வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பகுதி - ஒன்பது
அஷ்டவர்க்கம்..தொடர்ச்சி
அஷ்டகவர்க்க ஆயுர்தயம்.. தொடர்ச்சி
(திரு சிதம்பரம் அவர்களின் சிறப்பு குறிப்பு)
மீண்டும், சூரியன் முதல் இதர கோள்கள் இருக்கும் வீடுகளில் உள்ள எண்ணிக்கையை, கிரக குணாகர அட்டவணையில் அவைகளுக்குரிய எண்ணிக்கையால் பெருக்கி, அனைத்தையும் கூட்டிக் கொள்ளவும். இரண்டு கூடுதல்களையும் (முன்பத்தியில் கிடைத்தது மற்றும் தற்போது கிடைத்தது), கூட்டிக் கொள்ளவும். அவ்வாறு வருவதை 7-ஆல் பெருக்கி, அதனை 27-ஆல் வகுக்க வேண்டும். கிடைக்கும் ஈவானது சூரியனின் ஆண்டுகளைக் குறிக்கும். மீதம் வருவதை 12-ஆல் பெருக்கி, அதனை 27-ஆல் வகுக்க, கிடைக்கும் ஈவானது மாதங்கள் ஆகும். மீதியை 30-ஆல் பெருக்கி, அவ்வாறு கிடைக்கப்பெற்றதை 27-ஆல் வகுக்கவும், ஈவானது நாட்கள் அகும். அதுபோலவே, கதிகள், விகதிகள் ஆகியவற்றைக் கண்டுபிடிக்கவும். இவ்வாறு, நாம் சூரியனின் அஷ்டவர்க்க ஆண்டுகளைப் பெற முடியும்.
இதுபோலவே, சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகியவற்றின் அஷ்டவர்க்க ஆண்டுகளையும் கண்டுபிடிக்கலாம்.
இப்போது, இவ்வாறு பெறப்பட்ட ஆண்டுகள், கீழ்வரும் குறைப்புகளுக்கு உட்பட்டதாகும்.
1. ஒரு கோளானது மற்றொரு கோளுடன் ஒரே வீட்டில் இருந்தால், கழிக்க வேண்டிய அளவானது கிடைத்த அளவில் பாதியாகும்.
2. ஒரு கோள் நீச்ச வீட்டில் இருந்தால், கழிக்க வேண்டிய அளவு பாதியாகும்.
3. அது அஸ்தங்க கோளாக இருந்தால், கழிக்க வேண்டிய அளவு பாதியாகும்.
4. அது பகை வீட்டில் இருந்தால், கழிக்க வேண்டிய அளவு மூன்றில் ஒரு பகுதியாகும்.
5. அந்த கோள் துருவத்தில் பார்க்கும் நிலையில் இருந்தால், கழிக்க வேண்டிய அளவானது பாதியாகும்.
6. அது கோள்களின் யுத்தத்தில் தோற்கும் கோளாக இருந்தால் கழிக்க வேண்டிய அளவு மூன்றில் ஒரு பகுதியாகும்.
7. சூரியன் சந்திரனைப் பொருத்தவரையில் அவை வழக்கத்திற்கு மாறான நிலையில் இருந்தால், கழிக்க வேண்டியது மூன்றில் ஒரு பகுதியாகும்.
குறிப்பு: ஒரு கோளிற்கு பல்வேறு கழிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கணக்கீடுகள் இருந்தாலும், அவைகளில் மேலே குறிப்பிடப்பட்டவையே மிகுதியான அளவு என்பதால், இதுவே போதுமானது.
பல்வேறு கழிவுகளை மேற்கொண்டபிறகு, கோள்களுக்கு கிடைத்த ஆண்டுகளை மொத்தமாகக் கூட்டி, அவற்றை, 334-ஆல் பெருக்கி, 365-ஆல் வகுக்க வேண்டும். அவ்வாறு கிடைக்கும் ஈவானது, ஒரு மனிதனின் உயிர்வாழ் ஆண்டுகள், மாதங்கள், நாட்கள், முதலியவை ஆகும்.
மீண்டும், சனியின் அஷ்டவர்க்கத்தினை எடுத்துக் கொண்டு, மேசத்திலிருந்து ஒவ்வொரு வீட்டிலும் உள்ள எண்களை, இராசிமண்டலக் காரணிகளால் பெருக்கி, அவ்வாறு பெறப்பட்டதைக் கூட்டிக் கொள்ள வேண்டும். சூரியன் முதல் இதர கோள்கள் இருக்கின்ற வீட்டில் உள்ள எண்களை கோள்களின் காரணிகளால் பெருக்கி, அவற்றையும் கூட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் இரண்டையும் கூட்ட வேண்டும். இந்தக் கூடுதலோடு, சனியின் அஷ்டவர்க்கத்தில், திரிகோண, ஏகாதிபத்திய சோதனைகளுக்கு பிறகு கிடைத்த எண்களின் கூடுதலையும் கூட்டிக் கொள்ள வேண்டும். அவ்வாறு பெறப்பட்டதை, சனியின் அஷ்டவர்க்கத்தில், இலக்கினத்திலிருந்து எட்டாவது வீட்டில் உள்ள எண்ணால் பெருக்கி, அதனை 27-ஆல் வகுக்க வேண்டும்; அவ்வாறு செய்ய கிடைக்கும் ஈவானது, ஒரு மனிதனின் ஆயுள் காலமாகும். இருப்பினும், அதன் வீச்சானது 34 – 66 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும். அவ்வாறு கிடைப்பதில், வீச்சானது 1 - 33 ஆண்டுகள் எனில், அவரின் ஆயுள் காலம் 27 ஆண்டுகள்; 27 ஆண்டுகளுக்கு மேலாக இருக்க, வீச்சானது 67-100 ஆண்டுகள் எனும் கால அளவில் இருக்கும், அதே வேளையில் இறப்பானது, தசாக் காலமானது அசுபக் கோளுக்கு உரியதாக இருக்கும் நிலையில் நிகழும். ஒரு மனிதனின் 100 ஆண்டுகால வாழ்வில், இறப்பானது முதல், இரண்டாவது, மூன்றாவது நிலையில் நிகழுமா என்பதை சுருக்கமான முறையில் கண்டுபிடிக்க – ஜெய்மினி சோதிட முறைக் கணிதம் பயன்படுகிறது.
இதுவரையில், நாம் கோள்களின் நலம் தரும் புள்ளிகளைக் கொண்டு பின்னாஷ்டவர்க்கம், சர்வாஷ்டவர்க்கம் ஆகிய அட்டவணைகளைப் பயன்படுத்தி பலன் அறிந்தோம். நலம் தராத புள்ளிகளைக் கொண்டும் அட்டவணைகள் தயாரிக்கலாம் (குறிப்பு-ஆ, பத்தி-8). வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகளை இத்தகைய அட்டவணைகளில் குறிக்கப்படும் எண்களைக் கொண்டு அறிவதற்கு சிறப்பு விதிகள் உள்ளன. பராசரரின் நூல்களைப் படிக்குமாறு வாசகர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பகுதி-9 அஷ்டகவர்க்கம் முடிவுற்றது.
அடுத்து – பகுதி-10 – கோள்களின் துணைத் தொழில்கள்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-16
|
No comments:
Post a Comment