சோதிடம் அறிவியலா எனும் கேள்வி எழும்போது, அது இரண்டாக பிரிக்கப்பட்டு விடுகிறது. (1) சோதிடக் கணிதம், (2) பலன் உரைத்தல்.
சோதிடம் பொய்யென்று சொல்பவர்கள்கூட, அதன் கணித முறையினை, அதாவது வானியல் கணித முறையினை ஏற்றுக் கொள்கிறார்கள். அடிப்படையில் சூரிய மையக் கொள்கை, பூமி மையக் கொள்கை எனும் வேறு பாட்டினை அவர்கள் முன் வைத்தாலும், கணித்து வரும் விடையானது இரண்டு மையக் கொள்கையிலும் ஒன்றாகவே வருவதால் அவ்வளவாக அதனை மறுப்பதில்லை. பூமி மையக் கொள்கை என்பது நமது நாட்டில் பன்னெடுங்காலமாக பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. அதுதான் சோதிடக் கணிதத்தின் அடிப்படை. மேலை நாட்டிலும், கலிலியோவிற்கு முன்பு வரையில் தாலமியின் கொள்கையான பூமி மையக் கொள்கையே பின்பற்றப்பட்ட வந்துள்ளது. இதுபற்றி நாம் ஏற்கனவே பதிவு செய்துள்ளோம்.
ஆக சோதிடக் கணக்குகளும், சோதிடக் கட்டங்களும் வானியலின் வரையறைக் கணிதத்தில் அடங்கி விடுகின்றன. அந்தக் கணிதத்தினை, அடிப்படைக் கணித அறிவும், தொகுத்தளிக்கப்பட்ட தரவுகளும்(pre-defined data), அதாவது பஞ்சாங்கம் போன்றவற்றின் உதவியோடு யாரும் கணித்துவிடலாம். அனைவருக்கும் விடை ஒன்றேதான் வரும். அதாவது, ஒருவரின் பிறந்த நேரத்தினைக் கொடுத்து, குறிப்பிட்ட பஞ்சாங்கத்தினையும் (வாக்கியம் அல்லது திருக்கணிதம்) கொடுத்து, இருவேறு சோதிடர்களிடம் சாதகம் கணிக்கச் சொன்னால், இருவருமே, ஒரே மாதரிதான் கணித்து தருவார்கள். அதாவது, இருவரின் கணிப்பு சாதகமும் ஒன்றாகவே இருக்கும்.
ஆனால், ஒருவரின் சாதகத்தினை நகல் எடுத்து, இரண்டு சோதிடர்களிடம் கொடுத்து பலன் உரைக்க சொன்னால், நிச்சயம் இருவரின் பலன் உரைத்தலும் மாறுபட்டுத்தான் இருக்கும். பொதுத்தகவல்கள் வேண்டுமானால் ஓரளவு ஒத்துபோகலாம், ஆனால் பெரும்பாலன கணிப்புகள் வேறுபாட்டுடனேயே இருக்கும். இது அனைத்து சோதிடருக்கும் பொருந்தும்.
இதைத்தான் அறிவியலாளர்கள் ஏற்க மறுக்கின்றார்கள். அவர்கள் முன்வைக்கும் காரணம், சோதிடம் அறிவியற்கணிதம் என்றால், எவர் கணித்தாலும் விடை ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால் ஏன் மாறுபடுகிறது என்பதுதான் அவர்களின் வாதம். இது நியாயமான வாதமும்கூட. அப்படி என்றால், பலன் உரைக்கும் கணித முறை தவறானதா? சோதிடம் என்பது கணித அறிவியல் இல்லையா?
இன்று
31.12.2017. இன்றைய தினம் நான்கு நாளிதழ்களில் வெளிவந்த இராசிபலனில், மேச இராசிக்கு
உரிய பலனைக் கீழே தந்துள்ளேன்.
இதில்
பணவரவு என்பது மட்டும், மூவரின் பலனில் ஒத்துப் போகிறது. மற்றவை சற்று மாறுபட்டு உள்ளது.
இதனைக் கணித்தவர்கள் சோதிட அறிவாற்றல் உடையவர்கள்தான். ஆனால் கணிப்பு ஏன் மாறுபடுகிறது
என்பதுதான் கேள்வி.
சரி,
இன்று மழை வருமா? யாரைக் கேட்கலாம்? நுங்கம்பாக்கம் வானியல் நிலையம்? வெதெர்மேன்? நார்வே
மெட்ரோலாஜிகல்? நாசா? எவர் சொன்னால் துள்ளியமாக இருக்கும்?
பலன்
உரைத்தல் தொடரும்…