவிற்கும் கேதுவிற்கு இல்லாத நிலையில், அவை இராசிகளில் நட்பு, பகை, சமம் என இருக்கும் நிலையினைத் தீர்மானிப்பதும் தவறான நிலையினையே ஏற்படுத்தும். இருப்பினும் சில நூல்கள், கடகம், சிம்மம், மேசம் ஆகியவை இவை இரண்டின் பகை வீடுகள் எனவும், பிற வீடுகள் (விருச்சிகம், ரிசபம் நீங்களாக) நட்பு வீடுகள் எனவும் குறிப்பிடுகின்றன. ஒரு கோளிற்கு ஒரு வீடு நட்பு அல்லது பகை என்பதை, அதன் மூலத் திரிகோண வீட்டிலிருந்துதான் வரையறை செய்ய வேண்டும். இங்கு இந்த இரண்டு கோள்களுக்கும், மூலத்திரிகோண வீடே இல்லை எனும் நிலையில் இவற்றை வரையறை செய்ய இயலவில்லை. இருப்பினும், சூரியன்-சந்திரன்-செவ்வாய் ஆகிய மூன்றும் பகைக் கோள்கள் எனும் நிலையினை அடிப்படையாகக் கொண்டு, அவைகளின் வீடுகளான சிம்மம், கடகம், மேசம் (விருச்சிகம்-உச்சம் என்பதால் விதிவிலக்கு?)  ஆகியவற்றை பகை வீடுகளாக கணக்கில் கொண்டுள்ளனர்சிம்மம், கடகம் ஆகிய இரண்டினையும் பகை என வரையறை செய்ததில் ஏற்புடைய விளக்கம் உள்ளது. ஆனால் செவ்வாயின் வீடான மேசத்தினை எந்த அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது என தெரியவில்லை. ஏனெனில், இராகு-கேது இவைகளின் பொது குணமாகக் கூறும்போது, இராகு சனியின் தன்மைகளையும், கேது செவ்வாயின் தன்மைகளையும் கொண்டுள்ளது என்பர். எனவே, செவ்வாயின் தன்மையினைக் கொண்ட கேது, செவ்வாய்க்கு பகை என்பது ஏற்புடையதா எனத் தெரியவில்லை. ஆனால், சனியின் தன்மை கொண்ட இராகு, செவ்வாய்க்கு பகை என்பதை ஏற்க முடிகிறது. அந்த அடிப்படையிலேயே, செவ்வாயின் வீடான மேசத்தினை இராகுவிற்கு பகைவீடு என வரையறை செய்திருக்கலாம். இன்னொரு வீடான விருச்சிகம், சிலர் கூறுவதுபோல் உச்ச வீடு என்பதால், அதனை விலக்கியிருக்கலாம். ஆனால், இந்த விதி, கேதுவிற்கு பொருந்துமா என்பது கேள்வியாகவே உள்ளது.


அடுத்த பதிவிலும் தொடரும்….

No comments: