வான் மண்டலம் பற்றி முந்தைய பதிவுகளில், அதாவது பிரபஞ்சம், பால் வீதி,
சூரியக் குடும்பம், அதனைச் சுற்றும் கோள்கள் என சுருக்கமாக, முடிந்தவரையில் எளிமையாக
பதியப்பட்டுவிட்டது.
ஆனால் சோதிடத்தில் வான் மண்டலம் என்பதில் அதன் எல்லைகள் ஒரு வரையறைக்குள்
கொண்டுவரப்பட்டுள்ளன.
வான் மண்டலம் என்பது ஒரு உடையாத நீர்க்குமிழி எல்லையில்லாமல் விரிவடைந்து
கொண்டே செல்வது போன்றது. அதில்தான் எண்ணற்ற பிரபஞ்சங்கள், பிரபஞ்சத்திற்குள் எண்ணற்ற
பால்வீதிகள், பால்வீதிக்குள் எண்ணற்ற விண்மீன்கள்(சூரியன்கள்), அவைகளுக்கென்று தனித்தனிக்
குடும்பங்கள், அதில் நமது சூரியக் குடும்பமும் அதனைச் சுற்றும் கோள்கள் ஆகிய அனைத்தும்
சுற்றிக் கொண்டுள்ளன.
நம் பூமியைப் பொறுத்தவரையில், சூரியக்குடும்பத்தில் உள்ள ஒரு கோள்
என்றாலும், நாம் அண்டவெளியை ஆராய்வது என்னவோ, பூமியில் இருந்து கொண்டுதான். பண்டைக்
காலம் தொட்டு விண்வெளியை ஆராய்ந்தவர்கள், பூமியிலிருந்தவாறே கோள்களின் வான்தோற்றம்,
அசைவுகள், நிகழ்வுகள் ஆகியவற்றைப் பதிவுசெய்து வந்துள்ளனர். இன்றைய வானியல் அறிஞர்கள்,
அறிவியல் கருவிகள் துணைக்கொண்டு, வின்வெளிக்கு செயற்கைக் கோள்களை அனுப்பி ஆராய்ந்தாலும்,
அதனை மேற்கொள்ளும் இடம் என்னவோ, பூமியிலிருந்துதான்.
பூமியில் நின்றுகொண்டு, நாம் வான்வெளியை அன்னார்ந்து பார்த்தால், அது
ஒரு அரைவட்டக் கூடையை நம்மீது கவிழ்த்து வைத்ததுபோல் தோன்றும்.
நாம் இந்தியாவில் இருக்கிறோம். பூமிப்பந்தில் நமக்கு நேர் எதிரில்
இருப்பது பெரு நாட்டிற்கு அருகில் உள்ள தெற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியாகும். அங்கிருந்து
நாம் வான்வெளியைப் பார்த்தால் அங்கேயும் ஒரு அரைவட்டக் கூடையை நம்மீது கவிழ்த்து வைத்ததுபோல்
தோன்றும். ஆக, ஒரு முழுவட்டக் கூடைக்குள் இந்த பூமிப் பந்து இருக்கிறது.
எனவே, வான்வெளியானது ஒரு பிரமாண்டக் கோளமாக எல்லையில்லாமல் விரிவடைந்து
கொண்டே இருக்கிறது. பூமிக்கு பூமத்திய ரேகை உள்ளது போல் வான் கோளத்திற்கும் வான்மத்திய
ரேகை கற்பனையாக வரையப்பட்டுள்ளது. எனவே, வான்மத்திய
ரேகை, பூமத்திய ரேகை, சூரியக் குடும்பத்தின் நீள்வட்டப்பாதை ஆகியவற்றை ஒன்றுடன் ஒன்று
தொடர்புபடுத்தி, வான் மண்டலக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. இது பற்றி இனிவரும் பதிவுகளில்
விரிவாகக் காண்போம்.
No comments:
Post a Comment