சோதிடம் என்பதே பலன் உரைத்தல் என்பதுதான்.
ஒருவரின் வாழ்வில் நேற்றைய நிகழ்வுகள், இன்றைய நிகழ்வுகள், நாளைய நிகழ்வுகள் ஆகியவற்றை
அவரின் பிறந்த சாதகத்தினைக் கொண்டு, கணக்கிட்டு, பலன் உரைத்தல் என்பதுதான். அவ்வாறு
உரைக்கும் பலன் எத்தனை சதவீதம் மெய்ப்பிக்கப்படுகிறது என்பதில்தான் ஒரு சோதிடரின் திறமை
இருக்கிறது. இங்கு முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது என்னவென்றால் எவ்வளவு பெரிய சோதிடராக
இருந்தாலும் அவர் கூறும் பலனானது 100% மெய்ப்பிக்கப்படுகிறதா? எனும் கேள்விதான். நிச்சயமாக
இல்லை என்பதே என்னுடைய பதில். நான் கூறும் பலன்கள் 100% மெய்ப்பிக்கப்படுகிறது என கூறுபவர்கள்
யாரேனும் இருந்தால் தெரிவியுங்கள். அவரைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன், எனது குருவாகக்
கொள்வதற்கு.
பொதுவாக, சோதிடம் பார்க்கும்போது, சோதிடர்
உரைக்கும் பலன்களை நாம் மனதில் வாங்கிக் கொள்கிறோம். அது பலித்துவிடும்போது அந்த சோதிடரை
நினைவில் கொள்கிறோம். நிறைவேறாமல் போகும்போது அந்த சோதிடர் சொன்ன பலனையே மறந்துவிடுகிறோம்.
ஒரு சோதிடர் 10 பலன்களைக் கூறினால், நமக்கு
நிறைவேறும் பலன்களை மட்டுமே ஞாபகப்படுத்திக் கொள்கிறோம். அந்த சோதிடரையும் நினைவில்
கொள்கிறோம். பொருந்தாத அல்லது நிறைவேறாத பலன்களை மறந்தும் விடுகிறோம். அதாவது 10-ல்
மூன்று மெய்ப்பிக்கப்பட்டாலே அவர் ‘சரியாக கணிக்கும் சோதிடர்’ ஆகிவிடுகிறார். மற்ற
ஏழு மெய்ப்பிக்கப் படாததைப்பற்றி நாம் கவலை கொள்வதில்லை. கவலை கொள்வதில்லை என்பதைவிட
அவ்வாறு சொன்ன கணிப்புகளையே நாம் மறந்துவிடுகிறோம். அந்த சோதிடரும் நமது கணிப்பில்
ஏழு மெய்ப்பிக்கப் படவில்லையே என வருத்தம் கொள்வதும் இல்லை.
ஒரு சோதிடரின் கணிப்பு 80% சரியாக இருந்தாலே
அவர் சிறந்த சோதிடர் எனும் நிலையில்தான் தற்போதைய நிலை இருக்கிறது. அப்படி எனில்
100% சரியாகக் கணிக்க முடியாதா? 100 சதவீதம் கணிக்க முடியாதபோது, சோதிடம் எப்படி அறிவியல்
கணிதமாக இருக்க முடியும்?
சென்ற பதிவுகளில் சுட்டிக்காட்டியபடி, வானிலை,
வானியல், மருத்துவம் என எதுவுமே 100% சரியாகக் கணிக்க முடியாத நிலையில்தான் இருக்கிறது.
ஆனாலும் அவைகளின் நம்பகத்தன்மையானது காலங்கள்தோறும் வளர்ச்சி அடைந்து கொண்டேதான் இருக்கிறது.
ஆனால் சோதிடம் இன்னமும் வளர்ச்சி அடையவில்லை
என்பதே என்னுடைய தாழ்மையான கருத்து.
இந்த கருத்தானது தற்போதைய சோதிட அறிஞர்களுக்கு
நிச்சயம் ஏற்புடையதாக இருக்காது. ஏனெனில் இன்று சோதிடம் என்பது பரவலாக எல்லோருக்கும்
ஆர்வத்தினை உண்டாக்கும் கல்வியாக இருக்கிறது. நிறைய சோதிட அறிஞர்கள் நாட்டில் உள்ளனர்.
உருவாகிக்கொண்டும் உள்ளனர். நிறைய சோதிட புத்தகங்கள் கிடைக்கின்றன. வலைதளங்களில் என்னற்ற
சோதிடத் தகவல்கள் நிரம்பிக் கிடக்கின்றன. நிறைய சோதிட தகவல்கள் பரிமாறப்படுகின்றன.
பல்கலைக் கழகங்கள் சோதிடத்தினை பாடமாக ஏற்றுக் கொண்டுள்ளன. சோதிடத்தினை நம்பாதவர்கள்கூட
சோதிடத்தில் ஆர்வம் உடையவர்களாக இருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் கண்காட்சியில்
அதிக அளவு விற்கும் புத்தகங்கள் சோதிடம் தொடர்பானவையே. இவ்வளவு வளர்ச்சி இருக்கும்போது,
சோதிடம் இன்னமும் வளர்ச்சி அடையவில்லை என்பது தவறான கருத்து என்று கூறுவார்கள்.
நான் கேட்கும் ஒரே கேள்வி, சோதிடம் வளர்ச்சி
அடைந்திருக்கிறது என்றால் ஏன் உங்களால் 100% சரியான பலன் உரைக்க முடியவில்லை?
…மேலும்
தொடர்வோம்
No comments:
Post a Comment