ஆண்டுக் கணக்கு
உலகில் அனைத்து கருத்துக்களுமே இருவித நிலையில்தான் இருக்கின்றன.
ஒன்று ஆதரவு நிலை, பிரிதொன்று எதிர்ப்பு நிலை. மூன்றாவதாக ஒன்று சம நிலை. அதாவது எப்படியாவது
இருந்துவிட்டு போகட்டும் எனும் நிலை. வாக்கியம் மற்றும் திருக்கணிதம் ஆகிய இரு வழிப்
பஞ்சாங்கங்களும் தத்தமது ஆதரவு நிலையைத் தொடர்கின்றன. இடைப்பட்டவர்கள், பஞ்சாங்கமே
தேவையில்லை என கருதுகின்றனர்.
வாக்கியமா அல்லது திருக்கணிதமா எது சிறந்தது என தீர்மானிக்கும்
முன்பாக, சில அடிப்படைத் தகவல்களைத் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக, ஒரு நாள் என்பது 24 மணி நேரம், ஒரு மாதம் என்பது
30 நாட்கள், ஒரு ஆண்டு என்பது 365 நாட்கள் எனக் கணக்கிடுகிறோம். ஆனால் காலந்தொட்டே
பல்வேறு கணக்கியல் முறைகள் இவைபற்றி இருந்து வருகின்றன.
ஒரு நாள் என்பது 24 மணி நேரம் என்று கணக்கில் கொண்டாலும், உண்மையில்
ஒரு நாள் என்பது பூமி தன்னைத்தானே தன் அச்சில் ஒருமுறை சுழலும் கால அளவு என்பதே மிகச்
சரியானது. அதன்படி, பூமி தன் அச்சில் ஒரு முறை சுழல எடுத்துக் கொள்ளும் கால அளவானது
23 மணி – 56 நிமிடம் – 4.0916 நொடி என்பதாகும். இந்தக் கணக்கின்படிதான், ஒருவருடம்
என்பது 365.2425 நாட்கள் என்பது கணக்கிடப்படுகிறது.
பொதுவாக ஆண்டு என்பது சூரிய ஆண்டு, அதாவது பூமி சூரியனைச் சுற்றிவர
எடுத்துக் கொள்ளும் நாட்கள் என்பதாகும். ஆனால் ஆண்டு கணக்கில் பல்வேறு பிரிவுகள் இருக்கின்றன.
கணித முறை ஆண்டு – 365 நாட்கள்; அதாவது, இது பொதுவாக உலக நாடுகள்
கடைபிடிக்கும் நாட்கள். இது வணிகம் மற்றும் நடைமுறை நிகழ்வுகளைப் பதிவு செய்வதற்கு
பயன்படுத்தப்படுகிறது. இது துள்ளியமானது இல்லை என்றாலும், நடைமுறைக் கணிதத்திற்காக
எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படுவதுடன், நான்கு ஆண்டிற்கு ஒருமுறை, குறைவு நாட்களைக்
கூட்டிக் கொண்டு, லீப் வருடம் எனும் பெயரில் 366 நாட்களாகக் கணக்கிடப்படுகிறது.
வானியல் கணிதமுறைப்படி ஆண்டுகள் எவ்வாறு கணக்கிடப்படுகின்றன
என்பதைக் காண்போம்.
(1) ஜூலியன்
ஆண்டு: இது வானியல் மற்றும் அறிவியல் கணித முறைகளுக்கு கடைபிடிக்கப்படும் ஆண்டாகும்.
இதன்படி, ஒரு ஆண்டு என்பது 365.25 நாட்கள் ஆகும்.
(2) நட்சத்திர
ஆண்டு: இது பூமி அதன் வான் மண்டலத்தில் உள்ள நட்சத்திர மண்டலத்தினை சுற்றிவர எடுத்துக்
கொள்ளும் ஆண்டு எனப்படுகிறது. ஆனால், பூமி மையக் கொள்கைப்படி, சூரியன் நட்சத்திர மண்டலத்தினைச்
சுற்றிவர எடுத்துக் கொள்ளும் கால அளவாகும். இதன்படி, ஒரு ஆண்டு என்பது 365 நாட்கள்
– 6 மணி – 9 நிமிடம் – 9.76 நொடி என்பதாகும்.
(3) கிரகண
ஆண்டு: இது பூமி மையக் கொள்கைப்படி, சூரியன், சந்திரனின் வெட்டுப்புள்ளியின் வழியாக
ஒரு முறை சுற்றிவர எடுத்துக் கொள்ளும் கால அளவாகும். இதன் கால அளவானது 346 நாட்கள்
– 14 மணி – 52 நிமிடம் – 54 நொடி என்பதாகும்.
(4) சந்திர
ஆண்டு: பூமி மையக் கொள்கைப்படி, சந்திரன் 12 முழு சுற்றுக்களை முடித்துக் கொள்ளும்
கால அளவாகும். இதனுடைய கால அளவானது 354.37 நாட்கள் ஆகும். [இது முகமதியர்கள் கடைபிடிக்கும்
ஆண்டுக் கணக்காகும்].
(5) நட்சத்திர
உதய ஆண்டு: இது ஒரு குறிப்பிட்ட நட்சத்திரம் (குறிப்பாக சிரியாஸ் நட்சத்திரம்) குறிப்பிட்ட
நாட்களுக்குப் பிறகு மீண்டும் அதே இடத்தில் உதயமாகும் கால அளவாகும். இது எகிப்தியர்களால்
கடைபிடிக்கப்பட்ட ஆண்டுக் கணிதமாகும். கால அளவு என்பது 365.25 நாட்களுக்கு நெருக்கமானது.
இது சோதிக் ஆண்டு என்றும் வழங்கப்படுகிறது.
இது தவிர இன்னும் சில ஆண்டு முறைகள் வழக்கத்தில் இருந்தன, இருக்கின்றன.
ஆக, ஆண்டுக் கணிதம் என்பது அவரவர் கணக்கீட்டு முறைக்கு ஏற்ப பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது,
இப்பொழுதும் இருந்து வருகிறது.
பஞ்சாங்கத்தினைப் பொருத்தவரையில், நட்சத்திர ஆண்டுதான் கடைபிடிக்கப்படுகிறது.
அதற்கு சௌர ஆண்டு முறை எனும் பெயரும் உண்டு. இதன்படி, சூரியன் முதல் இராசியான மேசத்தில் அசுவணி நட்சத்திரத்தில்
தொடங்கி, மீனத்தின் ரேவதி நட்சத்திரத்தினை வந்தடையும் கால அளவாகும். இது 365 நாட்கள்,
15 நாழிகை, 23 வினாடி என்பதாகும். அதாவது 365 நாட்கள், 6 மணி, 9 நிமிடம் – 9.76 நொடி
என்பதாகும்.
இதில் சாயன வருட முறை என்பதும் உண்டு, இதன்படி, சூரியன், மேசத்தில்
தொடங்கி, மீண்டும் மேசத்தினை வந்தடையும் கால அளவாகும். இது சௌரவ ஆண்டு முறையினைக் காட்டிலும்
20 நிமிடங்கள், 24 நொடிகள் குறைவானதாகும்.
ஆனால் பொதுவாக சௌரவ ஆண்டு எனும் நட்சத்திர ஆண்டு முறையினைத்தான் பஞ்சாங்கங்கள் பின்பற்றுகின்றன.
இதில் வாக்கியத்திற்கும் திருக்கணிதத்திற்கும் எங்கு தகராறு
எழுகிறது என்பதைப் பார்க்க வேண்டும்.
மேலும்
தொடர்வோம்…
No comments:
Post a Comment