Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Wednesday, January 13, 2016

இலக்கினத்தின் இலக்கணம்


இலக்கினத்தைப் பொருத்தவரையில், அதன் வரையறை என்பது முதல் வீடு எனும் தலைப்பிற்குள் கொண்டுவரப்பட்டாலும், அதுவே முழுமையான வீடு எனும் கருத்தில்தான் கையாளப்படுகிறது. அதாவது, ஒருவரின் சாதகத்தில், இலக்கினத்தின் தன்மைகள் என பல்வேறு குண இயல்புகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. அதுபோலவே பன்னிரெண்டு வீடுகளுக்கும் தனித்தனி இயல்புகள் வரையறுக்கப்பட்டுள்ளன. ஆனாலும், இலக்கினம் என்பது தனிவரையறைக்குள் வகுக்கப்பட்டாலும், அதன் இயல்பு என்பது அனைத்து துறைகளையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் தலைமைச் செயலர் போலவே உள்ளது. அதாவது எந்த ஒரு வீடும் இலக்கினத்தின் தொடர்பில்லாமல் இருக்க முடியாது. பொதுவாக அனைத்து வீடுகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்போடு பின்னிப் பினைந்திருந்தாலும், தேவை எனில் ஒரு குறிப்பிட்ட வீட்டைத் தவிர்த்துவிட்டு மற்றொரு வீட்டின் பலனைக் கணிக்க முடியும். ஆனால், எந்த வீடானாலும், இலக்கினத்தைத் தவிர்த்து பலன் உரைக்கவே முடியாது. ஆகவே, இலக்கினம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தலைமைப் பொறுப்பில் உள்ளது. அதைத் தொடர்புபடுத்தும் விதத்தில், ஒருவரின் தலையில் தொடங்கி, மற்ற சில சிறப்புகளை உள்ளடக்கி இலக்கினத்தின் வரையறை வகுக்கப்பட்டுள்ளது. சில முக்கியச் சோதிட நூல்களில் இலக்கினத்தின் வரையறை எப்படியுள்ளது என்பதை பார்ப்போம்.

சோதிட நூல்
ஆசிரியர்
வரையறைகள்
பிருகத் சாதகம்
வராகமிகிரர்
உடல் அமைப்பு
பலதீபிகா
மந்திரேஸ்வரர்
தலை
சாராவளி
கல்யாண வர்மர்
தனம் மற்றும் வலிமை
பாவார்த்த ரத்னாகரம்
ஸ்ரீ இராமானுஜர்
ஒவ்வொரு இலக்கினத்திற்குமான தனித்தனி இயல்புகள்
புலிப்பாணி ஜோதிடம்
புலிப்பாணி

உடல் அமைப்பு, வயது, செல்வம், புகழ், குணம்
யவன காவியம்
யவனர்
கர்ப்பம், தனம், உருவ அமைப்பு, உயிர், தேகம், மகிழ்ச்சி, தலை, பிறவிகள், ஆயுள், புகழ்
உத்திர காலமிர்தம்
மகாகவி காளிதாசர்
உடல், உறுப்புகள், மகிழ்ச்சி, அறிவு, ஆயுள், குணநலன், தலை, தலைமை
ஜாதக அலங்காரம்
வரகவி கீரனூர் நடராசன்
உடல், நிறம், அழகு, தனம், தலை, வயிறு, புகழ், கவலை, ஆயுள்

இங்கு குறிப்பிடப்பட்டவை என்னிடம் உள்ள சில நூல்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இதில், பி.வி. இராமன், கணிதமேதை சகுந்தலா தேவி போன்ற சென்ற நூற்றாண்டில் நம்மோடு வாழ்ந்து தற்போது மறைந்தவிட்ட பல சோதிட அறிஞர்கள், மற்றும் தற்போதைய சோதிட ஆசிரியர்களின், குறிப்பாக மு. மாதேஸ்வரன், கீழவளவு சுப்பிரமணியன் போன்றோர்களின் தொகுப்பினைக் காரணமாகவே குறிப்பிடவில்லை. ஏனெனில் இவர்களின் வரையறைகள் எல்லாம், மேலே பட்டியலிடப்பட்ட ஆசிரியர்கள் உட்பட இங்கு விடுபட்டுப்போன பழங்கால சோதிட ஆசிரியர்களின் வரையரைகளின் தொகுப்பாகவே உள்ளன.

தற்போதைய சோதிடக் கணக்கில் இலக்கினத்தின் இயல்பு என்பது, மேலே குறிப்பிடப்பட்டவை உள்ளடங்கியதாகவும், சற்று விரிவானதாகவும் உள்ளது. மேலும், அத்தகைய இயல்புகள் மட்டுமே இலக்கினத்தின் வரையறையா என்றால் இல்லை என்றே சொல்லலாம். அதுபற்றி அடுத்த பதிவில் இன்னும் விரிவாகப் பார்க்கலாம்.



இலக்கினத்தின் வரையறை தொடரும்
.

No comments: