Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Tuesday, March 28, 2017

வாக்கியம் (எதிர்) திருக்கணிதம் (4)




அயனாம்சம் .. தொடர்ச்சி


அயனாம்சம் பற்றி திரு சிதம்பரம் அய்யர், பிருகத் ஜாதக முன்னுரையில் குறிப்பிடுவதை இங்கே மீள்பதிவு செய்கிறேன். இது பிருகத் ஜாதகா பதிவு 12 & 13 –ல் பதிவிடப்பட்டது


இந்த முன்னுரை 1885- ஆண்டில் எழுதப்பட்டது

            சோதிடம் வானியல் மீது பயணிக்கிறது. விக்ரமாதித்தன் காலத்தில் பிந்தைய (வானியல்) அறிவியலானது நல்ல நிலையில் இருந்தது. கோள்களின் இருப்பிடங்கள் குறித்து அப்போது நிறுவப்பட்டு பயன்பாட்டில் இருந்த கணக்கீடுகளின் அட்டவனையானது, அக்காலத்திற்கு மிகவும் பொருத்தமானதாக இருந்து வந்துள்ளது. சூரிய மண்டல அமைப்பின் கணக்கீடுகளில் தொடர்ந்து ஏற்பட்டுவந்த பல்வேறு சிறு பிழைகளால், ஒருகாலத்தில் பொருந்திவந்த அத்தகைய அட்டவணைகள், பின்னொரு காலத்திற்கு பொருந்தாமல் போயிற்று. இந்த உண்மைய இந்திய வானியலாளர்கள் உணர்ந்திருந்தனர். அதனால், எதிர்கால வானியல் அறிஞர்களுக்கான வழிகாட்டியாக விரிவார்ந்த விதிகளை வகுத்திருந்தனர்.

            கணிதம் செய்வதில் ஏற்படும் பிழையானது, ஒரு வேதியனைக் கொல்வதற்கு ஒப்பாகும் என்பதால், வான் வெளியினைத் தினமும் உற்று நோக்கி கோள்களின் சரியான இருப்பிடத்தை உறுதி செய்ய வேண்டும்.

            இதனைச் சரியான உற்றுநோக்கு இல்லாமல் செய்ய முடியாது. இந்த பூமியில் அவ்வாறான அறிஞர்களும் இருந்தனர்; ஆனால் அயல்நாட்டினரின் படையெடுப்பு, நாட்டை ஆண்டு கொண்டிருந்தவர்களிட மிருந்து சரியான ஊக்குவிப்பு இல்லாமை ஆகியவற்றால், இந்த அறிவியலானது முன்னேறிச் செல்ல முடியாமல் போனது, அதனால் முன்பு சொன்ன கணக்கீடுகளின் அட்டவணை, திருத்தம் செய்யப்படாமல் போனதால், பயனற்றும் போயிற்று. அதனால், உள்ளூர் சோதிடர்களால் தயாரிக்கப்பட்ட நாட்காட்டிகளால், கோள்களின் உண்மையான இருப்பிட நிலையைக் கொடுக்கமுடியவில்லை. இத்தவறானது கடந்த 1000 ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

            ஐரோப்பா மற்றும் அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட கடல்சார் பஞ்சாங்கம் வரைபடமானது, கோள்களின் சரியான இருப்பிட நிலையைத் தெரிவிக்கின்றன; மற்றும் திருவாளர்கள்: பனாரசின் பாபு தேவ சாஸ்த்ரி, பூனாவின் லட்சுமண சத்ராய், மதராசின் இரகுநாதச் சாரியார், கும்பகோணம் வெங்கடேஸ்வர தீட்சிதர், சுந்தரேஸ்வர சுருதி ஆகியோர் சரியான புதிய அட்டவணையின் அடிப்படையில் பஞ்சாங்கள் தயாரிக்க ஆரம்பித்துள்ளனர். இத்தகைய அட்டவணைகள், நாம் கோள்களின் சரியான இருப்பிடத்தை வான்-புவி வெட்டுப்புள்ளியிலிருந்து (vernal Equinox), அதாவது சூரிய சுற்றுப்பாதையும் புவிப்பாதையும் வெட்டிக்கொள்ளும் இரண்டு மையப்புள்ளிகளிலிருந்து, நாம் அறிய உதவுகின்றன. இப்புள்ளியானது மேசத்தின் மேற்குப்பகுதியின் முதல் புள்ளியாகும்.

