சந்திரனின்
காரகத்துவம் (Portfolio) என்பதில் முதன்மையானது சாதகனின் தாயார். இந்த பூமிக்கு பகலில்
சூரியனும், இரவில் சந்திரனும் ஒளி கொடுக்கும் செம்மல்கள். இன்று மின்சாரம் என்பது உணவு,
உடை, உறைவிடம் என்பதற்கு அடுத்து நான்காவது நிலையில் உள்ளது. இரவில் மின்சாரமே இல்லையெனில்
எப்படி இருப்போம் என எண்ணிப்பாருங்கள். ஆனால் மின்சாரம் பயன்பாட்டிற்கு வராத, அல்லது
நாகரிக வளர்ச்சி அடையாத பழைய நாட்களில் மக்கள் இருளைக் கண்டு அஞ்சி நடுங்கியபோது, சந்திரன்
மட்டுமே வெளிச்சம் கொடுத்தது. அதனால் சந்திரனையும் தெய்வமாகப் போற்றியுள்ளனர். ரிக்
வேதத்தில் இப்போது வழிபடும் தெய்வங்கள் கிடையாது என்றும், சூரிய சந்திரர்களையே தெய்வமாக
வழிபட்டு வந்துள்ளனர் என்றும் படித்திருக்கிறேன். ஆக, சூரியனைத் தந்தையாக முதன்மைப்
படுத்தியவர்கள், இரவில் ஒளிதரும் சந்திரனைத் தாயாக உருவகப்படுத்தியுள்ளார்கள். அதனால்
சந்திரனின் சோதிட வரையறையின் முதன்மையானதாக தாயை வரையறை செய்துள்ளனர். இதன் பொருத்துவிதி
(applicability law), சோதிடத்தில் மெய்ப்பிக்கப்பட வேண்டும்.
சந்திரனின் பொது வரையறைகள்:
தாய்
இரவு
உடல்
மனம்
பெண்கள்
அழகு
நீர்
கற்பனை
முன்பே கூறியபடி இவை பொதுவாக அனைத்து சோதிட நூல்களிலும்
தொகுத்து வழங்கப்பட்டவையாகும்- மற்றவை இவற்றின் விரிவுகளாகும்.
தாய்
என்பதற்கு விளக்கம் மேலே கொடுக்கப்பட்டுவிட்டது.
உடல்
என்பதற்கு – சூரியன் உயிர்க்கு காரணமாக இருப்பதால், அடுத்த அதிக பட்ச ஒளியைத் தரும் சந்திரனை உடலுக்குக் காரணாமாகக் கொடுத்துள்ளனர்.
இரவில்தான்
சந்திரனின் தேவை ஏற்படுவதால், இரவுக்குக் காரணமாக கொடுக்கப்பட்டுள்ளது.
அடுத்து,
மனம் என்பதைப் பார்ப்போம். மனம் என்பது மூளையின் எண்ணச் செயல்பாடுகள். கற்பனை, உணர்ச்சி,
மனப் பிறழ்வு, நினைவுத் திறன் என இவற்றை விரித்துச் சொல்லலாம். பூமியானது தட்பவெட்ப
நிலைக்கு சந்திரனையும் சார்ந்திருப்பதாக வானியல் ஆய்வாளர்களும், வானிலை ஆராய்ச்சியாளர்களும்
கூறுகின்றனர். கடலில் ஏற்படும் இடை உவா ஏற்றங்கள் – அதாவது முழுநிலவு, இருள்நிலவு நாட்களில்
கடலில் ஏற்படும் மாற்றங்களுக்கு – சந்திரனே காரணம் என மெய்ப்பிக்கப்பட்டுள்ளன. அதாவது,
சந்திரனின் காந்தப்புலம் ஏற்படுத்தும் விளைவுகளே இதற்குக் காரணம். இந்தக் காந்தப்புலமானது
மனித மூளையின் எண்ணச் செயல்பாடுகளுக்கும் காரணமாக உள்ளது. அதாவது தெளிவான மனநிலை, தெளிவற்ற
மனநிலை ஆகிய இருநிலைகளுக்கும் காரணமாக உள்ளது. ஆகவே, சந்திரனின் வரையறையில் மனம் முக்கியப்
பங்கு வகிக்கிறது. அதில் கற்பனையும் அடங்கியுள்ளது.
தொன்றுதொட்டே,
எல்லா மொழி இலக்கியங்களும், சந்திரனைப் பெண்களுக்கும் பெண்களோடு தொடர்புடைய அழகியலுக்கும்
தொடர்பு படுத்தி காப்பியங்களும் கவிதைகளும் செய்துள்ளன. இரவில் ஒளிரும் அழகு அதற்குக்
காரணமாக இருக்கலாம்.
அடுத்து,
சந்திரனை நீருக்குக் காரகன் என சோதிட நூல்கள் கூறுகின்றன. தற்போதைய வானியல் ஆய்வுகள்,
சந்திரனில், நமது பூமியின் கண்களுக்குப் புலப்படாத, மற்றொரு பகுதியில் உரைநிலையில்
தண்ணீர் இருப்பதாக தெரிவிக்கின்றன.
ஆக,
சந்திரனின் சோதிட வரையறைகள் எனக் கொடுக்கப்பட்டவைகள், சந்திரனின் இயல்தன்மையோடு பெரும்பாலும்
ஒத்துப்போகின்றன. ஆனாலும் இவை ஒரு தனிமனித சாதகத்தில் எவ்விதம் விளைவை ஏற்படுத்துகின்றன
என்பது, மனம் சார்ந்த வரையறையோடு ஒத்துப்போவதைப்போல், பிறவற்றோடு ஒத்துப்போவதை தர்க்க
முறையில் மட்டுமே ஏற்க வேண்டியுள்ளது.
இருப்பினும்,
இந்தப் பொது வரையறைகள், சோதிட பயன்பாட்டில் பெருமளவில் மெய்ப்பிக்கப்பட்டுள்ளன. அது
நிகழ்தகவு எனும் கணித தேற்றமாகவும் இருக்கலாம் அல்லது தொன்றுதொட்டு வரும் சோதிடப் பதிவுகளாகவும்
இருக்கலாம்.
அடுத்து… செவ்வாய்.
No comments:
Post a Comment