Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Thursday, January 4, 2018

மருத்துவம் … அறிவியலா? அனுமானமா?




அறிவியலோடு ஒன்றிணைந்த துறை, மருத்துவம். அது சித்த மருத்துவம், ஆயுர்வேதம், ஹோமியோபதி, அல்லோபதி என பல்வேறு பிரிவுகளில் இருந்தாலும், மக்கள் அறிவியல் எனும் கண்ணாடியைக் கொண்டு பெரிதும் பார்ப்பது அல்லோபதி எனும் ஆங்கில மருத்துவத்தைத்தான்.


ஆங்கில மருத்துவமானது, ஆய்வுகள், ஆய்வுக் கருவிகள், உடற்கூறு அறியும் கருவிகள், நோய் அறியும் கருவிகள் என தன்னை மேம்படுத்திக் கொண்டே இருக்கிறது. அத்துனையும் அறிவியலின் வளர்ச்சி என்றால் மிகையல்ல.


அத்தனைக் கருவிகளும் ஆய்வுகளும் இருந்தாலும் ஒரு மருத்துவர் தன்னிடம் வரும் நோயாளியின் நோயை அறிவதற்கும் மருந்தளிப்பதற்கும் தன் அனுபவத்தினையும் யூகக் கணிதத்தினையும் (அனுமானத்தினையும்) மட்டுமே பயன்படுத்துகிறார் என்பதும் மறுக்க முடியாத உண்மை.


ஒரு மருத்துவ அனுபவம் (எனக்கு ஏற்பட்டது):

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு ‘தலைவலி’ எனும் நோய் வந்தது. ஒரு சமயம் முன்னெற்றியில் வலிக்கும். ஒரு சமயம் பின் மண்டையில் வலிக்கும்,  சில சமயம் மண்டை வெடித்துவிடுவதுபோல் வலிக்கும். முதலில், என் வீட்டிற்கு அருகில் உள்ள மருத்துவரிடம் சென்றேன். எப்போதும் அதிக கூட்டம் இருக்கும். அவர் கொடுக்கும் மருந்தினை மூன்று வேளை எடுத்துக் கொண்டாலே உடல் நலம் சீராகும். அவர் என்னிடம் சில விளக்கங்களைக் கேட்டுவிட்டு சாதாரண சைனஸ் தலைவலியாக இருக்கலாம் என மருந்து எழுதிக் கொடுத்தார். வலி குறைய வில்லை. மீண்டும் சென்றேன். இப்போது மாற்று மருந்து எழுதிக் கொடுத்தார். இப்போதும் வலி குறைய வில்லை. தூக்கத்திலும் வலி தொடர்ந்தது. மருத்துவத் துறையில் இருக்கும் எனது நண்பரிடம் கூறினேன். அவர் தனது சகோதரரான மருத்துவரிடம் அழைத்து சென்றார். அவர் முதுநிலை மருத்துவர். சில ஆய்வுகளை எடுத்த பின்பு, இது மைக்ரோன் எனும் தலைவலி. பொறுமையாகத்தான் போகும். ஒரு மாதம் ஓய்வும், மதியம் தூக்கமும் வேண்டும் என்று கூறி, மருந்துகளும் பரிந்துரைத்தார். ஆனாலும் வலி குறையவில்லை. வேறு சில நண்பர்களின் அறிவுறுத்தலின்படி (பயமுறுத்தலின்படி) நியூரோ சர்ஜன் எனப்படும் மருத்துவரிடம் சென்றேன். அவர் தலையினை ஸ்கேன் எடுத்து பார்த்துவிட்டு, தலையில் மூளைநரம்புகள் தொடர்பான  பிரச்சனைகள் ஏதும் இல்லை என்று கூறிவிட்டு, சாதாரண தலைவலி என்று மருந்துகள் எழுதிக் கொடுத்தார். அந்த மருந்துகளும் வேலைக்கு ஆகவில்லை. எனது நோய்பற்றிய செய்தி தெரிந்து எனது நண்பரும் ஹோமியோ மற்றும் அஃகுபஞ்சர் மருத்துவருமான திரு பத்மனாபன் என்னைத் தொடர்புகொண்டு அழைக்க அவரின் வீட்டிற்கு சென்றேன் (அவர் இலங்கையில் அஃகுபஞ்சரில் முதுநிலை மருத்துவம் முடித்தவர்). வழக்கமான சில நடைமுறை ஆய்வுகளை செய்துவிட்டு, இரத்த பரிசோதனை செய்துவரச் செய்தார். பின்னர், இதனை ஒருவாரத்தில் சரிசெய்துவிடலாம் என்று கூறி சிகிச்சியினைத் தொடர்ந்தார். ஹோமியோ மருந்தும் ஊசிகுத்தும் வைத்தியமும் தொடர்ந்தது. ஒருவாரத்தில் சரியாகவில்லை, என்றாலும் வலியில் சற்று குறைவு தெரிந்தது. நல்ல தூக்கம் வரத் தொடங்கியது. மேலும் ஒர் பதினைந்து நாட்கள் வைத்தியத்திற்குப்பின் அந்த தலைவலி முற்றிலும் நீங்கியது. அந்த தலைவலியானது ‘கல்லீரல் வலிமைக் குறைபாட்டினால்’ ஏற்பட்டுள்ளது என்றார். அதனால் பயப்பட ஒன்றுமில்லை என்றாலும், உரிய நேரத்தில் உணவு உட்கொள்ள வேண்டியது அவசியம் என்றார். கல்லீரலுக்கும் தலைவலிக்கும் தொடர்பு உண்டு என்பது புதிய செய்தியாக இருந்தது. இன்றும், நான் மறந்தாலும், மதியம் சரியாக ஒரு மணியளவில் எனக்கு தலைவலி வந்துவிடும். மதிய உணவை எடுத்துகொண்டபின் அது பறந்துவிடும்.


