Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Tuesday, February 23, 2016

சூரியன் – சோதிட வரையறை – சென்ற பதிவின் தொடர்ச்சி



இந்தத் தனிமங்கள் அவற்றின் எலக்ட்ரான்கள், புரோட்டான்கள், நியூட்ரான்கள் ஆகியவற்றின் எண்ணிக்கையினை வைத்தே, 118 தனிமங்களாகப் வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒரே ஒரு எலக்ட்ரான் கொண்டது ஹைட்ரஜன் அணு. அதற்கடுத்து இரண்டு எலக்ட்ரான்கள் கொண்டது ஹீலியம் அணு. இவ்வாறே அணைத்து தனிமங்களும் 118 எலக்ட்ரான்கள் வரை அடுக்கப்பட்டுள்ளன. ஹைட்ரஜன் எனும் தனிமம் அணுப்பிணைவு (அணுச் சேர்க்கை) எனும் கொள்கையின்படி, இரண்டாக சேரும்போது, இரண்டு எலக்ட்ரான்கள் கொண்ட ஹீலியமாக மாறுகிறது. இவ்வாறே, பிற தனிமங்களும் உருமாற்றம் அடைந்திருக்கின்றன.

இதிலிருந்து தெரிவது என்னவென்றால், ஹைட்ரஜன் இன்றி ஒரு அணுவும் அசையாது. ஹைட்ரஜன் அணுவே ஆரம்பம். அதற்கும் ஆதி மூலம் ஹிக்போசான் எனப்படும் “கடவுள் இல்லா துகள் (No God’s Particles) அல்லது கடவுள் துகள் (God’s Particles)” என்பதாக இருக்கலாம் என தற்போது கண்டுபிடித்து ஆய்வு செய்து கொண்டுள்ளனர். ஆக, இந்த பிரபஞ்சத்தில் உள்ள நமது சூரியக் குடும்பம், சூரியனைத் தலைவனாகக் கொண்டு சுற்றிவரும் வேளையில், நமது சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்கள் அனைத்தும் சூரியனிலிருந்தே பிரிந்தன, பிறந்தன எனும் கருத்திற்கேற்ப, அனைத்துக் கோள்களுக்குமே ஆதாரம் ஹைட்ரஜன்தான். பூமிக்கும் அதுவே, பூமியில் பிறந்த உயிரினங்களுக்கும் அதுவே, சாதகக் கணக்கிற்கு உட்பட்ட மனிதர்களுக்கும் அதுவே. அத்தகைய ஹைட்ரஜனுக்கு ஆதி மூலமான சூரியனே இவை எல்லாவற்றிற்கும் ஆதாரம்.

எனவே உயிரின் ஆரம்பம் சூரியனைச் சார்ந்து இருப்பதால், சூரியனுக்கு “ஆத்மகாரகன் அல்லது உயிர்க்கு உடையவன்” என சோதிடத்தில் வரையறை செய்துள்ளது பொருத்தமாகவே உள்ளது.  அதுபோலவே, தந்தைக்கு காரகனும் சூரியன் என சோதிட நூல்கள் கூறுகின்றன. ஒரு உயிரின் பிறப்பின் ஆதாரம் தந்தையைச் சார்ந்து இருப்பதால் அதுவும் பொருத்தமாகவே இருக்கிறது.

இனி, சூரியனின் சோதிட வரையறையாக சோதிட நூல்களில் பொதுவாகக் கூறுவதைக் காண்போம்.

ஒளி
உயிர்
தந்தை
தலைமைப் பொறுப்பாளர்கள்
தலைமை அதிகாரம்
தலை
கண்கள்
இதயம்

இது பொதுவில் பல நூல்களில் கூறப்பட்டவை. இவைகளைச் சார்ந்தே பிற தன்மைகளும் விரித்து உரைக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, சூரியனின்  காரகத்துவமாக மன்னர்கள், சக்கரவர்த்திகள், முதலமைச்சர்கள், குடியரசுத்தலைவர் என வரையறுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தலைமைப் பொறுப்பாளர்கள் எனும் வரையறைக்குள் அடங்கிவிடுகின்றன. அதே போல், அதிகாரம், பெருந்தன்மை, ஆத்ம சக்தி, கர்வம், தைரியம், வீரம் போன்றவை தலைமை அதிகாரம் எனும் வரையறைக்குள் அடங்கி விடுகின்றன. தலை எனும்போது, அதன் அமைப்பு, செயல்திறன் போன்றவைகளும், கண்கள் எனும்போது பார்வைத் திறன் எனவும், இதயம் எனும்போது இரத்த ஓட்டம் தொடர்பான செயல்திறனும் இந்த வரையறைக்குள் வந்து விடுகின்றன. இந்த வரையறைகளின் திறன் என்பது சூரியன் சாதகத்தில் இருக்கும் நிலைக்கேற்ப – வலிமையாகவோ அல்லது எளிமையாகவோ; நலம்பயக்கும் விதத்திலோ அல்லது தீங்குசெய்யும் நிலையிலோ இருக்கக்கூடும்.

ஆக, சூரியனின் வரையறை என்பது மேலேக் குறிப்பிட்ட பொது வரையறைக்குள் அடங்கிவிடுகிறது. அதே வேளையில் இந்தப் பொது வரையறைகளின் நீட்சியையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இதுபற்றி பலன் அறிதல் எனும் பதிவு எழுதும்பொது விரிவாகக் காண்போம்.

மீண்டும் சொல்கிறேன் – நான் இங்கு வரையறைப்படுத்த முயன்றிருப்பது இப்படி இருக்கக்கூடும் என்பதை தர்க்க முறை வாதத்தில்தான். அதே வேளையில் இந்த வரையறைகள் நிகழ்தகவின் அடிப்படையில், முன்னோர்கள் கண்டுணர்ந்து, கேட்டுணர்ந்து வகுத்தவை என்பதையும் மறந்துவிடக் கூடாது.


அடுத்து சந்திரன்

No comments: