Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Saturday, July 2, 2016

சனி – சோதிட வரையறை




இராசிக் கட்டத்தில் அமைந்திருக்கும் ஒன்பது கோள்களில், ஒரு கோளை மட்டுமே சற்று அச்சத்துடன் பார்க்கும் தன்மை சோதிட உலகில் உள்ளது. அதுவும் குறிப்பாக, இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை, அந்த கோள் சோதிடக் கட்டத்தில் எங்கு நகர்கிறது என்பதை, சற்றே கவலையுடன் காணும் போக்கும் காணப்படுகிறது. அந்தக் கோளின் பெயரை சற்று வலிமையாக உச்சரிக்கவும் தயங்கும் நிலையும் இருக்கிறது. பொதுவாக மறைவு இடம் எனப்படும் எட்டாம் இடத்தில் எந்தக் கோளும் இருக்கக் கூடாது என்றாலும், அந்தக் கோள் மட்டும் எட்டாம் இடத்தில் இருப்பது சிறப்பு எனும் போக்கும் காணப்படுகிறது, ஏனெனில் அது எட்டில் இருந்தால், அந்த சாதகருக்கு நீண்ட ஆயுள் என கணிக்கப்படுகிறது. அந்தக் கோளின் பெயர் ‘சனி’. சோதிடத்தில் சனியின் பொதுவான சோதிட வரையறையைக் காண்பதற்குமுன் அதன் வானியல் தன்மைகளைக் காண்போம்.

            சூரியக்குடும்பத்தின் கோள்களின் வரிசையில் ஆறாவது கோளும் இரண்டாவது பெரிய கோளும் சனியாகும். இது ஒரு வாயுக்கோளாகும். சூரியனிலிருந்து 143 கோடி கி,மீ. தூரத்தில் உள்ளது. இது தன்னைத்தானே சுற்றிக் கொள்ள 10 மணி 45 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது. சூரியனை மிகப் பொறுமையாக 29.45 ஆண்டுகளில் சுற்றி வருகிறதுசூரியனிடமிருந்து மிக அதிகத் தூரத்தில் சனி இருப்பதால் சூரியனின் வெப்பத்தாக்கம் மிகவும் குறைவு என்பதால், இது பனிக் கோள் என அழைக்கப்படுகிறது. சனியை இரவு நேரத்தில் வெறுங்கண்ணாலும் பார்க்க முடியும். இது வியாழன் போல் வெளிச்சமாக காணப்படுவதில்லை என்றாலும், இதனை எளிதில் அடையாளம் காணமுடியும். சனி அடர்த்தி மிகவும் குறைவானக் கோள். வியாழனைப் போலவே, சனியும் 75% ஹைட்ரஜனும், 25% ஹீலியமும், அதில் தண்ணீர், மீத்தேன், அமோனியம் மற்றும் பாறைத்துகள்கள் கொண்டது. இதன் உட்கூடானது, இரும்பு, நிக்கல் மற்றும் பாறைக் குழம்புகளைக் கொண்டது. திரவ ஹைட்ரஜனும், ஹீலியமும் சூழ்ந்த நிலையில் உள்ளக் கோள்.

சனி கருப்பு என்று சொன்னாலும், உண்மையில், மேற்புறம் வெளிர் மஞ்சள் நிறம் கொண்டது. காரணம், அமோனியப் படிவம் பரவியுள்ளதால் இந்த நிறம். அழகு மிகுந்த ஏழு வளையங்கள் சனியைச் சுற்றி வருகின்றன. வளையங்கள் போல் தோன்றினாலும், அவை எண்ணில் அடங்கா சிறுத் துணுக்குகளைக் கொண்ட நீள் வட்ட வடிவில் சுற்றி வருபவையே ஆகும். துணுக்குகள் என்றாலும் அவை சில கிலோ மீட்டர் நீளம் கொண்டவைகளும் உள்ளடங்கியதே. பூமியிலிருந்து சனியின் வளையங்களில் மூன்றினைத் தொலைநோக்கியால் காணமுடியும்.          சனிக்கு 53 துணைக்கோள்கள் அதாவது சந்திரன்கள் உள்ளன. சனி வாயு நிலையில் இருந்தாலும், அதன் சந்திரன்களில் சில திட நிலையில் இருப்பதால், உயிர் வாழும் சாத்தியக்கூறுகள் ஆராயப்படுகின்றன.

மற்ற வாயுக்கோள்களைப் போலவே, சனியும் காந்தப்புலம் கொண்டது. ஆனால் சனியின் காந்தப்புலத்தின் வீச்சு அதிகம். வியக்க வைக்கும் உண்மை என்னவெனில், அண்ட வெளியில், சூரியனிடமிருந்து தான் பெறும் கதிவீச்சினைக் காட்டிலும் அதிகமாகவே தமது கதிர் வீச்சினை விண்ணில் செலுத்துகிறது.

            இனி சனியின் பொதுவான சோதிட வரையறைகளைக் காண்போம்.

ஆயுள்

மரணம்

நோய்

உடற்குறைபாடு

தொழில்

அடிமை

சோம்பல் (அ) தாமதம்

சிந்தனை

பயம்

மற்றும் இவற்றின் நீட்சிகள்

இங்கு சனியின் சோதிட குணநலன்களில், மிக முக்கியமானது ஆயுள் எனப்படும் உயிர்வாழ்நாட்கள். எனவே உயிர்வாழ்நாட்கள் எனும்போது அதனுடன் தொடர்புடைய மரணமும்; மரணம் எனும்போது அதனுடன் தொடர்புடைய நோயும், பயமும் ஒன்றினைந்து கொள்கின்றன. சனியானது, நமது சூரியக்குடும்பத்தில் (யுரோனஸ், நெப்டியூன் தவிர்த்து) கடைசியாக உள்ள கோள். பன்னெடுங்காலத்திற்கு முன்பே நமது முன்னோர்களால் அறிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. நமது பூமியிலிருந்தும் வெகு தொலைவில் உள்ள கோள். சனியின் காந்தப்புலத்தின் வீச்சு அதிகம். அண்ட வெளியில், சூரியனிடமிருந்து அது பெறும் கதிவீச்சினைக் காட்டிலும் அதிகமாகவே தமது கதிர் வீச்சினை விண்ணில் செலுத்துகிறது என அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். அந்த கதிர்வீச்சின் தாக்கம் நிச்சயம் பூமியின் மீதும், அதில் வாழும் உயிரினங்கள் மீதும் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. அடுத்து சனியானது, மற்ற கோள்களைக் காட்டிலும் சூரியனைச் சுற்றிவர எடுத்துக் கொள்ளும் கால அளவும் அதிகம். இவைகளைக் கணக்கில் கொண்டே, ஆயுள் மற்றும் மரணத்திற்கு சனியினைக் காரகனாகக் கொண்டிருக்க வேண்டும். சனியானது, சூரியனைச் சுற்றிவரும் காலம் அதிகம் என்பதால், தாமதம் அல்லது மந்தனம் எனும் காரகமும் அதற்கு கொடுக்கப்பட்டிருக்கலாம். சிந்தனையும் பயமும், இந்த தாமதத்துடன் தொடர்புபடுத்தும்போது, எதிலும் முடிவெடுப்பதில் தாமதம் எனும் காரகமும் கொடுக்கப்பட்டிருக்கலாம். உடற்குறைபாடு என்பது, தாமதத்துடன் தொடர்புடையதால் அதுவும் காரகமாக இருக்கிறது.

சனியின் மிக முக்கியக் காரகத்தில், தொழிலும், அடிமைத்தனமும் இருக்கிறது. இவை இரண்டினையும் இணைத்து, அடிமைத் தொழிலுக்கு சனி காரகன் எனும் கோட்பாடும் உருவாகியிருக்கலாம். ஆனால் சனியானது தொழிலுக்கு எவ்வாறு காரணப்படுத்த முடியும் என்பதில் தர்க்க முறையில் நிரூபிக்க முடியவில்லை. அதே வேளையில், சோதிடக் கணிப்பில் அது முற்றிலும் பொருந்திவருவதையும் மறுப்பதற்கில்லை.

பொதுவாக, கோள்களின் சோதிட வரையறையினை, ‘இருக்கலாம்’ எனும் கோட்பாட்டின் அடிப்படையிலேயே வரையறை செய்ய வேண்டியுள்ளது. அதே வேளையில், அந்த வரையறைகள், சோதிட கணிப்பில் பெருமளவு பொருந்திவருவதையும் நாம் மறுப்பதற்கில்லை. அதுவே, இங்கு சனியின் சோதிட வரையறைக்கும் ஒப்பீடு செய்ய எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.



அடுத்து…. இராகுவும் கேதுவும் – சோதிட வரையறை


No comments: