Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Wednesday, January 6, 2016

இராசியா? பாவகமா?



சோதிட ஆய்வுத் தொடரில் அடுத்து எழுத இருந்தது என்வகைக் கணிதம் எனும் அஷ்டவர்க்கம் பற்றிதான். ஆனால் சட்பலம், சட்வர்க்கம் முதலியன பற்றி எழுதும்போது அஷ்டவர்க்கம் எழுதினால் சரியாக இருக்கும் என்று தோன்றியதால் இப்போது அதைத் தவிர்த்து விட்டேன்.

அதற்கு முன்பு, இராசிச் சக்கரத்தில் வீடுகளின் அமைப்பினைப் பார்போம். இது பொதுவாக, சிறிதளவு சோதிடம் தெரிந்த அனைவருக்கும் தெரிந்ததுதான். இராசிக் கட்டத்தில் இலக்கினம் முதல் பன்னிரெண்டு வீடுகள் உள்ளன.

இலக்கினம் பற்றி முன்பே எழுதியிருக்கிறேன். இலக்கினம் – வான் கணித விளக்கம் எனும் தலைப்பில். அதாவது இலக்கினம் என்பது இராசி சக்கரத்தில் வான் கணித அடிப்படையில் எவ்வாறு குறிப்பிடப்படுகிறது என்பதை விளக்கியிருந்தேன்.

இலக்கினம் என்பதை சுருக்கமாகக் கூறுவதென்றால், ஒருவர் பிறக்கும்பொழுது, பூமியில் அவர் பிறக்கும் இடம் அன்றைய தினம் சூரியன் இருக்கும் இராசியிலிருந்து, அதாவது சூரியனுக்கு நேர் எதிரே இருந்து எவ்வளவு தூரம் (பாகை) விலகியிருக்கிறது என்பதும், அந்த விலகலில், அந்த இடம் எந்த இராசிக்கு நேராக இருக்கிறதோ அது தான் அவரது இராசி சக்கரத்தில் பிறக்கும்போது உள்ள இலக்கினம் என்றும் குறிப்பிட்டிருந்தேன். [மேலும் விளக்கம் வேண்டுபவர்கள் - இலக்கினம் – வான் கணித விளக்கம் எனும் பதிவினைப் பார்க்கவும்].

இராசி சக்கரத்தில் உள்ள 12 இராசிகளில் எந்த இராசியில் இலக்கினம் குறிக்கப்பட்டிருக்கிறதோ, அதுதான் அந்த சாதகத்தில் ‘முதல் வீடு’ அல்லது ‘முதல் பாவகம்’ என அழைக்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, இரண்டாம் வீடு அல்லது இரண்டாம் பாவகம், மூன்றாம் வீடு, நான்காம் வீடு, என பன்னிரெண்டு இராசிகள் வரை பன்னிரெண்டு பாவகங்கள் அல்லது வீடுகள் குறிக்கப்படுகின்றன.

அவ்வாறு குறிக்கப்படும் ஒவ்வொரு வீட்டிற்கும் சில பொதுவான பலன்களை சோதிட அறிஞர்கள் தொகுத்து வழங்கியுள்ளனர். அதில் முக்கியமானது, மனித உடலின் அமைப்பினை 12 வீடுகளுக்கும் பகிர்ந்தளித்திருப்பது ஆகும்.

ஆனால், இராசி சக்கரத்தில் ‘இராசிகளில் உடல் ஒதுக்கீடு’ அல்லது காலபுருசத் தத்துவத்தின்படி எவ்வாறு பிரித்து அளிக்கப்பட்டிருக்கின்றது என்பதை ஏற்கனவே பதிவு செய்துள்ளோம். அதன்படி, மேசம்-தலை எனத் தொடங்கி, மீனம்-பாதம் என பிரிக்கப்பட்டிருக்கிறது.

அதேவேளையில், சோதிட நூல்களில் இலக்கினம் முதற்கொண்டு பன்னிரெண்டு வீடுகளுக்கும்  நம் உடலின் உறுப்புகள் பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கின்றன. அதன்படி, இலக்கினம்-தலை எனத் தொடங்கி, பன்னிரெண்டு பாவங்களுக்கும் உடல் உறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அவை ஒரு ஒழுங்கு முறையில் அமையப்பெறவில்லை என்பதும் உண்மை. அதாவது, இலக்கினம்-தலை, உடல் அமைப்பு; இரண்டாம் பாவகம் – நாக்கு, கண்கள், விரல் நகங்கள்; மூன்றாம் பாவகம் – காது, கால்கள் என்பன போன்று அனைத்து வீடுகளுக்கும் பல்வேறு உறுப்புகளும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

அப்படியெனில் இங்கு ஒரு கேள்வி எழுகின்றது. உடல் அமைப்பு குறித்து மேசம் முதல் மீனம் வரை உள்ள இராசிகளைக் கணக்கில் கொள்வதா அல்லது இலக்கினம் முதல் 12 வீடுகளைக் கணக்கில் கொள்வதா?

பொதுவாக, பெரும் அளவில் இராசிகளையே உடல் உறுப்புத் தொடர்பான விளக்கங்களுக்கு சோதிட நூல்கள் பயன்படுத்துகின்றன. சில நுண்ணிய வேறுபாடுகளைக் கான்பதற்கு பன்னிரெண்டு வீடுகள் அல்லது பாவகங்களைப் பயன்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, இரண்டாம் இராசியான ரிசபம் முகத்தினைக் குறிக்கிறது. முகத்தில் உள்ள உறுப்புகளில் ஒன்று நாக்கு. பேச்சுத் திறன் குறித்த விளக்கங்களுக்கு, இரண்டாம் பாவகத்தில் உள்ள நாக்கு கணக்கில் கொள்ளப்படுகிறது. இதிலிருந்து தெரிவது என்னவெனில், இராசிகள் என்பன உடல் குறித்த பொதுப்பலன்களுக்கும், பாவகங்கள் என்பன உடல் திறன் சார்ந்த பலன்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. இதுபோலவே, சில பொதுப்படையான செய்திகள், இராசிகளுக்கும் வீடுகளுக்கும் அதாவது இவை இரண்டிற்கும் பொதுவில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

இராசிகள் என்பன பொதுப்பலன் குறித்த, எடுத்துக்காட்டாக – உடல், இரவு பகல், திசைகள், விலங்குகள், ஐவகை நிலைகள் போன்றவற்றின் பொது விவரங்களுக்கும், பாவகங்கள் என்பன அவற்றின் நுண்ணிய விளக்கங்களுக்கும் சோதிடத்தில் பயன்படுத்தப்படுகின்றன.

அதாவது – Macro analysis என்பது இராசிகளின் தன்மைகளுக்கும்  Micro analysis என்பது பாவகங்களின் தன்மைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. எனவே இவை இரண்டுமே, அவைகளின் தன்மைக்கேற்பவும், தேவைக்கேற்பவும் பயன்படுகின்றன. ஒன்றை விலக்கி ஒன்றைக் கொள்வது சரியல்ல என்பதே சோதிட அறிஞர்களின் கருத்தாகும்.

இனி – இலக்கினம் முதல் 12 பாவகங்களையும் சற்று விரிவாகக் காண்போம்.

அடுத்து - இலக்கினம்


No comments: