திசையினில் வலிமை (அ) திக் பலம்
இராசிகள் பெறும் திசை என்பது மேசம்–கிழக்கு எனத் தொடங்கி, தெற்கு,
மேற்கு, வடக்கு என வரிசையாக, மீனம்-வடக்கு என முடிவடையும் என ஏற்கனவே பதிவு செய்திருக்கிறோம்.
ஆனால், சட் பலத்தில் திசை என்பது, இலக்கினத்தில் தொடங்கி நான்கு
நாற்கரங்கள், அதாவது நான்கு கேந்திரங்களில் திசைகளை வரிசைப்படுத்துவதாகும்.
இதன்படி, இலக்கின கேந்திரம்- கிழக்கு, இரண்டாவது கேந்திரமான
நான்காம் வீடு தெற்கு, மூன்றாவது கேந்திரமான ஏழாவது வீடு மேற்கு, நான்காவது கேந்திரமான
10வது வீடு வடக்கு என வரிசைப்படுத்தப்படுகிறது.
இங்கு, குறிப்பிடத்தக்க தகவல் என்னவெனில், சில கோள்கள் சில திசைகளில்
முழு பலமும், அதற்கு நேர்-எதிர் திசையில் முழுவதுமாக பலமிழந்தும் காணப்படும் என சோதிட
நூல்கள் கூறுகின்றன.
இதன்படி, இலக்கினத்தில் (கிழக்கில்) குருவும் புதனும் வலிமையுடனும்,
அதற்கு நேர் எதிரான மூன்றாவது கேந்திரத்தில் வலிமை குன்றியும் இருக்கும்.
இரண்டாவது கேந்திரத்தில் (தெற்கில்) சந்திரனும் சுக்கிரனும்
வலிமையுடனும், அதற்கு நேர் எதிரான நான்காவது கேந்திரத்தில் வலிமை குன்றியும் இருக்கும்.
மூன்றாவது கேந்திரத்தில் (மேற்கில்) சனி வலிமையுடனும், அதற்கு
நேர் எதிரான முதல் கேந்திரத்தில் வலிமை குன்றியும் இருக்கும்.
நான்காவது கேந்திரத்தில் (வடக்கில்) சூரியனும் செவ்வாயும் வலிமையுடனும்,
அதற்கு நேர் எதிரான இரண்டாவது கேந்திரத்தில் வலிமை குன்றியும் இருக்கும்.
அதாவது, உச்ச வீட்டிற்கு நேர் எதிரான 180 பாகை நீச்சம் பெறுவது
போல், ஒரு கேந்திரத்திற்கு உரிய திசைக்கு நேர் எதிரான கேந்திரத்தின் திசையானது அக்கோலிற்கு
வலிமை குன்றி இருக்கிறது. இது ஏற்புடையதாகும்.
கேந்திரங்களைக் கிழக்கில் இருந்து வரிசைப்படுத்தியது, வான் கணித
முறையிலும், தர்க்க முறையிலும் ஏற்புடையதாகவே இருக்கிறது.
இந்த முறைப்படி, கோள்கள் திசைகளில் பெறும் வலிமை சஷ்டியாம்சம்
எனும் கணித அளவீட்டில் கணக்கிடப்படுகிறது.
அவ்வாறு கணக்கிடப்படுவதில், அதிக சஷ்டியாம்ச புள்ளிகள் பெறும்
கோள்கள் அதிக வலிமையும், குறைந்த புள்ளிகள் பெறுபவை குறைவான வலிமையும் பெறுகின்றன.
முன்பு கூறியவாறே, திக் பலத்தில் அதிக வலிமை பெற்ற கோள்கள் அதிக
நன்மைகளையும், குறைவான வலிமை பெற்ற கோள்கள் தீய பலன்களையும் வழங்கும் என சோதிட நூல்கள்
கூறுகின்றன.
………..அடுத்து
கால பலம்
No comments:
Post a Comment