சோதிட வரையறையில் இதுவரையில் சூரியன் முதல்
சனி வரையிலான கோள்களின் வரையறைகளைப் பார்த்தோம். சூரியன் விண்மீனாக இருந்தாலும் சோதிடக்
கணக்கில் கோள் எனும் நிலையில் உள்ளதையும் முன்பே பதிவு செய்திருக்கிறோம். துணைக் கோளான
சந்திரன், மற்ற கோள்களான செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகியவையும் கோள்களின்
கணக்கில் வரும். இவை அனைத்தும் காண்-நிலைக் கோள்கள். ஆனால் சோதிடத்தில், உருவமில்லாமல்,
நிழல் கோள்கள் எனும் தகுதியில் உள்ள இரண்டு கோள்கள் இராகுவும் கேதுவும். இந்த இரண்டு
கோள்களுக்கும் சோதிடத்தில் மிக முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது. “இராகுவும் கேதுவும்
கோள்களின் கணக்கில்” எனும் தலைப்பில் இவைபற்றி ஏற்கனவே விரிவான மூன்று பதிவுகள் பதிவு
செய்யப்பட்டுள்ளன. அதனைப் படிக்காதவர்கள், படித்த பின் தொடர்வது நலம்.
இராகுவும் கேதுவும் சூரிய-சந்திர வட்டப்பாதையின்
இரு வெட்டுப் புள்ளிகள். அவ்வளவுதான். ஆனால் அந்த வட்டப்பாதைகளின் கோண அளவில் ஏற்படும்
மாற்றத்திற்கு ஏற்ப, பிறக் கோள்களிலும், சூரிய சந்திர நிலைகளிலும் ஏற்படும் விளைவுகளே,
இராகு-கேது விளைவுகள்.
இராகு-கேது எனும் கோள்களின் பயன்பாடானது, சோதிடப்
பயன்பாட்டில் ஆரம்பக் காலங்களில் பயன்படவில்லை என்று சொல்வதைவிட, அவைகளுக்கு அவ்வளவு
முக்கியத்துவம் தரவில்லை என்றே தெரியவருகிறது. வராக மிகரரின் பிருகத் சாதகத்தில், நாலைந்து
இடங்களில் இராகு எனும் வார்த்தை வருகிறது. கேது எனும் வார்த்தை ஒரே ஒரு இடத்தில் மட்டுமே
வருகிறது. அதுவும் கேது என்பது சந்திரனின் பாதையில் கீழ் நிலை புள்ளி (descending
node) என ஒரு விளக்கத்தோடு முடிந்துவிடுகிறது. உரையாசிரியர் திரு சிதம்பரம் அவர்கள்
தமது குறிப்பில் வேறு சில இடங்களில் இராகு-கேதுவைப் பயன் படுத்துகிறார். அவ்வளவுதான்.
ஆக, ஆரம்பக் காலத்தில், அவ்வளவாக பயன்பாட்டில்
இல்லாத இராகுவும் கேதுவும், தற்போதைய சோதிடக் கணக்கீட்டில் தவிர்க்க முடியாத பயன்பாடாக
இருக்கிறது. பின்னர் வந்த சோதிட ஆசிரியர்கள் அதன் பயனை ஆராய்ந்து இணைத்திருக்கலாம்.
எனது முதுகலை சோதிடவியல் பட்டத்திற்காக நான் செய்த ஆய்வு: “கால தாமத திருமணத்தில் கேதுவின்
பங்கு” என்பதுதான். அதில் கேது தாமத திருமணத்திற்கு எவ்வாறு காரணமாக இருக்கிறது என்பதை
ஆராய்ந்திருக்கிறேன்.
எனவே, இன்றைய சோதிட கணக்கீட்டில் இராகு – கேது
ஆகிய இரு வெட்டுப் புள்ளிகளுக்கும் (அல்லது நிழல் கோள்களுக்கும்) வரையறை செய்ய வேண்டியுள்ளது.
இராகுவின் சோதிட வரையறை
தந்தைவழி முன்னோர்கள்
பிரமாண்டம்
நஞ்சு
திடீர் யோகம்
அகழ்வு
ஆய்வு
அயல் உறவு
நோய்
இவற்றின் நீட்சி
கேதுவின் சோதிட வரையறை
தாய்வழி முன்னோர்கள்
கேள்வி ஞானம்
வித்தை
மருத்துவம்
விரக்தி மனப்பான்மை
இவற்றின் நீட்சி
இங்கு வரையறை செய்தவை,
பொதுவாக சோதிட நூல்களில் வரையறை செய்யப்பட்டவை. இராகுவின் வரையறையில் நஞ்சு என்பது
நஞ்சுடைய உயிரினங்களின் தாக்கம்; பிரமாண்டம் என்பது அளவற்றது, எதிர்பாராதது; அகழ்வு
என்பது தோண்டுதல், பழையன; அயல் உறவு என்பது குருதிவகை உறவு இல்லாதது; என நீட்சி செய்யலாம்.
கேதுவின் வரையறையில் கேள்வி ஞானம் என்பது தானே அறிந்துணர்தல், வித்தை என்பது தந்திர
வித்தைகள் உள்ளடங்குதல்; மருத்துவம் என்பது மருந்தியல்; விரக்தி என்பது கோபம், தடை,
தாமதம் என நீட்சி செய்யலாம். இராகுவிற்கு தந்தை வழி பாட்டன் என்பதால் கேதுவிற்கு தாய்வழிப்பாட்டன்
என வகுக்கப்பட்டிருக்கலாம். (உத்திர காலாமிர்தத்தில் கேதுவிற்கு தந்தை வழிபாட்டன்)
இருப்பினும் இவற்றை, வானியல் தன்மைகளோடு ஒப்பீடு செய்ய முடியவில்லை. தர்க்க முறையில்
கூட ஒப்பீடு செய்ய முடியவில்லை. ஆனால் இந்த
வரையறைகள் பெரும்பாலும் சாதகக் கணிப்பில் பொருந்தி வருகின்றன. அதனையே நாமும் ஏற்க வேண்டியுள்ளது.
………….அடுத்து
– வீடுகளில் கோள்களின் வலிமை
No comments:
Post a Comment