Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Wednesday, January 14, 2015

பிருகத் ஜாதகா – தமிழில்-23


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா

பகுதி   -  ஒன்று

வரையறையும்  அடிப்படைக் கொள்கைகளும்
[இராசி மண்டலம்]


1.         தன் பொற்கதிர்களால் நிலவுக்கு ஒளி கொடுப்பவனும், மீள் பிறவி இல்லா நிலைக்கு வழியாய் இருப்பவனும், ஆத்மாவை அறிந்தவர்களுக்கு ஆத்மாவாய் இருப்பவனும், வேள்வித் தீயினை வணங்குபவனுக்கு தேவனாக இருப்பவனும், தேவர்களுக்கு அரசனாயும் வானிற்கு ஒளியாகவும் இருப்பவனும், உலகத்தின் தொடக்கத்திற்கு ஆதாரமாகவும், வளர்ச்சியாகவும், முடிவாகவும் இருப்பவனும், வேதங்களை பல இசையில் இசைப்பவனாக இருப்பவனும், எண்ணற்ற கதிர்களைக் கொண்டிருப்பவனும் மூவுலகிற்கும் விளக்காய் இருப்பவனும் ஆகிய சூரியன் நமக்கு பேச்சுத்திறனை வழங்கட்டும்.



குறிப்புகள் (சிதம்பரம் அய்யர்)

() ஆசிரியர் தமது பிருகத் சம்ஹிதா எனும் நூலின் பகுதி நான்கில், பத்தி இரண்டில், சந்திரனானது, சூரியனிடமிருந்து ஒளி பெருவதைப் பற்றிக் குறிப்பிடுவதை வாசகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்அதன் வரிகள் வருமாறு:-

சூரியனின் கதிர்களானது, நீரால் ஆன சந்திரனின் மீது பாய்வதால், அது இரவில் (பூமியின்) கார் இருளை நீக்குகிறது, எவ்வாறெனில் (சூரியனை நோக்கி வைக்கும்)ஒரு கண்ணாடியில் இருந்து ஒளி பிரதிபலித்து, ஒரு அறையின் இருளை நீக்குவது போல

வேதங்களிலும், சந்திரனைப் பற்றி சொல்லப்படுவதை நாம் காணலாம்:
சூர்ய ரஸ்மிஸ்சந்த்ரமஹ்
[Surya rasmischandramah]
சூரியனின் கதிர்கள்தான் சந்திரன்.




குறிப்புகள் (நிமித்திகன்)

பிருகத் ஜாதகா எனும் இந்த நூல் ஏறக்குறைய 1500 ஆண்டுகளுக்கு முன் வராகமிகிரால் எழுதப்பட்டுள்ளது. ஆசிரியர் ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்தவராக இருந்தாலும், வானியல் மேதையான ஆர்யபட்டரின் சீடர் என்பதாலும், தாமும் வானியல் கொள்கைகளை அறிந்திருந்ததாலும், சூரியனே அனைத்திற்கும் ஆதாரம் எனும் கருத்தில் தெளிவுடன் இருந்ததால், சூரியனையே முதலில் வணங்கி நூலை எழுதத் தொடங்குகிறார்அவரது காலத்தில் அவர் சார்ந்திருந்த மதத்தின்  தெய்வங்களை வணங்கித் தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உலகத்தின் தொடக்கத்திற்கு ஆதாரமாகவும், வளர்ச்சியாகவும், முடிவாகவும் இருப்பவனும்..” எனும் சொற்றொடர் சூரியனே உலகின்  அனைத்து நிகழ்விற்கும் காரணம் என்பதைத் தெரிவிக்கிறது.


வரையறையும்  அடிப்படைக் கொள்கைகளும்… தொடரும்



சூரியனை வணங்கிப் போற்றும் தைத் திருநாளாம் பொங்கல் திருநாளில்,
சூரிய வணக்கத்துடன், இந்த நூலின் மொழி பெயர்ப்பைத் தொடர்வோம்.

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

           



முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 - 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-15

No comments: