வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பகுதி - பதின்மூன்று
சந்திரனின் யோகங்கள்… தொடர்ச்சி
7. யோகக் கோளானது செவ்வாயாக இருந்தால், அந்த மனிதர் சுறுசுறுப்பாகவும், சண்டையிடுவதில் ஆர்வமுடையவராகவும், சொத்துக்களுடனும், முன்யோசனையற்ற செயல்களிலும் ஈடுபடுவாராகவும் இருப்பார். யோகக் கோள் புதனாக இருந்தால், அந்த மனிதர் வேலையில் திறமை மிக்கவராகவும், நல்ல பேச்சாளராகவும், கலைகளை(1) கற்றறிந்தவராகவும் இருப்பார். யோகக் கோளானது வியாழனாக இருந்தால், அந்த மனிதர் சொத்துக்களும் நல்லொழுக்கமும் உடையவராகவும், எப்போதும் வசதியுடனும், அரசரால் போற்றப்படுபவராகவும் இருப்பார். யோகக் கோளானது வெள்ளியாக இருந்தால், அந்த மனிதர் காம உணர்வுகள் கொண்டவராகவும், அதிக சொத்துக்கள் உடையவராகவும், அனைத்து விதமான இன்பங்களையும் அனுபவிப்பவராகவும் இருப்பார்.
குறிப்புகள்:
(1)
இசை, நாட்டியம், ஓவியம் போன்றவை.
8. யோகக் கோளானது சனியாக இருந்தால், அந்த மனிதர் பிறரின் செல்வம், சொத்துக்கள், வேலையாட்களை அனுபவிப்பவராகவும், பல்வேறு தொழில்களை மேற்கொள்பவராகவும், ஒரு குழுவிற்கு தலைமையாகவும் இருப்பார்(1). பிறப்பானது பகலில் நிகழ்ந்திருந்தால், சந்திரன் துருவத்தில் தெரியும் வகையில் இருந்தால் அது துன்பங்களைக் கொடுக்கும், துருவத்தில் மறைவில் இருந்தால் அது செழுமையைக் கொடுக்கும்; பிறப்பானது இரவில் நிகழிந்திருந்தால், இதன் விளைவானது மேற்கூறியதற்கு எதிர்மறையாக இருக்கும்(2).
குறிப்புகள்:
(1)
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கோள்கள், யோகக் கோள்களாக இருந்தால், அவைகளுக்கு உரிய பலன்கள் அனைத்தும் கிடைக்கும்.
(2)
அதாவது, பிறப்பு இரவில் நிகழந்து, சந்திரன் துருவத்தில் மறைந்திருந்தால், அது துன்பத்தினைக் கொண்டுவரும், துருவத்தில் தெரியும் நிலையில் இருந்தால், செழுமையைக் கொண்டுவரும்.
9. பிறந்த பொழுது உள்ள இலக்கினத்திலிருந்து உபசய வீடுகளில்(2) சுபக் கோள்கள்(1) இருந்தால், அந்த மனிதர் பெரும் செல்வந்தராகவும், அவை சந்திரனிலிருந்து உபசய வீடுகளில் இருந்தால், ஓரளவு செல்வந்தராகவும் இருப்பார். உபசய வீடுகளில் இரண்டு கோள்கள் இருந்தால் ஓரளவு வசதி படைத்தவராகவும், அவைகளில் ஒன்று மட்டும் அத்தகைய இடத்தில் இருந்தால் குறைவான செல்வம் கொண்டிருப்பார்(3). ஒருவர் அசுப யோகத்தில்(4) பிறந்திருந்தாலும், தற்போது கூறிய யோகம் விதிவிலக்கிற்கு உரியது(5).
குறிப்புகள்:
(1)
புதன், வியாழன், வெள்ளி
(2)
இலக்கினத்திலிருந்து 3வது, 6வது, 10வது, 11வது வீடுகள்
(3)
ஆகவே, சுபக் கோள்கள் இலக்கினம் மற்றும் சந்திரன் ஆகியவற்றிலிருந்து உபசய வீடுகளில் இருந்தால், ஒருவர் மிகப்பெரும் செல்வந்தராக இருப்பார்; உபசய வீடுகளில் அவ்வாறான எவ்வித சுபக் கோள்களும் இல்லாதிருப்பின், அந்த மனிதர் ஏழையாக இருப்பார்.
(4)
அதாவது கேமதுரும யோகம்
(5)
அதாவது, ஒருவர் கேமதுரும யோகத்தில் பிறந்திருக்க, ஒருவேளை சுபக் கோள்கள் இலக்கினத்திலிருந்து அல்லது சந்திரனிலிருந்து அல்லது இரண்டிலிருந்தும் உபசய வீடுகளில் இருந்தால் அந்த மனிதர் ஏழையாக இல்லாமல் செல்வந்தராக வருவார்.
சந்திரனின் யோகங்கள் முற்றும்
அடுத்து ….இரட்டைக் கோள்களின் யோகங்கள்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment