வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பகுதி - ஏழு
ஆயுர்தயம் அல்லது உயிர்வாழ் நாட்களைத் தீர்மானித்தல் (தொடர்ச்சி)
2. கோள்கள் தமது நீச்ச பாகையில் இருந்தால், அவைகளின் ஆண்டுகள் என்பது மேலே குறிப்பிடப்பட்டதில் பாதி அளவு ஆகும்; மற்ற இடங்களில் இருந்தால், அவற்றின் தன்மைக்கேற்ப விகிதாசாரத்தில் கணக்கில் கொள்ள வேண்டும்(1). இலக்கினம் கொடுக்கும் ஆண்டுகளின் எண்ணிக்கை என்பது, உதய இராசிக்கு உரிய நவாம்சத்தின் எண்ணிக்கைக்கு சமமானதாக இருக்கும், அதாவது உதயத்திற்கு மேலாக (2) உள்ளதாக இருக்கும். வேறு சிலரின் கருத்துப்படி (3), இலக்கினம் கொடுக்கும் ஆண்டுகள் என்பது, முதல் இராசியான மேசத்திற்கும் இலக்கினத்திற்கும் இடையில் இருக்கும் இராசிகளின் எண்ணிக்கைக்கு உட்பட்டதாகும்(4). மேலும், ஒரு கோள், பகை வீட்டில் இருந்தால், அது தன் ஆண்டுகளில் மூன்றில் ஒரு பகுதியை இழக்கும்(5); அந்த கோள் அஸ்தங்கம்(6) ஆகி இருந்தால், அது பாதி ஆண்டுகளை இழக்கும்(7); ஆனால், செவ்வாய்(8) பகை வீட்டில் இருந்தாலும், அல்லது சனியும் சுக்கிரனும் அஸ்தங்கம் ஆகி இருந்தாலும், குறைக்க வேண்டிய அவசியம் இல்லை.
குறிப்புகள் (திரு. சிதம்பரம்):
(1) இத்தகைய முறையில் குறைப்பது நீச்சர்தஹரனா எனப்படும். எடுத்துக்காட்டாக, ஒருவேளை, சூரியன் தனுசு இராசியில் 21 பாகையில் இருப்பதாகக் கொள்வோம். அதற்குரிய ஆண்டுகளாவது: – மேசத்தில் சூரியன் 10 பாகையில் உச்சத்தில் இருக்கும், அதன் நீச்ச நிலையானது துலாத்தில் 10 பாகையில் இருக்கும். நீச்ச பாகையில் சூரியனின் ஆண்டுகள் என்பது உச்ச பாகையில் இருக்கும் ஆண்டில் பாதியாக இருக்கும், அதாவது 19 ஆண்டுகளில் பாதியாகும் அல்லது 9½ ஆண்டுகள் ஆகும். துலாத்தின் 10வது பாகையிலிருந்து மேசத்தின் 10வது பாகைவரையில் 180
பாகைகள் ஆகும். அதன்படி, ஒவ்வொரு பாகையும் 9½/180
ஆண்டுகளாக இருக்கும். தற்போது துலாத்தின் 10வது பாகையிலிருந்து தனுசின் 21வது பாகை வரையில் – 2 இராசிகள் மற்றும் 11 பாகைகள், அதாவது 60 +11 அல்லது 71 பாகைகளாக இருக்கும். 71
பாகையானது, 71
x 9½ /180 ஆண்டுகள் = 3 வருடங்கள் 8 மாதங்கள் 29 நாட்கள் என வரும். மற்றக் கோள்களின் ஆண்டுகளையும் இவ்வாறே கணிக்க வேண்டும். இத்தகைய ஆண்டுகள் மேலும் சில கழித்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும், அதனை பின்னர் காண்போம்.
(2) இலக்கினாயுர்தயா என்ன என்பதை ஆசிரியர் விளக்குகிறார்: அதாவது, உதய இராசியும், கோள்களைப் போலவே ஆண்டுகளைக் கொடுக்கிறது என்பதாகும். இராசி சக்கரத்தில் உள்ள ஒரு வீடானது ஒன்பது நவாம்சங்களைக் கொண்டிருப்பதால், நமக்கு ஒன்பது ஆண்டுகளைத் தருகிறது. அதன்படி, சிம்மத்தின் 10வது பாகை உதயமாக இருந்தால், இலக்கினம் கொடுக்கும் ஆண்டுகள் என்பதூ
10/30 x 9 ஆண்டுகள் = 3
ஆண்டுகள் ஆகும்.