இந்த நிகழ்வில், மருத்துவர்களால் எனக்கு ஏற்பட்ட நோயினை ஏன் சரியாகக் கணிக்க இயலவில்லை. அனைவருமே மிகச் சிறந்த மருத்துவர்கள்தான். கைராசிக்காரர்கள் என்று பெயர் எடுத்தவர்கள்தான். அறிவியல்வழிக் கல்வியைக் கற்றவர்கள்தான்.


மருத்துவம் அறிவியலாக இருக்கலாம், அதற்கு உறுதுணையாக ஆய்வகங்களும், கருவிகளும் இருக்கலாம், ஆனாலும் நோயினை அறிவதற்கு அனுபவக் கணிதங்களும் அனுமானங்களும் தேவைப்படுகிறது என்பதனை யாரும் மறுக்க முடியாது. அனுபவக் கணிதங்களும் அனுமானங்களும் சரியான முறையில் பயன்படுத்தப்படுமானல் அவர் கைராசி மருத்துவர் ஆகிறார். மற்றவர்கள் மருத்துவராக மட்டுமே இருக்கின்றனர். மருந்துகள் எவ்வளவு இருந்தாலும், நோய்நாடி நோய்முதல்நாடி எனும் கண்டுணர்ந்த கணிதங்களும் அணுமானங்களும் மட்டுமே, ஒரு மருத்துவரால் சரியான மருந்தினைத் தேர்வு செய்ய முடிகிறது. மருத்துவ துறை அதீத வளர்ச்சி அடைந்திருந்தாலும், துள்ளியம் என்பது மருத்துவராக இருந்தாலும் ஒரு சிலருக்கே கைவரப்பெறுகிறது.


ஆக, அறிவியல் எனப்படும் மருத்துவமும் அனுமானங்களின் அடிப்படைக் கட்டுமானத்தில்தான் இயங்குகிறது. அங்கேயும் இணைவுகள் சேர்க்கைகள் (permutation & combination), நிகழ்தகவுகள் (probability) எனும் கணிதமுறைகள் பயன்படுத்தப் படுகின்றன.


கணிதம் சார்ந்த சோதிடமும் அப்படித்தான் என்பதில் உங்களுக்கும் உடன்பாடு இருக்கும் என எண்ணுகிறேன்.


பின்னர் ஏன் பலன் உரைத்தலின் நம்பகத்தன்மை குறைகிறது?

தொடர்வோம்….

[குறிப்பு:
மருத்துவம் தொடர்பாக ஒரு பெரிய மருத்துவமனையில் எனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவமும், அங்கு என் தந்தையை இழந்த கதையும் இங்கு பதிவு செய்யப்பட்டால் மருத்துவம் பொய் என்று சொல்லத் தோன்றும். ஆனால் மருத்துவம் பொய்யில்லை, மருத்துவர்கள் என்ற பெயரில் ????. அக்கட்டுரை பதிவினைத் திசைத்திருப்பும் என்பதால் தவிர்த்துவிட்டேன்.] 


No comments: