மகாபாரதம் – போருக்கான நல்ல நாளைக் குறிக்கச்
சொல்லி சகாதேவனிடம் கேட்கிறான் துரியோதனன். எதிர்வரும் அமாவாசையை நல்ல நாளாகக் குறித்துக்
கொடுக்கிறான் சகாதேவன். அமாவாசையில் போரைத் தொடங்கினால் வெற்றி நிச்சயம் என்றும் குறிப்பிடுகிறான்.
ஆனால் அமாவாசைக்கு முதல் நாள், ஆற்றங்கரையில் கண்ணன், தன் முன்னோர்க்கு நினைவாஞ்சலி
(தர்ப்பணம்) செய்யத் தொடங்குகிறான். முன்னோர்க்கான நினைவாஞ்சலி என்பது அமாவாசையில்
கடைபிடிப்பதுதான் வழக்கம். ஆனால் வழக்கத்திற்கு மாறாக, முதல் நாளே கண்ணன் அதனைச் செய்யத்
தொடங்க, மற்றவர்கள் குழம்பிப் போகிறார்கள். அமாவாசைக்குக் காரணமான சூரியனும் சந்திரனும்
அங்கே வந்து, கண்ணனிடம், நாளை தானே அமாவாசை, இன்று நீ முன்னோர்க்கான அஞ்சலியை செய்வது
சரியா என்று கேட்க, கண்ணன் சிரித்துக் கொண்டே, அமாவாசை என்பது சூரியனும் சந்திரனும்
சந்திக்கும் நாள்தானே. இதோ நீங்கள் இருவரும் சந்தித்துவிட்டீர்கள். இப்போது அமாவாசை
அல்லவா என்று எதிர்கேள்வி கேட்க, அனைவரும் அமைதியாகிப்போகிறார்கள். அன்றே போரினைப்
பாண்டவர்கள் தொடங்க, அவர்களுக்கு வெற்றி உண்டாகிறது என மகாபாரதம் நீள்கிறது.
மகாபாரதம் நடந்த கதையா? சூரியன் விண்மீன் – சந்திரன்
துணைக்கோள், இவை எப்படி மனிதர்களாக வரமுடியும் என்பதல்ல கேள்வி. நம்புகிறவர்கள் நம்பட்டும்.
நம்பாதவர்கள் என்னுடன் இந்தப்பக்கம் வந்துவிடுங்கள்.
மகாபாரதக்கதை கி.மு. எட்டாம் நூற்றாண்டு காலத்திலேயே
இருந்திருக்கலாம் என்றும், இதன் முழுவடிவமானது குப்தர்கள் காலத்தில், அதாவது கி.பி.
நான்காம் நூற்றண்டில் அமையப்பெற்றிருக்கலாம் என்றும், விக்கி தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்படியெனில், ஒரு மிகப்பெரிய வானியல் உண்மையானது மிகச் சாதாரணமாக, அந்தக்காலத்திலேயே
எல்லோராலும் அறியப்பட்டிருக்கிறது என்பது நாம் பெருமிதம் கொள்ளும் செய்தியாகும். வான்
மண்டலத்தில் சூரியனும் சந்திரனும் ஒரே பாகைக்குள் வரும் நாளே அமாவாசை என்பதும், அதற்கு
நேர் எதிரே, (180 பாகையில்) இவை இரண்டும் வரும் நாளே முழு நிலவு நாள் (பௌர்ணமி) என்பதும்
அனைவரும் அறிந்த உண்மையாக இருந்திருக்கிறது. இதனைப் போகிற போக்கில், கதையின் மிகமுக்கிய
நிகழ்விற்கு பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
இந்தக் கணக்கீட்டினை அடிப்படையாகக் கொண்டுதான்
சந்திரக் கிரகணமும் சூரியக் கிரகணமும் ஏற்படும் நாட்களைத் துள்ளியமாக நமது முன்னோர்கள்
கண்டறிந்துள்ளனர். இன்றும் அவ்வாறே கணித்து வருகின்றனர்.
சூரியக் கிரகணம் அமாவாசை அன்றும், சந்திரக் கிரகணம்
முழு நிலவு நாள் அன்றும் ஏற்படுகிறது. சூரியன்-சந்திரன் இவை இரண்டும் பூமியுடன் சேர்ந்து
(ஆக மூன்றும்) ஒரே நேர்க்கோட்டில் அமையும் நாட்களில்தான், சந்திரக் கிரகணமும் சூரியக்
கிரகணமும் ஏற்படும். அப்படியெனில், ஏன் ஒவ்வொரு அமாவாசை அன்றும் சூரியக் கிரகணம் ஏற்படுவதில்லை
அல்லது ஒவ்வொரு முழு நிலவு நாள் அன்றும் சந்திர கிரகணம் ஏற்படுவதில்லை.
அங்குதான், நேர்க்கோடு தத்துவம் முக்கியத்துவம்
பெருகிறது – அங்குதான் இராகுவும் கேதுவும் பயன்படுகிறார்கள் – இன்னும் தொடர்வோம்.
2 comments:
மிகவும் எளிமையாகவும் இனிமையாகவும் எழுதுவதற்கு வாழ்த்துக்கள்..தொடருங்கள்..
இறுதியில் இது மிகவும் அருமையான புத்தகமாக அமையும்
வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி. நமது எழுத்துக்கள் பிறரால் வாசிக்கப்படுகிறது எனும்போது எழும் மகிழ்வைவிட, அது பற்றிய கருத்துக்களை அவர்கள் பதிவிடும்போது ஏற்படும் மகிழ்வு மிக்க நிறைவை ஏற்படுத்துகிறது. அர்த்தமுள்ள இனிய மருத்துவருக்கு மீண்டும் நன்றி.
Post a Comment