சோதிடப் பயன்பாட்டில் உள்ள ஒன்பது கோள்களில் மூன்றாவது கோள் செவ்வாயாகும். வானியல் ஆராய்ச்சியில் மிகக் குறைந்த செலவில் செயற்கைக் கோளை அனுப்பிய நாடு நம் இந்தியா. அதே போல், எவ்வித கருவிகளும் இன்றி வானில் சிறு புள்ளிகளாகத் தோன்றும் கோள்களை ஆராய்ந்து வரிசைப் படுத்தியவர்களும் இந்தியர்களே. அவ்வாறே செவ்வாயையும் நமது முன்னோர்கள், வான் வெளி அசைவுகள், சிலக் கணிதக் குறியீடுகள், தொடர்நிகழ்வுகள் ஆகியவற்றின் மூலம் அறிந்து கொண்டதும் அல்லாமல், அதன் இயல் தன்மைகளையும் தொகுத்து வழங்கியுள்ளனர். செவ்வாய் என்பதன் தமிழ் விரிவாக்கம் செழுமை+வாய் எனும் பண்புத்தொகையாகும். அதாவது சிவப்பு நிறம் கொண்ட அழகிய வாய் அல்லது வாயில் எனும் பொருள் கொள்ளலாம். அதாவது, எவ்வித தொலை நோக்கியும் இன்றியே, செவ்வாய்க் கோளானது செந்நிறமானது என்பதை அறிந்து அப்பெயரை அளித்துள்ளனர். இந்தியில் மங்கள் என்பதற்கும் செழுமை என்பதே பொருளாக உள்ளது.
செவ்வாய்க்கான பொதுவான சோதிட வரையறையாக முதலில் வருவது சகோதரன் அடுத்து வருவது வீரம் அல்லது தைரியம்.
செவ்வாயின் பொது வரையறைகளைத் தொகுத்து வழங்குமுன், வானியல் அடிப்படையில் செவ்வாயின் இயல்தன்மைகளை நினைவு கூறுவோம்.
செவ்வாயின் இயல்தன்மைகள்:
செவ்வாய் ஒரு இளஞ்சிவப்புக் கோள். செவ்வாய், சூரியக் குடும்பத்தின் வரிசையில் நான்காவது திடக் கோள். பூமியின் விட்டத்தில் பாதி அளவு உடையது. பூமியின் எடையில் பத்தில் ஒரு பங்கே எடை உடையது. சூரியனைச் சுற்றிவர 687 நாட்கள் ஆகின்றது.
பூமியில் நிலப்பரப்பு எவ்வளவோ அவ்வளவு நிலப்பரப்பு செவ்வாயிலும் உள்ளது. எப்போதும் புழுதிப் புயல். இரும்பு ஆக்சிடுகள் அதிகம் இருப்பதால் சிவப்பாகத் தெரிகிறது. பூமியிலிருந்து காணப்படும் வடிவில் பாதி அளவுதான் செவ்வாய்க்கு சூரியன் தெரியும். செவ்வாய்க்கு இரண்டு நிலவுகள். சூரியக் குடும்பத்திலேயே செவ்வாயில்தான் மிகவும் உயரமான மலைச் சிகரம், அதாவது 21 கி.மீ. உயரமும் 600 கி.மீ. குறுக்களவும் கொண்ட மலை உள்ளது. செவ்வாயின் துகள்கள் (எரி கற்களாக) அவ்வப்போது பூமிக்கு வந்துகொண்டுதான் இருக்கின்றன. அவைதான் செவ்வாயைப் பற்றி ஆய்வதற்கு பெரிதும் துணைபுரிகின்றன.
பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாயில் கடலும் ஆறும் இருந்திருக்கக் கூடும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எரிமலைச் சாம்பல்களால் தற்போது நீர் இல்லை என கருதுகின்றனர். குளிர் தட்ப வெப்பமும், இலகுவான வான் வளி சூழலும் தண்ணீரைத் தக்கவைத்துக் கொள்ள ஏதுவாக இல்லை.ஆனால் துருவங்களில் நீர் பனிக்கடலாய் இருக்கலாம் எனும் கருத்தும் உண்டு.
கரியமில வாயு 95%, நைட்ரஜன் 3%,
மற்றவை 2% உள்ள வளிமண்டலம் கொண்டது செவ்வாய். செவ்வாயும் பூமியைப் போல் சற்றே சாய்ந்திருப்பதால், இங்கும் பருவநிலை மாற்றம் உண்டு.
செவ்வாய்க்கு காந்தப்புலம் இருப்பதைப் பற்றி இருவேறு கருத்துக்கள் உள்ளன. செவ்வாயின் தென் துருவத்தில் இன்னமும் காந்தப்புலம் இருக்கிறது என்றும் சொல்லுகிறார்கள்.
சில குறிப்புகள்
·
சூரியனிலிருந்து 228 மில்லியன் கி.மீ. தூரத்தில் உள்ளது.
·
சூரிய மண்டலத்தில் நான்காவது கோள்.
·
சூரியனின் வெளிவட்டப்பாதையில் உள்ள கோள்களில் முதலாவது கோள்.
·
பூமியைப் போலவே தன்னைத்தானே சுற்றிக் கொள்ள 24 மணி நேரம் ஆகின்றது.
·
சூரியனைச் சுற்றிவர எடுத்துக்கொள்ளும் கால அளவு 687 நாட்கள்.
·
திடக் கோள். பாறைகளும், எரிமலைக் குழம்பின் மிச்சங்களும் விரவிக் கிடக்கின்றன.
·
தற்போதைய கருத்துக்களின்படி மனிதன் வாழக்கூடிய சூழல் இல்லை.
·
செவ்வாயிலும் காந்தப்புலம் இருக்கிறது.
இவைதான் பொதுவாக செவ்வாயைப் பற்றி வானியல் அறிஞர்கள் தெரிவித்துள்ள அறிவியல் கருத்துக்கள். இரும்பு ஆக்சைடுகள் அதிகம் இருப்பதால் செவ்வாயானது சிவப்பாகத் தெரிவதாக பதிவு செய்துள்ளனர்.
இனி செவ்வாயின் பொதுவான சோதிட வரையறைகளைக் காண்போம்.
செவ்வாய் தொடரும்….
No comments:
Post a Comment