Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Sunday, July 31, 2016

நட்பு - பகை - சமம்



வான் மண்டல சுற்றுப்பாதையை பன்னிரெண்டு இராசிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டு, இராகு கேது எனும் புனைக் கோள்கள் தவிர்த்து, மீதமுள்ள ஏழு கோள்களுக்கும் அந்த வீடுகளைப் பகிர்ந்து அளித்துள்ளதும், அவ்வாறு பகிர்ந்து அளிக்கப்பட்டபின், அவைகள் மூலத் திரிகோணம், உச்சம் நீச்சம் அடையும் முறைகளை, பொது வரையறையாக சென்ற பதிவுகளில் பார்த்தோம்.

சோதிட அமைப்பில், அவ்வாறான கோள்கள், சில இராசிகளில் நட்பாகவும், சில இராசிகளில் பகையாகவும், சில இராசிகளில் சமமாகவும் இருப்பதாக சோதிட நூல்கள் கூறுகின்றன.

இதுபற்றிய பொது வரையறைகளைப் பார்ப்போம்.

கோள்கள் தமக்குறிய சொந்த வீடுகளில் இருப்பது ஆட்சி வீடு. பிற வீடுகளில் அவைகளின் நிலை பொருத்து, நட்பு, பகை, சமம் என வகைப்படுத்தப்படுகின்றன. இதற்கு அடிப்படையாக இரு கோள்களுக்கு இடையே உள்ள இயல்தன்மையைக் கணக்கில் கொண்டுள்ளனர். எடுத்துக் காட்டாக, சூரியன் மிகவும் வெப்பமான கோள். அதற்கு நேர் எதிராக, வெகு தொலைவில் உள்ள சனியானது, குளிர்ச்சி மிகுந்த பனிக் கோள். வெப்பமும் குளிர்ச்சியும் வெவ்வேறான இயல்தன்மைகளைக் கொண்டிருப்பதால், அவை இரண்டும் பகைக் கோள்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, சூரியனுக்குத் தொடர்புடைய அல்லது அத்தகைய இயல்தன்மை உடைய கோள்களை ஆட்சி வீடாகக் கொண்ட இராசிகள், சனிக் கோளுக்கு பகை வீடாக வரையறை செய்யப்பட்டுள்ளன. அதேபோல், ஒத்த இயல் தன்மைகொண்ட கோள்களின் வீடுகள், அத்தகையக் கோள்களுக்கு நட்பு வீடுகள் என வரையறை செய்யப்பட்டுள்ளன. இரண்டு நிலைகளும் இன்றி பொதுவான இயல்தன்மைகள் கொண்ட கோள்களின் வீடுகள், அத்தகையக் கோள்களுக்கு சமம் எனும் நிலையினை வரையறை செய்துள்ளனர்.

இதில் பொது விதியாக, ஒரு கோளின் மூலத் திரிகோண வீட்டிற்கு இருபுறமும் உள்ள வீடுகள் நட்பு வீடுகளாக வரையறை செய்துள்ளனர். அதுபோலவே, திரிகோண வீடுகளான ஐந்தாம் வீடு, ஒன்பதாம் வீடு ஆகியவையும் நட்பு வீடுகளாக வரையறை செய்துள்ளனர். முன்பே கூறியதுபோல், மூலத் திரிகோணம், முதல் கோணம், ஐந்தாம் வீடு இரண்டாவது கோணம், ஒன்பதாவது வீடு மூன்றாவது கோணம் என்பதோடு மட்டுமின்றி அத்தகைய இடங்கள் வலிமைமிக்க இடங்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதையடுத்து, கேந்திரங்கள் எனப்படும் நாற்கரத்தின் இரண்டாவது செங்கோணம், அதாவது இரண்டாவது கேந்திரமான நான்காவது வீட்டினையும் நட்பு வீடாக வகைப்படுத்தியுள்ளனர். மூலத் திரிகோணம் என்பது முக்கோணத்தின் முதல் கோணம் என்பது மட்டுமின்றி, முதல் செங்கோணம் அல்லது முதல் கேந்திரம் என்பதையும் நினைவில் கொள்க. மூன்றாவது (7வது வீடு) மற்றும் நான்காவது (10வது வீடு) செங்கோணங்கள், பெரும்பாலும் நட்பு அல்லது சமம் எனும் கணக்கிலேயே வருகின்றன. விதிவிலக்காக, 8வது வீடானது நட்பு எனும் வட்டத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அது ஏன் என்பதை, ஒவ்வொரு கோளையும் வகைப்படுத்தும்போது, விரிவாகப் பார்க்கலாம்.

ஆக, பொதுவில், ஒரு கோள் தனது மூலத் திரிகோண வீட்டிற்கு, அடுத்துள்ள 2, 4, 5, 8, 9, 12 ஆகிய வீடுகளில் நட்பு நிலையிலேயே வகைப்படுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள 3, 6, 7, 10, 11 ஆகிய வீடுகள், சில விதிமுறைகளுக்கு உட்பட்டு, சமம் அல்லது பகை எனும் நிலையில் உள்ளன.



தனித்தனியாக ஒவ்வொரு கோளையும் வரையறை செய்யும்போது, விளக்கமாகக் காண்போம்.


அடுத்து … கோள்களின் பார்வைகள்

No comments: