Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Tuesday, December 30, 2014

இராகுவும் கேதுவும் – கோள்களின் கணக்கில்-1



            கோள்களுக்கான இட ஒதுக்கீட்டில், இராகுவும் கேதுவும் இல்லை என்று பார்த்தோம். முதலில் அவை கோள்களா என்பதிலேயே ஐயம் உண்டு. சோதிடத்தில், விண்மீனான சூரியனையும், துணைக் கோளான சந்திரனையும், கோள்கள் என்ற கணக்கில்தான் கையாள்கின்றனர். புவியிலிருந்து கணக்கீடு செய்வதால், பூமியைக் கோளாகக் கணக்கில் கொள்வதில்லை.

            வானியல் கணக்கில் கோள்கள் எனும் வரையறைக்குள் கொண்டுவரப்படாத இராகுவும் கேதுவும் சோதிடத்தில் கோள்கள் எனும் கணக்கில் கொண்டுவரப்பட்டுள்ளன. காண முடியாத கோள்கள் என்பதால், இவற்றை நிழற்கோள்கள் எனும் வரையறைக்குள் கொண்டுவந்துள்ளனர்.

விரிவாகப் பார்ப்பதற்கு முன் இந்த இரண்டு நிகழ்வுகளைப் படியுங்கள்



(1) சென்ற வாரம், குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக, நான் என் குடும்பத்துடன், நான்கு சக்கர வாகனத்தில் பயணித்தேன். வாகனத்தை நான் தான் ஓட்டிச் சென்றேன். மாலை நேரம். பெருஞ்சாலையின் சந்திப்பில், பச்சை விளக்கு அனுமதிக்காகக் காத்திருந்தேன். பத்து மணித்துளிகள் கழிந்திருக்கும். திடீரென்று, எனது வாகனம் பின்னோக்கி நகரத்தொடங்கியது. எனக்கு முன்னிருந்த வாகனங்களை விட்டு வேகமாக பின்னோக்கி நகரத்தொடங்கியது. நான் தடைப் பலகையை (பிரேக்) எவ்வளவு அழுத்தியும், நகர்தல் குறைய வில்லை. பின்னால் உள்ள வாகனங்கள் ஒலி எழுப்பத்தொடங்கி விட்டன. சட்டென்று வியர்த்துப்போய், அருகில் அமர்ந்திருந்த என் மகளிடம் கேட்டேன். “வண்டி பின்னால் போகிறதா?” அவள், “இல்லையே, ‘சிக்னல்போட்டுவிட்டார்கள், நீங்கள் தான் நகராமல் இருக்கிறீர்கள், பின்னால் உள்ளவர்கள்ஹார்ன்அடிக்கிறார்கள்என்றாள். சட்டென்று உரைத்தது. காட்சிப் பிழைமுன்னால் இருந்த வாகனங்களை உற்று நோக்கியபடியே இருந்ததால், அவை நகரத் தொடங்கியதும், நகராமல் இருந்த எனக்கு, என் வாகனம் பின்னோக்கி நகர்வதுபோல் தோன்றிவிட்டது. அப்பாடா என்று பெருமூச்சு விட்டு வண்டியை ஓட்டத் தொடங்கினேன். காட்சிப் பிழை என்னைக் கலங்கடித்து விட்டது.




(2) Kekule எனும் வேதியல் அறிஞர். பென்சீன் (Benzene) எனும் வேதிப்பொருளின் கட்டமைப்பை முடிவு செய்வதில் காலத்தைக் கழித்துக் கொண்டிருந்தார். அது கார்பனும் ஹைட்ரஜனும் சேர்ந்ததொரு கலவை. அதன் வடிவை வரையறை செய்ய முயன்றபோது அவரால் முடியவில்லை. நினைவு கனவு இரண்டிலும் பென்சீன் வந்து போய்க்கொண்டிருந்தது. கட்டமைப்பின் உள்ளே உள்ள மூன்று இரட்டை எலக்ட்ரான்கள் நிலையில்லாமல் சுற்றிக் கொண்டிருந்தன. ஒரு நாள், இதனை எப்படி வரையறை செய்வது என்று தெரியாமல், குழம்பி, தூங்கிப் போனார். தூக்கத்தில் பாம்பு வந்தது. அவரைத் துரத்தியது, அவரைச் சுற்றியது. அவர் அதனிடமிருந்து சட்டென்று தப்பித்துக் கொள்ள, ஆவென்று வாயைப் பிளந்து வந்த பாம்பு, தன் வாலையே விழுங்க ஆரம்பித்தது. சட்டென்று கனவு கலைந்து எழுந்தார். வரையறைப் பிடிபட்டுவிட்டது. பென்சீனின் கட்டமைப்பு, பாம்பு தன் வாலைத் தானே விழுங்குவதுபோல் இருக்கிறது என்று குறிப்பெழுதினார். இன்றுவரை, வேதியியல் படிப்பவர்கள், பென்சீனை நினைவிற்கொள்ள, பாம்பையே நினைவில் கொள்கின்றனர்.




            இந்த இரண்டு சம்பவங்களுக்கும், இராகு கேதுவிற்கும் என்ன தொடர்பு? முன்னதில் பின்னோக்கி நகர்வு (கற்பனை நகர்வு) இருக்கிறது, பின்னதில் பாம்பு இருக்கிறது. இரண்டையும் இணைத்தால், இராகு கேது கிடைக்கும். தொடர்வோம்


No comments: