சாதகம் என்பது பல்வேறு வடிவங்களில்
கணிக்கப்பட்டாலும், அது தென்னிந்திய முறையாக இருந்தாலும், அல்லது வட இந்திய முறையாக
இருந்தாலும் அல்லது மேல் நாட்டு முறையாக இருந்தாலும், தொடக்கம் என்பது இலக்கினமாகத்தான்
இருக்கும். மேல் நாட்டு முறையில் இலக்கினம் என்று சொல்லாவிட்டாலும், இலக்கின பாகையினைத்தான்
முதல் வீடாகக் கணக்கில் கொள்கின்றனர்.
இலக்கினத்தை ஏன் முதல் வீடாகக்
கொள்ள வேண்டும்?. மேச இராசியை முதல் வீடாகக் கொள்ளக் கூடாதா எனும் கேள்வி எழும். காலபுருச
தத்துவத்தின்படி அதுதானே முதல் இராசி. (தமிழ்) ஆண்டு பிறப்பின்படியும் அதுதானே முதல்
இராசி. அதற்கு முக்கியத்துவம் ஏன் தரப்படவில்லை? இக்கேள்விக்கு பதிலை எளிமையாகக் கூற
வேண்டுமானால், சோதிட விதிப்படி, இலக்கினம்தான் முதல் வீடு.
இதை வேறொரு வகையில் நிரூபிக்க
முயற்சிப்போம்.
அண்டம், பிரபஞ்சம், பால்வீதி,
சூரியக் குடும்பம், கோள்கள், பூமி இவை பற்றியெல்லாம் நாம் ஏற்கனவே பதிவு செய்துவிட்டோம்.
சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களில் நமது பூமி மட்டும்தான் உயிரினம் வாழும் வீடு.
இங்குதான் நாம் பிறக்கிறோம், வாழ்கிறோம், மறைகிறோம். இந்த பூமியில் உயிர்கள் வாழ ஐம்பூதங்களைச்
சார்ந்துள்ளது. சூரியன் எனும் விண்மீன் இல்லை எனில் இரவு பகல் கிடையாது, தாவரங்கள்
பச்சையம் தயாரிக்க முடியாது, உயிர் வாழ உயிர்வளி(ஆக்சிஜன்) கிடையாது என்பதெல்லாம்,
நாம் படித்த பால பாடங்கள். எனவே நாம் சூரியனை, அதாவது அதன் கதிர் ஒளியை, கதிர் அலையைச்
சார்ந்தே வாழ்கிறோம்.
நாம் ஏற்கனவே கூறியபடி,
இலக்கினம் என்பது பிறக்கும்போது பூமியின் சுற்றில் சூரியனிலிருந்து எவ்வளவு தூரம் விலகி
இருக்கிறோம் அல்லது நெருங்கி இருக்கிறோம் எனும் புள்ளியே ஆகும். எனவே ஒருவர் பிறக்கும்போது,
அப்புள்ளியின் அமைவிடத்திற்கேற்ப சூரியக் கதிரின் ஒளியும் அலையும் ஏற்படுத்தும் தாக்கம்
மாறுபடும். எடுத்துக்காட்டாக, உச்சி வெயிலின் தாக்கமும் மாலை வெயிலின் தாக்கமும் வித்தியாசப்படுவதைப்போல.
இந்த பிரபஞ்சத்தில், நம் பூமியைப் பொருத்தவரையில் சூரியனே அருகில் உள்ள பெரும் விண்மீன்
என்பதாலும், சூரியனைத்தான் நமது பூமி சுற்றி வருகின்றது என்பதாலும், சூரியனின் முதல்
தாக்கமே நம்மை முதலில் பாதிக்கும் அல்லது வளமைப் படுத்தும்.
இங்கு ஒரு கேள்வி எழலாம்.
குழந்தை பிறக்கும் வரையில் தாயின் கருவறையில்தானே இருக்கின்றது. அப்போது ஏற்படாத தாக்கம்,
பிறந்தவுடன்தான் முதல் தாக்கமா? என்பதே. அது சார்ந்து இருப்பதற்கும் சுயமாக இருப்பதற்கும்
உள்ள வித்தியாசம்தான். சரி, பிறக்கும் போது சூரியனின் கதிர்கள் என்ன நேரிடையாகவாக குழந்தையின்மீது
படுகிறது? ஒரு அறையில், அதுவும் வெளிப்புறத்தாக்கம் ஏற்படாத அறையில் பிறக்கும் குழந்தையின்
மீது சூரியனின் கதிர்வீச்சு எப்படித் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்?
கொஞ்சம் அறிவியல். சூரிய
ஒளித் தகடு (சோலார் பேனல்) தெரியும் அல்லவா? அதன் மூலமாகத்தான் சூரிய ஒளி மின்சாரம்
தயாரிக்கப்படுகிறது. அந்த சூரிய ஒளித் தகட்டிற்கு சூரியனின் நேரடித் தாக்கம் இருந்தால்தான்
மின்சாரம் தயாரிக்கமுடியும் என்பது பெரும்பாலோரின் கருத்து. ஆனால் உண்மை என்னவெனில்,
மேகம் மூடி சூரிய ஒளி இல்லாதபோதும், அந்தத் தகட்டினால் மின்சாரம் தயாரிக்க முடியும்
என்பது உங்களுக்குத் தெரியுமா? தயாரிக்க முடியும் என்பது உண்மைதான் – நேரடியான ஒளியின்
பரவலில் அதிக மின்சாரத்தைத் தயாரிக்கும் தகடு, மேக மூட்டத்தில் திறன் குறைவாக மின்சாரம்
தயாரிக்கும். எப்படி எனில், சூரியனின் வெப்பம் முக்கியம் என்பதைக் காட்டிலும் சூரியனின்
வெப்ப அலைக் கற்றை (சோலார் ரேடியேசன்) மிக முக்கியம். அதாவது சூரியனின் வெப்ப அலைக்கற்றைதான்
மிக முக்கியமானது. அடுத்து, சூரியனின் காந்தப்புலம்,
சூரியனின் வான்கதிர் வீச்சு (ரேடியோ அலை), காமா கதிர்கள், பெயர் தெரியாத கதிர்கள் போன்றவை
எல்லாத் தடைகளையும் மீறி எதிலும் உட்புகும் சக்தி கொண்டவை என்பது அறிவியல் உண்மை.
எனவே, சூரியனின் முதல் தாக்கம்
நிச்சயம் பிறக்கும் குழந்தையின் மீது ஏற்படத்தான் செய்யும். அதாவது, உருகிய இரும்புக்
குழம்பை, நீரில் ஊற்றினால், ஊற்றும் விசைக்கேற்ப உருவம் அடைதல் போல, தாயின் கருவறையிலிருந்து
வெளிவரும் குழந்தையின் மீது புற வெளி காரணிகள் ஏற்படுத்தும் தாக்கம் இருக்கும் என்பதும்
உண்மை.
ஆகவே, சூரியனைச் சார்ந்து,
புவியின் பரப்பினைச் சார்ந்து, சூரியன்-புவி பாகை விலகலைச் சார்ந்து தீர்மானிக்கப்படும்
இலக்கினம் என்பது, குழந்தையின் மீது ஏற்படுத்தும் தாக்கம் இங்கு முதன்மையானதாகக் கருதப்படுகிறது.
இதனைக் கணக்கீடாகக் கொண்டால்
ஒரு சாதகத்தில், இலக்கினமே முதன்மையானது. அதுவே முதல் வீடாகவும் உள்ளது.
அப்படி எனில், சூரியன் இருக்கும்
இராசியை முதல் வீடாக ஏன் கொள்ளக் கூடாது? அதாவது சூரியன் எந்த இராசியில் இருக்கிறதோ
அந்த இராசியை ஏன் முதல் வீடாகக் கொள்ளக்கூடாது. அவ்வாறு முடியாது, ஏனெனில், சூரியன்
பொதுவாக ஒரே இராசியில் முப்பது நாட்கள் இருக்கும். பூமி 24 மணி நேரத்தில் தன்னைத்தானே
சுற்றிக் கொள்வதன் மூலம், தன்னை முழுமையாக சூரியனிடம் காட்டிக் கொள்வதுடன், மேலும்
30 பாகை அல்லது 2 மணி நேர அளவில் ஒவ்வொரு இராசிக்கும் இலக்கினப் புள்ளியைக் சுட்டிக்காட்டிக்
கொண்டிருக்கும். சூரியன் இருக்கும் இராசி என்பது வேறு, சூரியன்-புவி சுழற்சியைக் கொண்டு
தீர்மானிக்கப்படும் இலக்கினம் (இலக்கினப்புள்ளி) என்பது வேறு.
எனவே ஒரு சாதகத்தில், இலக்கினமே
முதன்மையானது. அதுவே முதல் வீடாகவும் உள்ளது. அதுவே சோதிட விதியாகவும் உள்ளது.
அடுத்து – இலக்கினத்தின் இயல்புகள்
No comments:
Post a Comment