Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Thursday, December 31, 2015

இராசி பலனும் – புத்தாண்டு நல்வாழ்த்துக்களும்




அனைவருக்கும் இனிய புத்தாண்டு-2016 
நல்வாழ்த்துக்கள்


பொதுவாக அனைத்து நாளிதழ்களும், வார இதழ்களும் இராசி பலன் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. அதுவும் குறிப்பாக, தமிழ்ப் புத்தாண்டு, ஆங்கிலப் புத்தாண்டு, ஆண்டிற்கு ஒருமுறை வரும் குரு பெயர்ச்சி, ஒன்றரை ஆண்டிற்கு ஒருமுறை வரும் இராகு-கேது பெயர்ச்சி, இரண்டறை ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் சனிப் பெயர்ச்சி ஆகியவற்றின்போது வெளியிடப்படும் இராசி பலன்களைப் படிப்பதற்கு எல்லோருக்கும் இருக்கும் ஆர்வத்தினைப் பயன்படுத்திக் கொள்கின்றன. பலன்களை எழுதுபவர்கள் பெரும்பாலும், மக்கள் அறிந்த சோதிடர்கள் அல்லது புகழ் பெற்ற சோதிடர்கள்தான்.

இந்தச் சூழலின்தான் எனது நண்பர்களும், நிமித்திகனைத் தொடர்பவர்களும் என்னிடம் வைக்கும் கோரிக்கை, ‘நீங்களும் இராசி பலன் ஏன் எழுதக் கூடாது?’ என்பதுதான். நான் விடையாகத் தருவது சிறு புன்னகைதான்.

என்னைப் பொருத்தவரையில், இராசி பலன் என்பது, விழியிழந்த ஐவர் யானையைத் தடவிப்பார்த்து உருவை வர்ணித்தற்கு ஒப்புதான் இருக்கும். ஏனெனில் இராசி பலன் என்பது, சந்திரன் இருக்கும் இராசியைக் கொண்டு, தற்போதையக் கோள்களின் நகர்வு நிலையினைக் கருத்தில் கொண்டு, பலன் உரைப்பதுதான். அது எந்த அளவிற்கு பலனை முழுமையாக சொல்லிட உதவும் என்பது மிகப்பெரும் வினாவாகும்.

சோதிடம் என்பதன் அடிப்படை விதி – ஒருவர் பிறக்கும்போது இலக்கினம் முதலாவதாகக் கொண்டு, பன்னிரெண்டு இராசிகளில் நிரவிக் கிடக்கும் ஒன்பது கோள்களின் நிலையினைக் கணக்கிட்டு கூறப்படும் ‘சாதகத்தினை’ அடிப்படையாகக் கொண்டது. அதில் முக்கியத்துவம் தரப்படுவது, இலக்கினம் இருக்கும் இராசியும் சந்திரன் இருக்கும் இராசியும் ஆகும். அதிலும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது இலக்கினம் மட்டுமே. ஆக, ஒருவரின் சாதகத்தின் பெருமளவு பலன்களைத் தீர்மானிப்பது – இலக்கினம் சார்ந்த கோள்களின் நிலையே.

அப்படி என்றால், சந்திரனை அடிப்படையாகக் கொண்ட இராசிக்கு பலன் உரைப்பது தவறா? தவறு என்று கூறுவதைக் காட்டிலும், பலனின் நம்பகத்தன்மை குறைவு என்பதுதான் உண்மை. இது அனைத்து சோதிடர்களுக்கும் தெரியும்.

சோதிட பலனை உரைக்க, மூன்று முக்கிய நிலைகளைக் கணக்கில் கொள்ள வேண்டும் என சோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. அதனைச் சுருக்கமாக – விதி – மதி – கதி என சொல்லுவர்.

விதி என்பது – பிறக்கும்போது உள்ள, இலக்கினம் முதற்கொண்டு பன்னிரெண்டு இராசிகளையும், ஒன்பது கோள்களையும் கணக்கில் கொண்டு கணிக்கப்படும் சாதகமாகும். இதைக் கொண்டே பலன்கள் உரைக்கப்பட வேண்டும் என்பது விதி.

மதி என்பது – பிறப்பு சாதகத்தில் சந்திரன் இருக்கும் இராசியில் உள்ள விண்மீன்களில் எந்த கோளின் சாரத்தில் சந்திரன் இருக்கிறதோ, அதனை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படும், தசா புத்தி பலன்கள். விதிக்கப்பட்ட சாதகத்தில் உள்ள பலன்கள் எப்போது நடைபெற வாய்ப்புள்ளது என்பதை அறிந்து கொள்ள உதவுவது.

கதி என்பது – அந்தந்த காலக் கட்டத்தில் கோள்கள், பன்னிரெண்டு இராசிகளில் இருக்கும் நிலையினைக் கொண்டு, பிறப்பு சாதகத்தில் சந்திரன் இருந்த இராசியின் அடிப்படையில் தற்போது கோள்கள் எங்குள்ளன, அவற்றால் ஏற்படும் பலன்கள் யாவை என்பதைக் கணிப்பதாகும். இந்தக் கணிப்பு என்பதன் வலிமை என்பது பிறப்பு சாதகத்தில் உள்ள வலிமை வாய்ந்த கோள்கள், வலிமை இழந்த கோள்கள் ஆகியவற்றின் தன்மையினைச் சார்ந்தே தீர்மானிக்கப்பட வேண்டும்.

இதன்படி, பிறப்பு சாதகத்திற்கு (இலக்கின அடிப்படை சாதகத்திற்கு) கிடைக்கும் பலன்களின் வலிமை என்பது 60% - 80% வரையிலும், தசா புத்தி பலன்களுக்கு 20% - 30% வரையிலும், நிகழ்காலக் கோள்களின் நகர்வினைக் கொண்டு கணக்கிடப்படும் இராசி பலன்களுக்கு 10% - 20% பலன்களும் என்பதே கணக்கீடாகும்.

அதனால்தான் இராசி பலன் எழுதும் சோதிடர்கள் – “ இது பொது பலன் மட்டுமே – அவரவர் பிறப்பு சாதகத்திற்கு ஏற்ப பலன்கள் மாறுபடும் “ என கருத்தைத் தெரிவித்து தப்பித்துக் கொள்வார்கள்.

பிறப்பு சாதகத்திற்கேற்ப பலன்கள் மாறுபடும் எனில், பொது இராசி பலன் ஏன் வெளியிட வேண்டும். இந்த இராசி பலனின் மீது நம்பிக்கைக் கொண்டிருப்பவர்களை ஏன் ஏமாற்ற வேண்டும்.

சோதிடம் பொய்யாய் போவதற்கு உரிய காரணிகளில் இதுவும் ஒன்று.

இந்த இராசி பலன் எவ்வாறு கணிக்கப்படுகிறது, இந்த கணிப்பு முறை ஏன் ஏற்பட்டது என்பது பற்றி பின்னர் வரும் ‘சோதிட ஆய்வில்’ விரிவாக விவரிக்கலாம்.

ஆக, நாளிதழ்களிலும் ஊடகங்களிலும் வரும் இராசி பலனைப் படித்து விட்டு, எவரும் வருத்தப்படவும் வேண்டாம், பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும் என்று மகிழ்ச்சி அடையவும் வேண்டாம்.

உங்களின் தனிப்பட்ட சாதகத்தால் மட்டுமே உங்களுக்குரிய பலனைக் கணக்கிட முடியும். இராசி பலன்கள் ஊறுகாய் மட்டுமே, அதுவே உணவல்ல.

இந்த புத்தாண்டில் அனைத்து  இராசிக்காரர்களும்  எல்லா நலமும் பெற்று வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்.

அன்புடன் –
நிமித்திகன்.



No comments: