நிலவு என்பது ஒவ்வொருவரின் குழந்தைப் பருவத்திலும்
கைக்கோர்த்து நடந்து வரும் நண்பன். நிலவைக் காட்டிச் சோறு ஊட்டாத தாயே இல்லை எனக் கூறலாம்.
இப்போதைய அவசர உலகத்தில் சோற்றைக்கூட தாய் ஊட்டாத நிலை உள்ளது. அதை விடுங்கள். நாம்
சிறிய வயதில் நடந்து செல்லும்போது நிலவு நம்முடனேயே தொடர்ந்து வரும். நாம் ஓடினாலும்
நம்மை விடாது துரத்தி வரும். அல்லது நமக்கு முன்னே சென்று கொண்டிருக்கும்.
தொடர்வண்டியில் பயணம் செய்து கொண்டிருப்போம்.
வெளியே உள்ள தந்திக் கம்பங்கள் நம்மைக் கடந்து சென்றுகொண்டிருக்கும். மரங்கள் நகர்ந்து
கொண்டிருக்கும்.
இராஜதானி விரைவு வண்டியில் தில்லி நோக்கி பயணம்
செய்துகொண்டிருப்போம். பக்கத்தில் உள்ள பயணி “விஜயவாடா எப்போது வரும்?” என்று கேட்பார்.
உண்மையில், நிலவு நம்மைப் பின்தொடர்வதில்லை,
அல்லது நம்மை விட்டு முன்னோக்கி ஓடுவதில்லை. அது அதன் இயல்பில் சுற்றிக் கொண்டு (நகர்ந்து
கொண்டு) இருக்கிறது.
தந்திக் கம்பங்களும், மரங்களும் நகராப் பொருட்கள்
என்று நமக்குத் தெரிந்திருந்தாலும் நகர்வதாக நமக்கு தோன்றுகிறது.
விஜயவாடா எப்போதும் நம்மிடம் வராது. நாம் செல்லும்
வண்டிதான் விஜயவாடா நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
ஆனாலும், மேலே சொன்னக் காட்சிகளை நாம் உண்மையென
கற்பனைச் செய்துகொண்டிருக்கிறோம்.
இதைத்தான் நம் முன்னோர்கள், கோள்களின் அசைவை,
நகர்தலை, பூமியிலிருந்து பார்த்து, காட்சித் தோற்றத்தில் கணிதம் செய்தனர். வானியலின்
தந்தை, திரிகோணக் கணிதத்தில் கரைகண்ட ஆர்யபட்டா-1 அவர்கள்கூட காட்சித் தோற்றத்தின்
அடிப்படையில்தான், அதாவது பூமி மையக் கொள்கையின் அடிப்படையில்தான் கணிதம் செய்தார்.
நமது முன்னோர்களும் அவ்வாறே கணிதம் செய்தனர். கோள்களின் பெயர்ச்சியினைத் துள்ளியமாகக்
கணக்கிட்டனர். முழு நிலவும், இருள் நிலவும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் (15 நாட்களுக்கு
ஒரு முறை) வருதலைக் கணக்கிடுதலில் பெரிய சூத்திரம் தேவையில்லை என்றாலும், எப்போதோ ஏற்படக்கூடிய,
அதுவும் முறையான குறிப்பிட்ட காலச் சுழற்சியில் ஏற்படாத சூரியக் கிரகணம், சந்திரக்
கிரகணம் முதலியவற்றை எப்படிக் கணித்தனர். பூமி மையக் கொள்கைதான் அவர்களுக்கு அடிப்படைத்
தத்துவம். தொலை நோக்கிகள், அறிவியல் கருவிகள் போன்றவை எதுவும் இன்றி, நிகழ் பதிவுகள்
மற்றும் கணித சூத்திரங்கள் மூலமாகவே இவற்றைக் கண்டறிந்தனர் என்பது பெரும் வியப்பிற்கும்
மதிப்பிற்கும் உரிய அறிவியலாகும். தாலமி கூட போகிற போக்கில் பூமி மையக் கொள்கையை வகுக்கவில்லை.
