Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Tuesday, December 20, 2016

தொழில்கள் அறியும் முறை - பிருகத் ஜாதகா – 95



வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா

பகுதி   -  பத்து

துணைத் தொழில்கள்

கோள்களின் துணைத் தொழில்கள்


1.  ஒரு மனிதன், தன் தந்தையிடம், தாயிடம், பகைவனிடம், நண்பனிடம், சகோதரனிடம், மனைவியிடம் அல்லது வேலையாளிடமிருந்து, சொத்துக்களைப் பெறுவது என்பது, அவனது சாதகத்தில், இலக்கினத்திலிருந்து அல்லது சந்திரனிடமிருந்து, 10-ம் இடத்தில் இருக்கும் கோளின், முறையே, சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி அல்லது சனி என்பன இருக்கும்  நிலையைப் பொருத்து அமையும்(1). ஒரு மனிதனின் துணைத் தொழிலானது நவாம்ச அதிபதிகளுக்கு உரிய கோள்(2), இலக்கினத்திலிருந்து, சந்திரனிலிருந்து, சூரியனிலிருந்து(3) 10வது வீட்டிற்கு உரிய அதிபதியாக இருப்பதைப் பொருத்து அமையும்.


குறிப்புகள்:

(1)    காரகரின் கருத்துப்படி, அத்தகைய கோளின் தசாக்காலத்தில் அவர் சொத்துக்களைப் பெறுவார். இலக்கினத்திலிருந்து 10வது வீடு, சந்திரனிலிருந்து 10வது வீடு ஆகிய இரண்டிலும் கோள்கள் இருக்குமானால், அந்த மனிதர் அத்தகைய இரண்டு முறைகளிலும் சொத்துக்களை அடைவார்; பல கோள்கள் 10வது வீட்டில் இருந்தால், பல்வேறு வழிகளிலும் சொத்துக்களை அடைவார்.

(2)    பத்தி 2 மற்றும் 3-ன் படி

(3)    எடுத்துக்காட்டாக, இலக்கினம் கடகமாக இருக்க, கடகத்திலிருந்து 10வது வீடு, மேசமாகும்; மேசத்தின் அதிபதி செவ்வாய்; ஒருவேளை, செவ்வாயானது தனுசுவின் நவாம்சத்தில் இருந்தால்; தனுசுவின் அதிபதி வியாழன், எனவே வியாழனின் துணைத்தொழிலானது, அந்த மனிதனின் துணைத்தொழிலாக, வியாழனின் தசாக் காலத்தில் அமையும் என்பது, காரகரின் கருத்து ஆகும். மேலும், ஒரு மனிதனின் துணைத்தொழிலானது, மேலே குறிப்பிட்ட மூன்றும், அதாவது இலக்கினத்திலிருந்து, சந்திரனிலிருந்து, சூரியனிலிருந்து 10வது வீட்டு அதிபதிகளால், நவாம்ச அதிபதிகளிடத்தில் இருக்கும் நிலைக்கு ஏற்ப அமையும்.


2. நவாம்ச(1) அதிபதி சூரியனாக இருந்தால், அந்த மனிதன், வாசனைப் பொருட்கள், தங்கம், கம்பளி, மருந்துகள், நோயாளிகளுக்கு மருத்துவம் செய்தல் ஆகியவற்றின் மூலம் சொத்துக்களைப் பெறுவார். சந்திரனாக இருந்தால், அவர், விவசாய நிலம், தண்ணீர் உற்பத்தி(2), மற்றும் பெண்கள்(3) மூலமாக சொத்துக்களை அடைவார். அது செவ்வாயாக இருந்தால், சொத்துக்களானது உலோகம், தாதுக்கள், நெருப்பு(4), ஆயுதங்கள் ஆகியவற்றின் மூலம் கிடைக்கப் பெறுவதுடன், நெஞ்சுறுதியாலும் அடைவார். அது புதனாக இருந்தால், அவர் எழுத்து, கணக்காளர், மற்றும் அது போன்றவற்றாலும்(5), மேலும் பல்வேறு கலைத்திறன்(6) மூலமும் சொத்துக்களை அடைவார்.


குறிப்புகள்:

(1)    அதாவது, இலக்கினத்திலிருன்து, சந்திரனிலிருந்து, சூரியனிலிருந்து 10வது அதிபதி, நவாம்சதிலிருக்கும் வீட்டின் அதிபதி.
(2)    முத்துக்கள், பவளங்கள், சங்குகள், திமிங்கில எலும்புகள், அது போன்றவை.
(3)    அவர்களின் கீழ் பணிபுரிதல் அல்லது அவர்களைப் பின்பற்றி.
(4)    நெருப்பு: தீயணைப்பு வண்டியின் ஓட்டுனர் அல்லது தீப்பெட்டி வணிகர் போன்றவை.
(5)    எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு உரை எழுதுதல் போன்றவை.
(6)    அதாவது, வண்ணம் தீட்டுதல், புத்தகம்-கட்டுதல், அம்பு தயாரித்தல் அல்லது மலர்வளையங்கள் தயாரித்தல், சந்தனம் அரைத்தல், வாசனை பொருட்கள் தயாரித்தல் போன்றவை.


குறிப்பு (நிமித்திகன்): 

  துணைத் தொழில்கள் என்று குறிப்பிடப்பட்டாலும், இது தான் முதன்மைத் தொழிலாக இருக்க வேண்டும். அதாவது, ஒரு சாதகருக்கு சொத்துக்கள் எவ்வகையில் கிடைக்கும் என்பதை வராக மிகிரர் விளக்குகிறார்.  தொழிலின் மூலமாகக் கிடைக்கிறது என்பதாலும், 10 இடம் முதன்மைப் பெற்று இருப்பதாலும், துணைத் தொழில் என்பதே முதன்மைத் தொழில் எனலாம். மேலும் வராக மிகிரரின் காலத்தில், தந்தைத் தொழிலையே முதன்மைத் தொழிலாக தனயன்கள் செய்து வந்தமையால், பிறத் தொழில்களை அவர் துணைத் தொழில் என்று குறிப்பிட்டுள்ளார் எனலாம்.

துணைத் தொழில்கள் தொடரும்…




முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-16


No comments: