வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
முடிவுரை… என்னுரை
வணக்கம்.
வராகமிகிரர் படைத்த பிருகத் ஜாதகம் எனும் பெரும் சோதிட நூலிற்கு ஆங்கிலத்தில் விளக்கங்களுடன்
உரை எழுதிய திரு என். சிதம்பரம் அய்யர், மதுரை (1885) அவர்களின் பிருகத் ஜாதகா எனும் ஆங்கில உரை நூலை, 2014 ஜனவரியில்
தொடங்கி, டிசம்பர் 2017-இல், மிக நீண்ட பதிவுகளோடு, அதாவது நான்கு ஆண்டு கால அளவில்
தமிழில் மொழிபெயர்த்துள்ளேன். இரண்டு பாகங்கள், இருபத்தியெட்டு அத்தியாயங்கள் கொண்ட
இந்த நூலைத் தமிழில் மொழிபெயர்த்தது எனக்குக் கிடைத்த ஒரு வரம்.
எனது
வலைப்பூ நண்பர் திரு ஓம் பிரகாஷ் அவர்கள், “இதை ஏன் தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டு
இருக்கிறீர்கள். பிருகத் ஜாதகத்தின் தமிழ் வடிவம் கடலங்குடி நடேசன் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.
அதனைப் படித்தால் போதுமானதல்லவா?” என்று வினவி இருந்தார். ஆனாலும் நான் இதன் மொழிபெயர்ப்பினைத்
தொடர்ந்து கொண்டிருந்தேன். காரணம் – (1) கடலங்குடி பதிப்பகப் புத்தகம் விலைக்குக் கிடைக்கவில்லை.
(2) திரு சிதம்பரம் அவர்களின் ஆங்கில உரை நடையில் இருந்த சொல்வளமும், ஆங்காங்கே அவர்
கொடுத்த விளக்கங்களும் அருமை. எனவே, அந்த புத்தகத்தினை முழுமையாகப் படித்துவிட வேண்டும்
எனும் ஆர்வமும், மொழிபெயர்ப்பதின் மூலம் கிடைக்கும் மொழியறிவும் எனக்குத் தேவையானதாக
இருந்தது. இந்த மொழிபெயர்ப்பின் மூலம், சோதிடம் தொடர்பான தெரியாத தகவல்களும், தெரிந்த
தகவல்களுக்கு புதிய விளக்கங்களும் கிடைத்தன.
இந்த
தமிழாக்கத்தில், திரு சிதம்பரம் அவர்களின் புத்தகத்தின் இறுதியில் உள்ள இணைப்பு விவரங்களை
தமிழாக்கம் செய்யவில்லை. அந்த இணைப்பில் – இலக்கின ஸ்புடம் கணிக்கும் முறை; சரியான
உள்ளூர் நேரம் அறிதல்; அட்ச ரேகை – தீர்க்க ரேகை அட்டவணைகள்; தசா முறைக் காலக் கணித
அட்டவணை; இந்தியா-கிரீன்வீச் நேர வேறுபாட்டின் அட்டவணை; கோள்களிக்கான நட்பு-பகை அட்டவணை;
விண்மீன்கள் தொகுப்பின் உதய நேர அளவு அட்டவணை; சூரியனின் உதய நேர அளவு அட்டவணை போன்றவைகளையும்;
நூலின் ஊடே வந்த வேறு சில விளக்கக் குறிப்புகளையும் மொழிபெயர்ப்பில் தவிர்த்திருக்கிறேன்.
அத்தகைய தகவல்களைத் திரட்டி அவைகளுக்கு கணிதம் செய்த திரு என். சிதம்பரம் அய்யர் அவர்களின்
கணிதத் திறமை என்னை வியக்க வைத்திருக்கிறது என்பதுடன், வானியல் கணிதத்தில் அவரின் திறன்
என்னை மண்டியிட வைக்கிறது. ஒரு முழுமையான கற்றறிந்த அறிஞரால் மட்டுமே இது சாத்தியாமாகும்.
இந்த
மொழிபெயர்ப்பினை, நான் மிகச் சரியாக செய்திருக்கிறேனா என்று தெரியவில்லை. தொடக்கத்தில்
மொழியறிவு குறைவினால் கொஞ்சம் தடுமாறியும் இருந்திருக்கிறேன். ஆங்கில வார்த்தைகளை அப்படியே
தமிழுக்கு மாற்றி செம்மையில்லாமலும் செய்திருக்கிறேன். பின்னர் என்னை மேம்படுத்திக்கொள்ள,
அதுவே நல்லதொரு தொடர் பயிற்சியாகவும் ஆயிற்று. புதிய சொற்கள், புரிபடாத சொற்கள், இணைச்
சொற்கள் என ஆங்கில மொழியில் உள்ள நிறைய சொற்களை நான் இதன் மூலம் கற்றறிந்தேன். எனது
மொழித்திறனும் சற்று செம்மையானது. ஏறக்குறைய 220 பதிவுகளில் இத் தொடரினை முடித்துள்ளேன்.