பல்வேறு கணித சூத்திரங்கள், தேற்றங்கள் இவற்றின் மூலமே நிறுவி இருந்திருக்கிறார்.
கோபர்னிகஸ் சூரியக் கொள்கையைக் கூறியபோது, கோள்கள்
சூரியனை மையமாகக் கொண்டு வட்டப்பாதையில் சுற்றுவதாகத்தான் குறிப்பிட்டார். பின்னர்
வந்த கெப்ளர் தான் நீள்வட்டப்பாதையில் சுற்றுவதாகக் கூறினார்.
பூமி மையக் கொள்கைக்கும், சூரிய மையக் கொள்கைக்கும்
உள்ள சுற்றுவட்டப்பாதையைக் கவனித்தால், கோள்களின் வரிசையில் எவ்வித மாற்றமும் இருப்பதில்லை.
சூரியக் கொள்கையில் - வெள்ளிக்கும் செவ்வாய்க்கும்
இடையில் பூமி இருக்கும். பூமிக் கொள்கையில் -
வெள்ளிக்கும் செவ்வாய்க்கும் இடையில் சூரியன் இருக்கும். அவ்வளவுதான்.
சில தகவல்களைத் திரட்டும்போது ஒரு செய்தி கிடைத்தது.
விண்வெளிக்கு செயற்கை கோள்களை அனுப்பும்போது, பூமியின் புவியீர்ப்பு விசையை விட்டு
செல்லும்வரை பூமி மையக்கொள்கைதான் பின்பற்றப்படுகிறதாம். புவியீர்ப்பு விசையை விட்டு
விலகிச் சென்றவுடன் சூரிய மையக் கொள்கை பின்பற்றப்படுகிறதாம்.
எந்தக் கொள்கையாக இருந்தாலும் சூரியன் கிழக்கில்
தோன்றி மேற்கில் மறைவதில் மாற்றமில்லை. கிரகணங்கள் கணிப்பதில் மாற்றமில்லை. கோள்களின்
பெயர்ச்சியில் மாற்றம் இல்லை.
நாம் பூமியில் இருந்து பார்ப்பதால் பூமி மையக்
கொள்கையும், ஆகாயத்தில் இருந்து பார்த்தால் சூரிய மையக் கொள்கையும் சரியாகவே இருக்கும்.
எனவே, சோதிடம் பற்றி கணிதம் செய்த முன்னோர்கள்
பூமி மையக் கொள்கையைப் பின்பற்றியதில் தவறு ஏதும் இல்லை என்றே தோன்றுகிறது.
[இன்னமும்
சில மதங்கள், பூமி நிலையானது என்றும், சூரியனும் மற்றக் கோள்களும் பூமியைச் சுற்றி
வருகிறது என்றும் தங்களது மத நூல்களை மேற்கோள் காட்டி கூறிவருகின்றன. பூமி தட்டையானது
எனும் கோட்பாடு உடைய மதமும் அதனைப் பின்பற்றுபவர்களும் இருப்பதாகவும் மறைந்த எழுத்தாளர்
சுஜாதா அவர்களின் கட்டுரை ஒன்றில் படித்திருக்கிறேன்.]
2 comments:
நல்ல கட்டுரை . தெளிவான நடை .வாழ்த்துக்கள்.
தங்களைப் போன்ற ஆய்ந்த அறிஞர்களின் வாழ்த்துக்கள் மிக்க மகிழ்வு அளிக்கிறது. தங்களின் “இராகு-கேது” பற்றியக் கட்டுரைகளைப் படித்திருக்கிறேன். அதன் சாராம்சத்தையும் உள்வாங்கிக் கொண்டு, எனது முதுகலை-சோதிடவியலின் ஆய்வுக் கட்டுரையான “கால தாமதத் திருமணத்தில் கேதுவின் பங்கு” சமர்ப்பித்திருந்தேன். மிக்க நன்றி. அவ்வப்போது தங்களின் கருத்துக்களை நல்கவும். என்னைச் செம்மைப் படுத்திக் கொள்ள அது உதவியாக இருக்கும்.
-நிமித்திகன்.
Post a Comment