            இதன் சுற்றானது வருடத்திற்கு 50” எனும் அளவில் பின்தங்குகிறது. ஆனால், இந்தியக் கணிதத்தின்படி மேசத்தின் முதல் புள்ளியானது சூரியப்பாதையில் உள்ள ரேவதி விண்மீன் (யோகதாரா தொகுப்பில்) மீது அமைந்துள்ளது. இந்த விண்மீனானது வான்-புவி வெட்டுப்புள்ளிக்கு (vernal Equinox) கிழக்கே 20o உள்ளது. இந்த விண்மீனிலிருந்து கோள்களின் இருப்பிடத்தைக் கணிப்பது  நிர்ணய ஸ்புடம் என்றும், vernal Equinox-லிருந்து இருப்பிடத்தைக் கணிப்பது சாயன ஸ்புடம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இரண்டு புள்ளிகளுக்கும் இடையே ஏற்படும் சிறு இடைவெளி வித்தியாசமானது அயனாம்சம் என அழைக்கப்படுகிறது. இந்திய சோதிடமானது  கோள்களின் நிர்ணய ஸ்புடம் எனும் கணக்கினையும், நவீன அட்டவணையானது நமக்கு சரியான சாயன ஸ்புடத்தையும் தருகிறது; எனவே, அயனாம்சத்தின் அளவு துள்ளியமாகத் தெரிய வருமானால், அதனை சாயன ஸ்புடத்திலிருந்து கழிக்கலாம்அதன் மீதமானது நிர்ணய ஸ்புடத்திற்கு தேவையாகும். ஆனால் மிகச்சரியான அயனாம்சம் தெரியவில்லை, அதனை நேரடியாகக் உற்றுநோக்கி அறிய முடிவதில்லை, ஏனெனில் ரேவதி விண்மீனானது மறைந்து விட்டது. இந்த பொருள் பற்றி ஏப்பிரல் (1883) தியோசொபிஸ்ட் இதழில் எழுதியிருக்கிறேன். பல்வேறு பஞ்சாங்க வெளியீட்டாளர்கள், தங்களுக்கு ஒத்துவரும் வகையில், தன்னிச்சையாக பல்வேறு அயனாம்ச இடைவெளி அளவினைக் குறிப்பிடுகிறார்கள்.



ஆக, அயனாம்சம் என்பது நிராயனத்திற்கும் சாயனத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் என்பது தெளிவாகிறது. தற்போதைய நடைமுறையில் அயனாம்ச மதிப்பானது பலவேறாக உள்ளது. இதில் குறிப்பாக, திரு லஹிரிமுறை, திரு கிருஷ்ணமூர்த்தி. முறை, திரு இராமன் முறை ஆகிய மூவரின் முறை பெரும்பாலும் நடைமுறையில் உள்ளது.


இதில் குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால், இந்த மூவரின் முறையினையும் பயன்படுத்தி, திருக்கணிதமுறை பஞ்சாங்கங்கள் வெளிவருகின்றன. இதுமட்டுமின்றி, நாசாவின் வானியல் கணக்கீட்டினை அடிப்படையாகக் கொண்டு இந்திய அரசின் ஆதரவோடு கொல்கத்தாவில் உள்ள Rashtriya Panchang and Positional Astronomy Centre, பஞ்சாங்கம் தயாரித்து அளிக்கிறது.  எவ்வாறு இருப்பினும் திருக்கணித பஞ்சாங்கங்களுக்கு இடையேயே கணக்கீட்டில் மீச்சிறு வித்தியாசங்கள் இருக்கின்றன.


ஆனால் இத்தகைய எவ்வித கணக்கீட்டு முறைகளுக்கும் உட்படாமல், நட்சத்திர மண்டலம் அசைவற்றது எனும் கோட்பாட்டுடன் தயாரிக்கப்படுவதுதான் வாக்கிய பஞ்சாங்கம்.


மேலும் தொடர்வோம்….


No comments: