சேஷ்டா பலம் (அ) கோள்களின் நகர்வின் வலிமை
கோள்களின் ஆறு வகை வலிமைகளில் அடுத்து நாம் பதியவிருப்பது சேஷ்டா
பலம் என்கிற கோள்களின் நகர்வினால் ஏற்படும் வலிமை.
அதாவது கோள்கள் சூரியனை மையமாகக் கொண்டு சுற்றிவந்தபோதிலும்,
பூமியிலிருந்து நாம் காணும்போது, சூரியன் உட்பட அனைத்து கோள்களும் பூமியைச் சுற்றிவருவதாகத்தான்
கருதுகிறோம். [பார்க்க: பூமி மையக் கொள்கை ஏற்புடையதா? எனும் பதிவு – சோதிட ஆய்வு
21-30]
அவ்வாறு சுற்றிவரும் கோள்கள், தாம் சுற்றி வரும் நிலையில் பெறும்
வலிமையினைக் கணக்கிடுவதே சேஷ்டா பலம் எனப்படுகிறது. குறிப்பாக சுற்றி வருகிறது என பொதுவில்
கூறினாலும், சூரியன், சந்திரன் தவிர்த்து பிறக் கோள்கள் தமது வக்கிர நிலையில் எவ்வளவு
வலிமை பெறுகிறது என்பதைக் கணிப்பதே சேஷ்டா பலம் எனப்படுகிறது.
வக்கிரம் என்பது கோள்கள் பின்னோக்கி நகர்வது போன்ற மாயத்தோற்றமே
ஆகும். பூமியிலிருந்து பார்க்கும்போது அவை தமது சுற்றுப்பாதையிலிருந்து ஒரு குறிப்பிட்ட
கால அளவிற்கு பின்னோக்கி நகர்வதுபோலவும் பின்னர் வக்கிர நிவர்த்தி எனும் நிலை அடைந்து
மீண்டும் முன்னோக்கி நகர்கின்றன என்பதையும் நாம் ஏற்கனவே பதிவு செய்துள்ளோம் [பார்க்க:
இராசிகளில் கோள்களின் நகர்வு எனும் பதிவு – சோதிட ஆய்வு 41-50]
சோதிட விதிப்படி, கோள்கள் வக்கிர நிலையில் அதிக வலிமை [நன்மை
அல்லது தீமை] பெறும் எனக் கூறப்படுகிறது. வக்கிரம் என்பது சூரியன்-சந்திரன் மற்றும்
இராகு-கேது இவைகளுக்குக் கிடையாது என்பதால், பிற கோள்கள் வக்கிரம் பெறும் வலிமையினையே
கருத்தில் கொள்ளப்படுகிறது.
சேஷ்டா பலம் கணிதமானது சற்று சிக்கலானக் கணிதமாக உள்ளது. இதன்படி,
கோள்களின் மத்திய ஸ்புடம், சுத்த ஸ்புடம், சீக்கிரோச்சம் (அ) அதிவேகம், ஜேஷ்ட கேந்திரம்
ஆகியவைகளைக் கண்டுபிடித்து கணக்கிடும் முறையாக உள்ளது. இதுவும் முன்பு கூறியவாறு சஷ்டியாம்சம்
எனும் அளவீட்டில் கணக்கிடப்படுகிறது. அதன்படி, ஒரு கோளிற்கு எவ்வளவு பலம் இருக்க வேண்டும்,
அல்லது அது பெற வேண்டிய அளவிலிருந்து எவ்வளவு சதவீதம் குறைவாக இருக்கிறது எனக் கணக்கிடப்படுகிறது.
சேஷ்டா பலம் கணக்கீடு என்பது சூரியன் சந்திரன் உள்ளடக்கிய ஏழு
கோள்களுக்கு மட்டுமே கணக்கிடப்படுகிறது.
இங்கு மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவெனில், கோள்களின்
நகர்வின் கணிதத்தினைக் கொண்டு சேஷ்டாபலம் கணக்கிடப்படுகிறது. அந்தக் கணித முறையானது,
சற்று சிக்கலாகவும் ஆனால் அதே வேளையில் அதன் அடிப்படையானது, கோள்கள் இருக்கும் நிலையினை
வானியல் கணிதத்தோடும் கணக்கிடப்படுகிறது.
தற்போது இதனைக் கணிதம் செய்பவர்கள் மிகக் குறைவாகவே இருக்கிறார்கள்.
மிகவும் சிக்கலானக் கணிதமும், அவற்றை செய்வதற்கான கால அளவும் காரணமாக இருக்கலாம். இங்கு
நாம் சட்பலத்தின் ஒரு வகையான சேஷ்டா பலத்தினைப் பதிவு மட்டுமே செய்கிறோம். கணித முறைப்
பற்றி தேவைப்படும்போது விரிவாகப் பதிவிடலாம்.
சேஷ்டா பலம் கணக்கிடப்படுவதின் நோக்கமானது, ஒரு கோள் வக்கிர
நிலையில் இருப்பதால் மட்டுமே வலிமை குன்றியது என்றோ அல்லது உச்ச நிலையில் இருப்பதால்
மட்டுமே வலிமை மிகுந்து இருக்கிறது என்றோ பலன் உரைத்துவிடக் கூடாது என்பதுதான்.
சேஷ்டா பலக் கணக்கீட்டின் மூலம், மிகக் குறிப்பாக, வக்கிரம்
பெற்ற கோள்கள் தரும் பலன்கள் கணக்கில் கொள்ளப்படுகிறது. பொதுவாக வக்கிரம் பெற்ற கோள்கள்
சேஷ்டா பலம் அதிகம் பெற்றிருந்தால் நன்மை செய்யும் எனக் கூறப்பட்டாலும், சோதிட நூல்களுக்கு
இடையே அவற்றில் வெகுவாக மாறுபாடு காணப்படுகிறது.
அடுத்து..நைசர்க்கிக
பலம் (அ) இயற்கை வலிமை
No comments:
Post a Comment