Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Wednesday, April 29, 2015

நிலைத் தன்மையில் இராசிகள்


[அலுவல் பணி காரணமாக எழுதுவதில் சிறு காலதாமதம். பொதுவாக மார்ச் மற்றும் ஏப்பிரல் மாதங்களில் அலுவல் பணிச் சுமை அதிகமாகிவிடும். வாங்கும் ஊதியத்திற்கு முறையாக வேலை செய்ய வேண்டும் அல்லவா?]

இனி தொடர்வோம்.

      இராசிகளை பல்வேறு வகைகளில் பிரித்துள்ளதைப் பார்த்தோம். அதில் மற்றொரு முறை நிலைத் தன்மை. பொதுவாகப் பொருட்களை மூன்று வைகைகளாகப் பிரிக்கலாம். திட நிலை, திரவ நிலை, வாயு நிலை. இதுதான் தொன்றுதொட்டு நாம் படித்துவந்த, கேட்டுவந்த நிலைகள். ஆனால் இவை மூன்றினைத் தவிர, நான்காவதாக ஒரு நிலை உண்டு. அது திரவமும் அல்லாது வாயுவும் அல்லாது இரண்டும் கலந்த வெப்பம் சூழ்ந்த நிலை. அதன் பெயர் ‘பிளாஸ்மா’. சூரியனின் நெருப்புக் குழம்பின் தன்மையினை பிளாஸ்மா என்றே அறிவியலாளர்கள் வகைப்படுத்தியுள்ளனர்.

      என்னைப் பொருத்தவரையில், பிளாஸ்மா என்பதே ஆதி அந்தம் என்று இருந்திருக்க, அதுவே பின்னர், திட, திரவ, வாயு என மூன்று நிலைகளை அடைந்திருக்க வேண்டும். அந்த ஆய்வினை அறிவியலாளர்களிடம் விட்டு விடுவோம். நமது பாடத்திற்கு வருவோம்.

      எனவே, பொதுவான மூன்று நிலைகளான, திட, திரவ, வாயு நிலைகளை இராசிகளில் வகைப் படுத்தியுள்ளனர்.

1.   சரம் (திரவம்)
2.   ஸ்திரம் (திடம்)
3.   உபயம் (வாயு)

      சோதிட விதிகளின்படி – சரம் என்பது ‘நகரும்’ இராசியாகும்; ஸ்திரம் என்பது ‘நகரா’ இராசியாகும்; உபயம் என்பது ‘இரண்டும் கலந்த’ இராசியாகும்.

இவற்றினைத் திட, திரவ, வாயு நிலைகளில் ஒப்பிடுவோம்.

1.   சரம் என்றால் நகரும் தன்மைக் கொண்ட இராசி என வகுத்துள்ளனர். திரவம் என்பது ஓரிடம் தனில் நிலையில்லாது நகரும் தன்மை கொண்டது. இது போன்ற இயல்பினைக் கொண்ட இராசியினை சர இராசி என்று வகைப்படுத்தியுள்ளனர்.

2.   ஸ்திரம் என்றாம் ஒரே இடத்தில் அசைவற்று இருக்கும் நிலையாகும். அதாவது திட நிலை இயல்பினைக் கொண்டிருக்கும். இவ்வகை இயல்பினைக் கொண்ட இராசியினை ஸ்திர இராசி என வகைப்படுத்தியுள்ளனர்.


3.   உபயம் என்றால் இரு நிலைகளும், அதாவது இரு தன்மைகளும் கொண்ட இராசியாகும். அது திட நிலையும், திரவ நிலையும் கொண்ட நிலைப்பாடாகும். இதனை எப்படி வாயு நிலைக்கு கணக்கில் கொள்ள முடியும் என நினைக்கத் தோன்றும். சற்று விரிவாகக் காண்போம். நம் உடலானது, திட நிலையில் இருந்தாலும், திரவம் எனும் குருதியுடன் இணைந்தே உள்ளது. அதே நேரத்தில் உடல் அசைவதற்கு, உயிர் எனும் வாயு உள் சென்று வர வேண்டியுள்ளது. அந்த உயிர் எனும் வாயு உள் சென்று தங்கி வருவதற்கு சதையும் குருதியும் கலந்த உடல் தேவைப்படுகிறது. எனவே, வாயு என்பது தனித்து காண முடியாமல், இவை இரண்டுடனும் பின்னிப் பினைந்துள்ளாதால், வாயுவின் உபயத்தால் இந்த உடல் வாழ்வதால், மூன்றாம் நிலையான ‘உபயம்’ என்பது ஒரு வகை இராசியாக பிரிக்கப்பட்டுள்ளது.

      ஆக, இராசிகளை – (1) சரம் – நகர்தல் - திரவம்  (2) ஸ்திரம் – திடம் - பருமம் (3) உபயம் – இரண்டும் – இரண்டிற்கும் ஆதாரமன வாயு என வகைப்படுத்தியுள்ளனர். அதாவது, உலகச் சூழலின் நிலைத்தன்மையினை – சோதிடத்தில் கொண்டுவந்துள்ளனர்.


      இனி, எந்த இராசி எந்த வகையினைச் சார்ந்தது என்பதனைப் பார்ப்போம்-

      மீனம்
உபயம்
மேசம்
சரம்
ரிசபம்
திடம்
மிதுனம்
உபயம்
கும்பம்
திடம்
இராசிகளில் நிலைத்தன்மை
கடகம்
சரம்
மகரம்
சரம்
சிம்மம்
திடம்
தனுசு
உபயம்
விருச்சிகம்
திடம்
துலாம்
சரம்
கன்னி
உபயம்

பன்னிரெண்டு இராசிகளையும், இம்மூன்று நிலைகளில் பிரித்துள்ளதில், ஒரு ஒழுங்கு முறை உள்ளதே தவிர, காரண முறை உள்ளதாக தெரியவில்லை. தெரிந்தவர்கள் கூறலாம். முதல் இராசியினை சரம், இரண்டாம் இராசியினை ஸ்திரம், மூன்றாம் இராசியினை உபயம் என, மேசம் முதல் மீனம் வரையில் வரிசைப்படுத்தியுள்ளனர். இவற்றின் சிறப்புகளை எவ்வாறு பகுத்துள்ளனர் என்பதுடன், பலன் சொல்லும்போது இவை எவ்வாறு பயன்படுகின்றன என்பதையும், பின்னர் விரிவாகப் பார்க்கலாம்.



இராசிகளை மேலும் வகைப்படுத்தியுள்ளதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.


No comments: