Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Saturday, December 20, 2014

இராசிச் சக்கரத்தில் இட ஒதுக்கீடு -1


            360 பாகைகள் கொண்ட இராசி மண்டலமானது, 30 பாகைகள் கொண்ட பிரிவாகப் பிரிக்கப்பட்டு, 12 இராசிகளாக, அதாவது, மேசம் முதல் மீனம் வரை வரையறை செய்ததே இராசிச் சக்கரம் எனப் பார்த்தோம்.


            இந்த இராசிச் சக்கரத்தில் உள்ள 12 இராசிகளும், ஒவ்வொரு கோள்களின் ஆதிக்கத்தில் உள்ளதாக சோதிட நூல்கள் கூறுகின்றன. மேசத்திற்கு செவ்வாயின் ஆதிக்கமும், ரிசபத்திற்கு வெள்ளியின் ஆதிக்கமும் என 12 இராசிகளுக்கும் கீழ்கண்டவாறு அமையப் பெற்றுள்ளன.


இராசி
கோள்
இராசி
கோள்
மேசம்
செவ்வாய்
துலாம்
வெள்ளி
ரிசபம்
வெள்ளி
விருச்சிகம்
செவ்வாய்
மிதுனம்
புதன்
தனுசு
வியாழன்
கடகம்
சந்திரன்
மகரம்
சனி
சிம்மம்
சூரியன்
கும்பம்
சனி
கன்னி
புதன்
மீனம்
வியாழன்


            இவ்வாறு அமையப் பெற்றதற்கு ஏதேனும் ஒரு விதிமுறை இருந்தாக வேண்டும். புராணக் கதைகளில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும், இது பற்றிய ஒரு கதை, மறைவாகச் சிலக் குறிப்புகளை உணர்த்தி செல்கிறது. கதையை முதலில் தெரிந்து கொள்வோம்.


            இராசி மண்டலத்தில் உள்ள 12 இராசிகளும், சந்திரனுக்கும் சூரியனுக்கும் மட்டுமே சொந்தமாக இருந்ததாகவும், இருவரும் (சூரியன்சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம்) (சந்திரன்கடகம், மிதுனம், ரிசபம், மேசம், மீனம், கும்பம்) முறையே ஆறு இராசிகளைக் கொண்டிருக்க, முதலில் புதன் தமக்கு ஒரு இராசி (வீடு) வேண்டுமென்று சூரியனிடம் கேட்க, சூரியன் தமக்குரிய கன்னி இராசியைப் புதனிடம் கொடுத்துவிட்டார். சூரியனிடம் பெற்றது போதாது என்று சந்திரனிடமும் சென்று ஒரு இராசியைக் கேட்க சந்திரனும் மிதுன இராசியைப் புதனுக்கு வழங்கி விட்டார். ஆக, இருவரிடமும், தலா ஒரு இராசி வீதம் இரண்டு வீடுகளைப் புதன் பெற்றுக் கொள்கிறார். இதைக் கேள்விப் பட்ட சுக்கிரன், செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகியோர் அவ்வாறே, ஆளுக்கொரு இராசியை, சூரியனிடமிருந்தும், சந்திரனிடமிருந்தும் பெற்றுக் கொள்ள, கடைசியில் சூரியனுக்கு சிம்மமும், சந்திரனுக்கு கடகமும் மட்டுமே மிஞ்சுகிறது. ஆக சந்திரனுக்கு ஒரு வீடு, சூரியனுக்கு ஒரு வீடு மட்டுமே சொந்த வீடாக கிடைக்க, மற்றக் கோள்களுக்கு தலா இரண்டு வீடுகள். இதைக் கேள்விப்பட்டு, இராகுவும் கேதுவும் தமக்கும் வீடு வேண்டுமென்று கேட்க, சந்திரனும் சூரியனும், தங்களுக்கே ஒரு வீடுதான் உள்ளது என்று தங்கள் இயலாமையைக் கூறி, இராகுவும் கேதுவும் எந்த வீட்டில் இருக்கிறார்களோ, அந்த வீடே அவர்களுக்குச் சொந்த வீடு என்று வாழ்த்தி அனுப்பிவிடுகின்றனர். அது சரி, இராகுவும் கேதுவும் கோள்களா என்று கேட்கிறீர்களா? அதுபற்றி பின்னர் விரிவாகப் பார்க்கலாம். கதை நன்றாக இருந்ததல்லவா?
           

            ஆனால் உண்மையில், இவ்வாறு அமையப் பெற்றதற்கு வானியல் விதிதான் காரணமாக இருக்க வேண்டும்.
           

            மீண்டும் வான் வீதிக்கு வருவோம். புவியானது தனது அச்சில் இருந்து 23.5 பாகைகள் சாய்ந்திருக்கிறது என்று பார்த்தோம். அதன் விளைவாக, பூமி மையக் கோடானாது, வான் மையக் கோட்டிற்கு 23.5 பாகைகள் சாய்வாக விலகி இருக்கிறது. இந்தச் சாய்வுடன் தான், பூமியானது சூரியனைச் சுற்றி வருகிறது. அதன் விளைவுதான், பருவ மாற்றங்கள் ஏற்பட்டு புவியில் மழையும் வெயிலும் மாறி மாறி ஏற்படுகின்றன. அதனால் தான் பயிர்களும் உயிர்களும் செழித்து வளர்கின்றன.


            பூமி மையக் கொள்கையின்படி, சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைகிறது. ஆனால் ஆறு மாத காலம் கிழக்கிலிருந்து வடக்கே சற்றுத் தள்ளியும், மற்றொரு ஆறு மாத காலம் கிழக்கிலிருந்து தெற்கே சற்றுத் தள்ளியும் தோன்றி, மேற்கில் அதற்கேற்ப தள்ளியே மறைகிறது. இதனை வட நகர்வு (உத்ராயணம்) தென் நகர்வு (தட்சினாயணம்) என்று நாம் அழைக்கிறோம்.



            சூரிய மையக் கொள்கையின் படி, பூமியானது சூரியனைச் சாய்வாகவே சுற்றி வருகிறது. அந்தச் சாய்வினால் ஏற்படும் சுற்றுப் பாதையும் சற்று மேலும் கீழுமாக விலகிச் செல்வதால், சூரியனின் கதிரானது, எப்பொழுதும் சமமாகப் புவியின் மேல் படுவதில்லை. ஆறுமாத காலம் வட பகுதியிலும், ஆறுமாத காலம் தென் பகுதியிலும் சூரியனின் கதிர்கள் நிறைவாகவும், எதிர் திசையில் குறைவாகவும் பாய்கிறது.


No comments: