வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பகுதி - பதின்மூன்று
சந்திரனின் யோகங்கள்
1. சூரியனிலிருந்து(1) சந்திரன், கேந்திரத்தில், பணபரத்தில் அல்லது ஆபோக்லிமத்தில் இருப்பதைப் பொருத்து ஒருவரின் ஒழுக்கம், சொத்து, அறிவு, புத்திக் கூர்மை, திறமை ஆகியவை குறைவாக, நடுத்தரமாக அல்லது உயர்வாக இருக்கும், சந்திரன் அதன் சொந்த நவாம்சத்தில் அல்லது அதிமித்ர நவாம்சத்தில்(2) இருந்தால் அந்த மனிதர் செல்வந்தராகவும் வசதிகளுடனும் வாழ்வார், இருப்பினும் பகலில் பிறந்திருந்தால் வியாழனாலும், இரவில் பிறந்திருந்தால் வெள்ளியாலும் அது பார்க்கப்பட வேண்டும்.
குறிப்புகள்:
(1)
பிறந்த பொழுது. அதாவது சந்திரனானது சூரியன் இருக்கும் வீட்டில் அல்லது அந்த வீட்டிலிருன்து 4வது, 7வது 10வது வீடுகளில் இருந்தால் அத்தகைய திறன்களில் கொஞ்சம் பெற்றிருப்பார்; சூரியன் இருக்கும் வீட்டிலிருந்து 2வது, 5வது, 8வது, 11வது வீடுகளில் சந்திரன் இருந்தால், அவர் அத்தகைய திறன்களை நடுத்தரமாகப் பெற்றிடுவார்; சூரியன் இருக்கும் வீட்டிலிருந்து 3வது, 6வது, 9வது, 12வது வீடுகளில் சந்திரன் இருந்தால், இத்தகைய திறன்களை உயர்வாகப் பெற்றிடுவார்.
(2)
அதிமித்ர நவாம்சம் என்பது அதிமித்ர அல்லது நட்புக் கோளின் நவாம்சமாகும்.(பகுதி-2, பத்தி-18).
2. சுபக் கோள்கள்(1), சந்திரனிலிருந்து 6வது, 7வது, 8வது வீடுகளில் இருந்தால், அந்த யோகமானது அதியோகம்(2) எனப்படும். இந்த யோகத்தில் பிறந்த ஒருவர், தளபதி, அமைச்சர் அல்லது அரசனாக(3) ஆவதுடன் மிக்க மகிழ்ச்சியுடனும் சொத்துக்களுடனும், அடிமைகளைக் கொண்டும், நீண்ட ஆயுளுடன் நோய்நொடிகள் இன்றியும் பயமற்றும் வாழ்வார்.
குறிப்புகள்:
(1)
அவை முறையே, புதன், வியாழன், வெள்ளி ஆகும்.
(2)
ஸ்ருதகீர்த்தியின் கருத்துப்படி, இந்த யோகமானது சுபக் கோள்கள் ஒன்று அல்லது மூன்று வீடுகளில் இருக்கும் நிலைக்கேற்ப, 7 வகைகளாகப் பிரிக்கப்படும். அவை சந்திரனிலிருந்து இருக்கும் நிலைக்கேற்ப (1)அனைத்து மூன்று வீடுகளிலும்; (2) 6வது மற்றும் 7வது வீடுகளில்; (3) 6வது மற்றும் 8வது வீடுகளில்; (4) 7வது மற்றும் 8வது வீடுகளில்; (5) 6வது, (6) 7வது; (7) 8வது வீட்டில்.
(3)
அதன்படி, புதன், வியாழன் மற்றும் வெள்ளி முறையே, வலிமையற்று, நடுத்தர வலிமை அல்லது மிகப்பெரும் வலிமை – பத்ராயணரின் கூற்றுப்படி.
சாரவளி எனும் சோதிட நூலின்படி, அதியோகமானது இராஜ யோகத்துடன் வகைப்படுத்தப்படுகிறது – அதாவது புதன், வியாழன், வெள்ளி ஆகியவை அஸ்தங்க கோள்கள் இல்லாமலும், அல்லது அசுபக் கோள்களினால் பார்க்கப்படாமலும் இருக்க வேண்டும். மாந்த்வியாவும் இதே கருத்தினைக் கொண்டிருக்கிறார். ஸ்ருதகீர்த்தியின் கருத்துப்படி, தீயக் கோள்கள், சந்திரனிலிருந்து 6வது, 7வது, 8வது வீடுகளில் இருந்தால், அதன் பலன் தீயதாக இருக்கும். சுப மற்றும் அசுபக் கோள்கள் இரண்டும் மேற்படி வீடுகளில் இருந்தால், அதன் பலனானது நன்மை தீமை இரண்டும் கலந்து இருக்கும்.
…….. சந்திரனின் யோகங்கள் தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|