எனது
நண்பர்கள் சிலர் இதனைப் புத்தகமாக பதிப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளனர். அந்த
எண்ணமும் இருக்கிறது. ஆனால், வரிக்கு வரி செய்த மொழிபெயர்ப்பினைப் புத்தகமாகப் போடுவதில்
எனக்கு உடன்பாடில்லை. ஏனெனில், இங்கு பதிவு செய்யப்பட்டதை இன்னமும் செம்மை செய்ய வேண்டியுள்ளது.
ஒவ்வொரு செய்யுளுக்கும் எளிய முறையில் உரிய சோதிட பாடங்கள்/கட்டங்களுடன் விளக்க வேண்டியுள்ளது.
எடுத்துக் காட்டாக, யோகங்களைப் பற்றி பேசும் போது, அவை கட்டங்களில் எப்படி அமைந்திருக்க
வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விளக்க வேண்டியுள்ளது. திரேக்காணம் எனும் போது,
அது கட்டங்களில் எவ்வாறு வரையறை செய்யப்படுகிறது என்பதை விளக்க வேண்டியுள்ளது. சாதகம்
இல்லாதவர்களுக்கு சாதகம் எழுதுவதை உரிய விளக்கங்களுடன் கூற வேண்டியுள்ளது. அதைவிட முக்கியம்,
மூல நூலின் சாரம் சிறிதும் மாறாமல் நம் கருத்தினைக் கூற வேண்டியுள்ளது. எனவே, நான்
மொழிபெயர்த்த பாடங்களை மீண்டும் ஒருமுறை சீராய்ந்து, தவறுகள் இருப்பின் திருத்தம் செய்து
(நிச்சயம் தவறுகள் இருக்க வாய்ப்பு உள்ளது). அதே வேளையில் படிப்பவர்களுக்கு எளிதில்
புரியும் வண்ணம் எழுதி, தொகுக்க வேண்டியுள்ளது. இவ்வளவும் செய்து முடித்த பின்பே, நல்லதொரு
பதிப்பகத்தார் கிடைப்பார் எனில் புத்தகமாக வெளியிடும் எண்ணம் உள்ளது.
வேண்டுகோள்:
எனவே,
இந்த பிருகத் ஜாதாகா மொழிபெயர்ப்பினை, இதுவரையில் படித்தவர்கள், இன்னும் படித்துக்
கொண்டிருப்பவர்கள், இதில் ஏதேனும் குறைகளை / தவறுகளைக் கண்டிருந்தால், அதனை எனக்குச்
சுட்டிக் காட்ட அன்புடன் வேண்டுகிறேன். மேலதிகத் தகவல்களைத் தந்து உதவிடவும் வேண்டுகிறேன்.
இந்த
வாய்ப்பினை எனக்களித்த பிருகத் ஜாதகத்தின் முதன்மை ஆசிரியர் சோதிட மாமேதை திரு.வராகமிகிரருக்கும்,
அதன் ஆங்கில நூல் ஆசிரியர் மதுரை திரு என். சிதம்பரம் அய்யர், அவர்களுக்கும், என்னை
இந்த மன்னில் பிறக்க வைத்த என் தந்தை கொல்லுமாங்குடி திரு ந, கோவிந்தராசு அவர்களுக்கும்
என்றென்றும் நன்றியுடன் கடமைப்பட்டுள்ளேன்.
அன்புடன்
நிமித்திகன்
பிருகத் ஜாதகம் - முற்றும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
[குறிப்பு: விரைவில் மீண்டும் ஒரு சோதிட நூலை தமிழாக்கம்
செய்ய உள்ளேன். அது, பலதீபிகை, பிருகத் பராசர ஹோரை, பிருகத் சம்ஹிதா, இலகு ஜாதகம்
ஆகியவற்றில் ஒன்றாக இருக்க வாய்ப்பு உள்ளது.]
4 comments:
அய்யா விடுபட்ட பக்கங்களையும் புத்தகத்தில் இடம் பெறசெய்தால் நன்றாக இருக்கும் அய்யா
தங்கள் கருத்திற்கு நன்றி. புத்தகத்தினை முழுமையாகவும், முடிந்தவரையில் எளிய விளக்கங்களுடனும், அதே வேளையில் முதன்மையின் கருத்து சிதைவுறாமலும் வெளியிட உள்ளேன்.
அன்புடன்
நிமித்திகன்
மொழிபெயர்ப்பு நூலை எங்கே பெற்றுக்கொள்ளலாம் ?
jeyaluxshan@gmail.com
தொகுக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவ்வாண்டு இறுதிக்குள் கிடைக்கும்.
Post a Comment