(3) வேறு சிலர்: மனித்தா மற்றும் அவரது வழிவந்தவர்கள். இது உரையாசிரியரின் கருத்தாகும்.
(4) அதாவது, இராசிக் கட்டத்தில் உள்ள ஒவ்வொரு இராசியும் ஒரு வருடத்தைக் கொடுக்கிறது; அதன்படி, – மேசத்திலிருந்து ஐந்தாவது இராசியான சிம்மத்தின் 10வது பாகை உதயமாக இருந்தால், இலக்கினம் கொடுக்கும் ஆண்டுகள் என்பது = 4
+ 10/30 ஆண்டுகள் = 4 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள் ஆகும். உரையாசிரியரின் கூற்றுப்படி – சாரவளியில் கூறியவாறு, இலக்கினாயுர்தயாவிற்கு, நவாம்சத்தின் உதய அதிபதி வலுவுடன் இருந்தால் குறிப்பு
(2)-ல் கூறிய விதியைப் பயன்படுத்த வேண்டும், மேலும் உதய இராசியின் அதிபதி வலுவுடன் இருந்தால் இந்தக் குறிப்பில் கூறியதையும் பின்பற்ற வேண்டும்.
(5) குறிப்பு
(1)-ல் கூறியதை கோள்களின் கால அளவிற்கு பயன்படுத்த வேண்டும். அதாவது, அதன் 2/3
ஆண்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த கழிவிற்கு சத்ரு-க்ஷேத்ரஹரனா என்று பெயர்.
(6) ஒரு கோள் அஸ்தங்கம் ஆகியிருக்கின்றது என்றால், அது சூரியனின் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் மறைந்திருக்கிறது என்று பொருள், அதாவது அதன் ஒளியானது, சூரியனின் ஒளியால் மறைக்கப்பட்டிருக்கிறது என்று பொருள். இந்த வரையறை என்பது கோள்களுக்குத் தக்கவாறு மாறுபடும். நேரடியாக, மறைவு மற்றும் மறு தோன்றல் என்பது கீழ்வருமாறு:
செவ்வாயானது சூரியனுக்கு 17 பாகைக்குள் இருக்கும்போது
புதனானது சூரியனுக்கு 14 பாகைக்குள் இருக்கும்போது; ஆனால் அது வக்கிர நிலையில் இருந்தால், சூரியனுக்கு 12 பாகைக்குள் இருக்கும்போது
வியாழனானது சூரியனுக்கு 11 பாகைக்குள் இருக்கும்போது
வெள்ளியானது சூரியனுக்கு 10 பாகைக்குள் இருக்கும்போது; ஆனால் அது வக்கிர நிலையில் இருந்தால், சூரியனுக்கு 8 பாகைக்குள் இருக்கும்போது
சனியானது சூரியனுக்கு 15 பாகைக்குள் இருக்கும்போது
சந்திரனானது சூரியனுக்கு 12 பாகைக்குள் இருக்கும்போது
இத்தகைய கழிவிற்கு அஷ்டங்கட-ஹரனா என்று பெயர்.
(7) அதாவது, அதன் கால அளவில் பாதியை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், சத்ருக்ஷேத்ரா மற்றும் அஸ்தங்க ஆகிய இரண்டு கழிவுகளையும் செய்ய வேண்டியிருந்தால், அதில் பெரியதை கழிவு செய்ய வேண்டும் (காரகர்).
(8) வக்கிரம் எனும் சொல் பயன்படுத்தப்படுகிறது; இது ‘செவ்வாய்’ என்று சிலராலும், ‘வக்கிர நிலையில் இருக்கும் கோள்’ என வேறு சிலராலும் இருவிதமாக பொருள் கொள்ளப்படுகிறது. அதன்படி, பிந்தையக் கருத்துப்படி, வக்கிர நிலையில் இருக்கும் கோள்கள் பகை வீட்டில் இருந்தால் அதன் ஆண்டில் எவ்வித கழிவும் செய்ய வேண்டியதில்லை. இதையே வராக மிகிரர் உறுதி செய்கிறார். ஆனால் மற்றவர்கள் பத்ராயனா மற்றும் காரகரின் கருத்தை ஆதரிக்கிறார்கள்.
………ஆயுர்தயம் அல்லது உயிர்வாழ் நாட்களைத் தீர்மானித்தல் (தொடரும்)
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-16
|
No comments:
Post a Comment