வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பகுதி - ஐந்து
பிறப்பு நேரம் தொடர்புடைய தகவல்கள்
18. சந்திரனைக்(1) கொண்டு எண்ணெய்
தீர்மானிக்கப்படுகிறது, உதய இராசியைக்(2) கொண்டு திரி தீர்மானிக்கப்படுகிறது; இதர விவரங்களான விளக்கின் தன்மையானது சூரியன்(3)
இருக்கும் இராசியைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. கேந்திரத்தில்(4) இருக்கும் வலிமையான
கோளைக் கொண்டு அல்லது அதிக பலம் மிகுந்த கோளைக் கொண்டு நுழைவு வாயில் தீர்மானிக்கப்படுகிறது.
குறிப்பு (சிதம்பரம் அய்யர்):
(1) அதாவது, சந்திரனானது ஒரு இராசியின் தொடக்க
நிலையில் இருந்தால், பிரசவ அறையின் விளக்கில்
உள்ள எண்ணெய் முழுமையாக இருக்கும்; இராசியின் நடுவில் சந்திரன் இருந்தால், எண்ணெய்
பாதியளவு இருக்கும், இராசியின் கடைசியில் சந்திரன் இருந்தால், விளக்கில் எண்ணெய் இருக்காது;
அதாவது, எண்ணெயின் அளவானது சந்திரன் இருக்கும் இராசியின் நிலையைப் பொருத்து இருக்கும்.
சாரவளியின்படி, சந்திரன் முழுநிலவாக இருந்தால்,
எண்ணெய் முழுமையாக இருக்கும், எண்ணெயின் அளவானது சந்திரனின் ஒளியின் அளவினைப் பொருத்து
இருக்கும். உரையாசிரியர் பட்ட உத்பலாவின் கருத்து என்னவெனில், குழந்தை அமாவாசையில்
பிறக்கும் எனில் எப்போதும் இருட்டிலேயே பிறக்கும் என்பது ஏற்றுக் கொள்ள முடியாது என்பதே.
(2) அதாவது,
உதய இராசியானது உதயத்தின் ஆரம்ப நிலையாக இருந்தால், திரியானது நீண்டதாகவும் புதிதானதாகவும்
இருக்கும்; உதயத்தின் நடுவில் இருந்தால், திரியானது பாதி எரிந்த நிலையில் இருக்கும்;
உதய இராசியின் இறுதியில் இருந்தால், திரியானது ஏறக்குறைய முழுதும் எரிந்த நிலையில்
இருக்கும். அதாவது, திரியின் நீளமானது உதய இராசியானது கீழ்வானத்தின் புள்ளியைத் தொடும்
அளவினைப் பொருத்து இருக்கும். திரியின் நிறம் உதய இராசியின் நிறத்தினைச் சார்ந்து இருக்கும்.
(3) அதாவது,
சூரியன் இருக்கும் இராசியானது ஸ்திர இராசியாக இருந்தால், விளக்கானது ஒரு இடத்தில் நிலையாக
பொருத்தப்பட்டிருக்கும்; சரமாக இருந்தால், யாரேனும் ஒருவர் அதனை கையில் பிடித்தபடி
இருப்பார்; உபய இராசியாக இருந்தால் விளக்கானது தொங்கும் விளக்காக இருக்கும். உரையாசிரியரின்
கருத்துப்படி, விளக்கானது சூரியன் இருக்கும் இராசிக்கு உடைய திசையில் இருக்கும். வேறு
சிலரின் கருத்துப்படி, சூரியன் இருக்கும் இராசியின் (அதாவது அறையினை 12 சம பாகங்களாகப்
பிரித்தால்) இடத்தில் இருக்கும். இவ்வாறு பிரிப்பது பற்றி இதன் ‘முன்னுரையில்” ஹோரை சோதிடம் பற்றி குறிப்பிட்டபோது
தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேறு சிலரின் கருத்துப்படி, பகல் இரவு கொண்ட
ஒரு நாளின் 24 மணி நேரத்தினை 8 பாகங்களாக, ஒவ்வொன்றும் 3 மணி நேரம் என சூரிய உதயத்திலிருந்து
கணக்கிட்டு, கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு என்பது போல், பிறக்கும் நேரத்தினை, எந்த
பிரிவில் வருகிறதோ அந்த பிரிவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
(4) கேந்திரத்தில்
கோள்கள் இல்லையெனில், நுழைவு வாயிலானது, இலக்கினத்தின் திசையினைக் கொண்டு தீர்மானிக்க
வேண்டும் என ஸ்வப்ல ஜாதகம் குறிப்பிடுகிறது.
குறிப்பு (நிமித்திகன்):
விளக்கு, எண்ணெய், திரி, விளக்கு இருக்கும்
திசை என்பன அன்றையக் காலக் கட்டத்திற்கு பொருந்தும். தற்போது, பிறப்பானது 99% மருத்துவமனைகளிலேயே
நிகழ்வதாலும், மின் விளக்குகளின் பயன்பாட்டில் திரி விளக்குகளுக்கு வேலையே இல்லாமல்
போய்விட்டது.
19. சனியானது வலிமை மிகுந்து இருந்தால், பிறப்பானது ஒரு பழைய,
புதுப்பிக்கப்பட்ட வீட்டில் நிகழும். செவ்வாய் வலிமை மிகுந்து இருந்தால், பகுதி எரிந்த
நிலையில் உள்ள வீட்டில் நிகழும்; சந்திரன் வலிமை மிகுந்து இருந்தால், அது ஒரு புதிய
வீடாக இருக்கும்; சூரியன் வலிமை மிகுந்து இருந்தால், மரத்தால் அமைக்கப்பட்ட ஆனால் வலிமை
குறைந்த வீடாக இருக்கும்; புதன் வலிமையாக இருந்தால், அது பல்வேறு நபர்களாள் கட்டப்பட்ட
வீடாக இருக்கும்; சுக்கிரன் வலிமை மிகுந்து இருக்குமானால், கலைநயம் மிக்க அழகிய வீடாக
இருக்கும்; குரு வலிமை மிகுந்து இருக்குமானால், அது உறுதிவாய்ந்த வீடாக இருக்கும்(1).
வீட்டின் நான்கு பக்கங்களின் நிலையானது, ராசி சக்கரத்தில்(2) உள்ள கோள்களுக்குரியவாறு
அமைந்திருக்கும்.
குறிப்பு (சிதம்பரம் அய்யர்):
(1) சாரவளியின்
கருத்துப்படி, மேற்குறிப்பிட்ட வரிகளின்படி, சூரியனானது வலிமைமிகுந்த கோள் இருக்கும்
வீட்டில் இருந்தால், பிறப்பானது பூசை அறைக்கு அருகில் உள்ள அறையில் நிகழும்; சந்திரனானது,
வலிமை மிகுந்த கோள் இருக்கும் வீட்டில் இருந்தால், பிறப்பானது குளியல் அல்லது தண்ணீர்
உள்ள் அறையில் நிகழும்; செவ்வாயாக இருந்தால், சமையலறை அல்லது யாகசாலையில் நிகழும்;
புதனாக இருந்தால் படுக்கையறை; வியாழனாக இருந்தால் பணம்வைத்திருக்கும் அறை; சுக்கிரனாக
இருந்தால் விளையாட்டு திடல்; சனியாக இருந்தால், பிறப்பானது குப்பைமேட்டில் நிகழும்.
(2) அதாவது,
வலிமை மிகுந்த கோள் இருக்கும் வீட்டிலிருந்து, மூன்று இராசிகளில் மூன்று அல்லது மேற்பட்ட
கோள்கள் இருக்குமானால், வீடுகள் கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும்; அடுத்த மூன்று
இராசிகள் எனில், வீடுகள் தெற்கு பகுதியில் இருக்கும்; அடுத்த மூன்று இராசிகள் எனில்,
வீடுகள் மேற்கு பகுதிகளில் இருக்கும்; கடைசி மூன்று இராசிகள் எனில், வீடுகள் வடக்குப்
பகுதிகளில் இருக்கும். இந்த வீட்டின் விவரங்களை
மேற்குறிப்பிட்ட உரையில் தெரிவிக்கப்பட்டவாறு
கொள்ளவேண்டும்.
இலகு ஜாதகப்படி, வியாழனானது, அதே நேரத்தில்,
இலக்கினத்திலிருந்து 10வது வீட்டில் இருந்தால், அதன் உச்ச வீடானது, அதன் உச்ச பாகையினை
கடக்கும் எனில், பிறப்பானது இரட்டை மாடி வீட்டில் நிகழும்; உச்ச பாகைக்கு கீழே இருக்கும்
எனில் பிறப்பானது மூன்று மாடி வீட்டில் நிகழும்; உச்ச பாகையிலே இருக்கும் எனில், அது
நான்கு மாடி கட்டிடமாக இருக்கும்.
தனுசு இராசி வலிமைமிகுந்து இருக்குமானால்,
பிறப்பானது மூன்று உள் தாழ்வாரங்களைக் கொண்ட வீட்டில் நிகழும்; இலக்கினத்திலிருந்து
10வது வீட்டில் வியாழன் இருக்குமானால், அந்த இராசியானது மிதுனம், கன்னி, மீனாமாக இருக்குமானால்,
அது இரண்டு உள் தாழ்வாரங்களைக் கொண்ட வீடாக இருக்கும்.
குறிப்பு (நிமித்திகன்):
முன்பே குறிப்பிட்டவாறு,
அன்றையக் காலக்கட்டத்தில், பிறப்பானது வீடுகளிலும், வெளியிடங்களிலும் நிகழ்ந்தன. தற்போது,
99% பிறப்பானது மருத்துவமனைகளில் நிகழ்கிறது. எனவே, இது எந்த அளவிற்கு தற்போது பொருந்தும்
என்பது வினாவிற்குரியது. இருப்பினும், வராக மிகரரின் காலத்தில், மூன்றுமாடி, நான்குமாடிக்
கட்டிடம் இருந்திருக்க சாத்தியமில்லை. திரு. சிதம்பரம் அவர்கள் அவருடைய காலத்திற்கேற்ப
இதற்கு குறிப்புகள் அளித்துள்ளார். அதாவது, 1885-ம் ஆண்டு வாக்கில் (இன்றைக்கு 130
ஆண்டுகளுக்கு முன்பு), நான்கு மாடிக் கட்டிடம் என்பதே மிகப்பெரும் கட்டிடமாக இருந்திருக்கக்
கூடும். தற்போது மாடிகளின் எண்ணிக்கை மூன்று இலக்கதில் உள்ளன. தாழ்வாரங்கள் வழக்கொழிந்து
போய்விட்டன. எனவே, மேலேக் குறிப்பிட்ட விளக்கங்கள் எந்த அளவிற்கு பொருந்தும் என்பது
ஒரு வினாவே. இச்சூழலில் ஒரு முக்கிய வேண்டுகோள் என்னவெனில், காலந்தோறும், சோதிடக் குறிப்புகளை
அறிவார்ந்த வகையில் ஆராய்ந்து, தேவையற்றவைகளை ஒதுக்கிவிட்டு, தேவயானவைகளுக்கு புதியக்
கணிதமும் அதன் அடிப்படையில் புதிய கொள்கைகளையும் வகுக்க வேண்டும் என்பதே சரியானதாக
இருக்கும். அதைவிட முக்கியம், சோதிடத்தை பொதுவில் வைக்க (மதங்களுக்கு அப்பாற்பட்டு),
முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-15
|
No comments:
Post a Comment